பெர்கமு சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:
பெர்கமு
இன்றைக்கு 3வது சபையான பெர்கமு சபை குறித்து தியானிக்கலாம்
பெர்கமு
(வெளிப்படுத்தல்: 2:12-17)
(இராஜாங்க சபை - கி.பி.313-476)
'பெர்கமு' என்றால் 'கல்யாணம்' என்று பொருள்படும்.
பெர்கமு பட்டணம்:
இது எபேசு பட்டணத்தின் வடகிழக்கில் சுமார் 50 மைல் தூரத்தில் உள்ளது. ரோமர்
ஆட்சியில் இது ஆசியாவின் தலைநகராய் இருந்தது. இன்றுள்ள லண்டன், பாரீஸ்,
பெர்லின் ஆகிய பட்டணங்கள் போல அன்றுள்ள பெர்கமு மிக பிரபலமான பட்டணமாய்
இருந்தது. அன்றிருந்த நூலக சாலைகளில் மிகப் பெரிய நூலக சாலை பெர்கமுவில்
இருந்தது. கைகளினால் எழுதப்பட்ட அந்நாட்களிலும் இரண்டு லட்சத்திற்கும்
அதிகமான புத்தகங்கள் இந்நூலக சாலையில் இருந்தன. "பார்ச்சுமெண்ட்" (தோல் சுருள்) அக்காலத்தில் எழுத உபயோகிக்கப்பட்ட பொருள். இதை முதலில் பெர்கமுவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இது விக்கிரக ஆலயங்களுக்கும் பிரசித்தி பெற்றதாயிருந்தது. 'அஸ்குலாபியஸ்'
என்ற கடவுள் 'ஆரோக்கியத்தின் கடவுள்' என்று போற்றப்பட்டு வந்தது.
இக்கடவுளின் சின்னம் சர்ப்பம். வியாதியுள்ளவர்கள் இக் கோவிலுக்குள்போய் ஒரு
நாள் இரவு தங்குவார்கள். இக்கோவிலுக்குள் விஷமற்ற சர்ப்பங்கள் ஏராளம்
இருந்தன. வியாதியஸ்தர்கள் இங்கு படுத்திருக்கும்போது, இப் பாம்புகள்
ஊர்ந்து சென்று யார் யாரைத் தொடுகிறதோ அவர்கள் எல்லோருக்கும் சுகம்
கிடைக்கும் என்று நம்பினர். இப்பட்டணத்தில் ஜீயஸ், அத்தேனே, ஜீப்பிட்டர்,
வீனஸ், அப்பல்லோ ஆகிய தேவதைகளின் கோவில்கள் இருந்தன. கோவில்களில் ரோம
சக்ரவர்த்தியின் சிலைகளை ஜனங்கள் வணங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். தற்போது
இப் பட்டணம் இருந்த இடத்தில் பெர்கமா என்ற சிறு பட்டணம் இருக்கிறது. இது
துருக்கி நாட்டில் இருக்கிறது.
பெர்கமு சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராய் வெளிப்படுகிறார். ரோம
சக்கரவர்த்திகளை வணங்காத கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். எனவே,
கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு தண்டனையும், உண்மை
கிறிஸ்தவர்களுக்கு வெற்றியும் கொடுக்கிறவராக காட்சி அளிக்கிறார். "பட்டயம்" தேவ
வசனத்தை குறிக்கும். (எபிரேயர்: 4:12; எபேசியர்: 6:12). இப்பட்டயம்
பரிசுத்தவானுக்கு சுத்திகரிக்கும் கருவியாகவும், துன்மார்க்கனுக்கு
சங்கரிக்கும் பட்டயமாகவும் இருக்கிறது.
அ) நற்குணங்கள்:
1. நற்கிரியை
2. கர்த்தரின் நாமத்தை பற்றிக் கொண்டிருத்தல்
3. உபத்திரவத்தின் நாட்களிலும் விசுவாசத்தை மறுதலியாமலிருத்தல்
ஆ) தீய குணங்கள்:
1. பிலேயாமின் போதகம் (பாபிலோனிய மந்திரவாதி)
2. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம்
பிலேயாமின் போதனை: வெளிப்படுத்தல்: 2:16.
