பாதாளத்தின் திறவுகோலை இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து பெற்றாரா?
பாதாளத்தின் திறவுகோலை இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து பெற்றாரா?
பின்னூட்டம்:"அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ எழும்பி வரபண்ணினது சாமுவேலே. காரணம் இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடு எழும்பும் வரை மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோல் சாத்தானிடமே இருந்தது. இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து அந்த திறவுகோலை பிசாசிடமிருந்து பறித்துகொண்டார். இப்போது அந்த திறவுகோல் இயேசுவிடம் இருக்கிறது. மட்டுமல்ல இயேசுவின் மரணத்துக்கு முன்பு வரை பரதீசு பாதாளத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஆபிரகாமுடைய மடியிலிருந்த லாசருவை ஐஸ்வரியவான் பார்க்கமுடிந்தது. அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் பிளப்பு மட்டுமே இருந்தது. ஆனால் அவர்களை இவர்களும், இவர்களை அவர்களும் பார்க்க முடிந்தது. கிறிஸ்துவினுடைய மரணத்திற்கு முன்பு மரணத்திற்கும் பாதாளதிற்குமுரிய திறவுகோல் பிசாசிடம் இருந்த படியால் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சொன்னவுடன் பிசாசு போய் சாமுவேலை கூட்டிகொண்டுவந்தான்." என்று ஒருவர் சொன்ன கருத்துக்கு பதில்
விளக்கம்:
இயேசு பிசாசிடம் இருந்து திறவுகோல்களை (keys) பெற்றதாக வேதாகமத்தில் எங்கேயும் இல்லையே!
இங்கே "சாவி" என்பது ஒரு உலோகத்தால் (Metal) செய்யப்பட்டது என்று அர்த்தமல்ல. அதிகாரம் (authority/power) என்று பொருள். சரீர மரணமானது பாதாளத்திற்கு அல்லது பரதீசுக்கு செல்லும் மறைவான வாசல் (portal) என்று சொல்லலாம். ஆத்துமாவின் மரணம் என்பது நரகத்திற்கு செல்லும் இரண்டாம் மரணம் எனப்படும். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்" என்று வாசிக்கிறோம். இங்கே சொல்லப்பட்டுள்ள மரணத்துக்கு அதிகாரிதான் பிசாசு. அதாவது பாவத்தில் ஜீவிப்பவர்களுக்கு அதிகாரி. எனவே வேதாகமத்தில் சில கூறப்பட்டிருக்கும் இடங்களில் மரணம் என்னும் வார்த்தையை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
வெளி 1:18ல் மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய (Hades) திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."
பிசாசு ஆதாமிடமிருந்து சாவியைப் பெற்றான் என்று சிலர் சொல்லுகின்றார்கள். இதுவும் விநோதமாக இருக்கின்றது. ஆதாமுக்கு அந்தச் சாவியை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் பாவம் செய்ததினால் பாவம் மற்றும் மரணத்தை இந்த பூமிக்கு வரப்பண்ணினர். (ரோமர் 5).இயேசு பிசாசை பாதளத்துக்குச் சென்று ஜெயித்து சாவியை பெற்றார் என்றும் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.
இன்னொரு ஆச்சரியமான விஷயம், "இயேசு பிசாசை சிலுவையிலே ஜெயித்தார்" என்று வார்த்தைக்கு வார்த்தை சரியாக வேதத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் இப்படியாக இரண்டு வசனங்களை வாசிக்கிறோம்:
கொலோ 2:13-15 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
எபி 2:14, 15 . ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
மேலே "சிலுவையிலே வெற்றிசிறந்தார்" என்றும் " பிசாசானவனை அழிக்கும்படிக்கும்" என்று வாசிக்கிறோம். "மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசு என்பதில்" 'மரணம்' என்றால் பாவத்தில் கிடக்கும் அனுபவமாகும். ஏனெனில் எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். எபேசியர் 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். என்று வாசிக்கிறோம்.
சரீரத்தில் மரிப்பவர்கள் எங்கே செல்லுகின்றார்கள்?
பரதீசுக்கோ (Paradise), பாதாளத்திற்கோ (Hades) செல்கின்றார்கள் என்று ஆபிரகாம்-லாசரு என்னும் சம்பவத்தை இயேசு சொல்லும் (லூக்கா 16:19-31) பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப்பின் அக்கினிக் கடல் (Lake of fire) , பரலோகம் (Heaven) என்று செல்லும் இடங்களிலிருந்து இவை வேறுபட்டவை.
இயேசு உயிரோடிருக்கும்போதே சொன்னார்:
மத் 16:18 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் (Hades) வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை
"என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்". இது சிலுவைக்கு முன்பே கூறப்பட்டதாகும். எனவே ஆதிமுதல் அவர் திறவுகோல்களை வைத்திருந்தார். பிசாசிடம் இருந்து பறிக்கவில்லை.
சிலுவையில் அறையப்படும் வரைக்கும் பிசாசு சாவியை வைத்திருந்தான் என்று சொன்னால்...
- எலியா உயிர்ப்பித்த பிள்ளை (1 இரா 17:23)
- எலிசா உயிர்ப்பித்த மகன் (2 இரா 8:1)
- எலிசா சடலம் பட்டு உயிரடைந்த ஆள் ( 2 இரா 13:21)
- இயேசு உயிரோடு எழுப்பிய லாசரு
- இயேசு உயிரோடு எழுப்பிய யவீருவின் மகள்
- இயேசு உயிரோடு எழுப்பிய விதவையின் மகன்.
இவர்களை உயிரோடு கொண்டுவர போய் பிசாசிடம் சாவி வாங்கி வரப்பட்டதா? இல்லை.
உபாகமம் 32:39 நான் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறேன் என்று நாம் வாசிக்கிறோமே! எனவே தேவனுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு.
Comments
Post a Comment