(எண்ணாகமம்: 25:1-3; 31:16; 2பேதுரு: 2:14,15; யு+தா:11 வசனம்) இஸ்ரவேலரை
விக்கிரக ஆராதனையிலும், விபசாரத்திலும் ஈடுபடுத்துவதற்கான வழிகளை
செய்யும்படி பிலேயாம் பாலாக்கிற்கு போதகம் பண்ணினான்.
அந்திப்பா: வெளிப்படுத்தல்: 2:13
இவன் பெர்கமு சபையில் முதல் இரத்தசாட்சியாக மரித்தவன். ரோம
சக்கரவர்த்தியின் சிலைக்கு ஒவ்வொரு பிரஜையும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும்
தூபம்போட்டு அதற்குரியதான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், அந்திப்பா என்பவன், "நான் இயேசு கிறிஸ்துவின் பிரஜை. ஆகவே, சிலைக்கு தூபம் காட்ட முடியாது"
என்று கூறியபடியால் அவனை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டனர். இவ்விதமாக
அந்திப்பா இயேசுவுக்கு இரத்தசாட்சியானான். ஆகிலும், இச்சபையினர்
கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருந்தனர்.
சாத்தானுடைய சிங்காசனம்: வெளிப்படுத்தல்: 2:13
பெர்கமு ஆசியாவின் தலைநகராகவும் சக்கரவர்த்தியின் சிலை இருந்த இடமாகவும்
இருந்தபடியால் - இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. மேலும், ஆஸ்குலாபியஸ் என்ற
கடவுளின் சின்னம் சர்ப்பமாக இருந்தபடியினாலும், இதுவும் சாத்தானைக்
குறிப்பிடுவதாக இருந்தது.
ஆலோசனை: வெளிப்படுத்தல்: 2:16
தீயபோதனைகளைவிட்டு மனந்திரும்பி, பாவி மட்டுமல்ல சபையும் மனம் திரும்ப
வேண்டியிருக்கிறது. பாவி தன் பாவத்தினின்றும், சபை தன் தீய போதனையினின்றும்
மனந்திரும்ப வேண்டும்.
ஜெயம்கொள்ளுகிறவனுக்குரிய வாக்குத்தத்தம்: மறைவான மன்னா:(2:17)
இஸ்ரவேலர் வனாந்திரத்தில் வானத்திலிருந்து வந்த மன்னாவை புசித்தார்கள். இது
தேவதூதனின் அப்பம். அதுபோல, கிறிஸ்தவ ஜீவியத்தில் வெற்றி
பெறுகிறவர்களுக்கு ஆவிக்குரிய ஆகாரமாகிய தேவாசீர்வாதங்களை
பரலோகத்திலிருந்து பொழிந்தருள்வார்.
வெண்மையான குறிக்கல்:
கிரேக்க பந்தயங்களில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வெகுமதி அளிக்குமுன் ஒரு
வெள்ளைக்கல்லில் அதைக் குறித்துக் கொடுப்பார்கள். கிடைக்கப்போகும்
வெகுமதிக்கு இது ஒரு உறுதிப் பொருளாகும்.
புதிய நாமம்:
அந்நாட்களில் உணர் பதவிக்கு வருகிறவர்களுக்கு புதிய பெயர் கொடுப்பது
வழக்கம். அதுபோல் ஆவிக்குரிய ஜீவியத்தில் வெற்றி பெறுகிறவனுக்கு, அந்த
நாமத்தைப் பெறுகிறவனுக்கேயன்றி வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம்
கொடுக்கப்படும். அதாவது, தேவன் அருளும் புதிய நிலையின் மகிமையை அதை
அனுபவிக்கிறவனேயன்றி வேறொருவனுக்கும் தெரியாது.
Comments
Post a Comment