ஆலயங்களில் பிரசங்க நேரத்தில் தூங்குவது இதற்கு யாரை குற்றம்சாட்டுவது? போதகரையா?

ஆலயங்களில் பிரசங்க நேரத்தில் தூங்குவது சிலருக்கு வழக்கமான ஒன்றாயிருக்கிறது. இதற்கு யாரை குற்றம்சாட்டுவது? போதகரையா? அல்லது தூங்குகிறவரையா? ஆனால் நாம் விளங்கிக்கொள்ளவேண்டிய ஒரு காரியம் பிரசங்க நேரத்தில் தூங்குவது நம்முடைய ஆவிக்குரிய குளிர்ந்துபோன உணர்வை காட்டுகிறது. போதகரும் தன்னுடைய சபை மக்களைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பிரசங்கங்களைச் செய்யாமல், உண்மையான கருத்தோடே பிரசங்கங்களை ஆயத்தப்படுத்தவேண்டும். உண்மையான பாரத்தோடும் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனையோடும் பிரசங்கங்களைச் செய்யவேண்டும். சில மக்கள் எவ்வளவுதான் பிரசங்க உணர்ச்சியோடே பிரசங்கித்தாலும் பிரசங்க நேரத்தில் தூங்குவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். பவுல் பிரசங்கித்தபோதே இந்த வாலிபன் அவ்விதம் மிகுந்த தூக்கமடைந்தான். பிரசங்கிகளும் நீண்ட பிரசங்கங்களை செய்யாதபடிக்கு கருத்தாய் இருக்கவேண்டும். ஆண்டவராகிய இயேசு அவருடைய வருகை வேளையில் எவ்விதம் காணப்படவேண்டும் என்று சொல்கிறார். 'அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில் வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து உங்களைத் தூங்குகிறவர்களாக கண்டுபிடியாதபடிக்கு கருத்தாய் இருக்கவேண்டும். ஆவிக்குரிய தூக்கம், உறக்கம் எல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் ஆபத்தானது. கெத்சமனே தோட்டத்தில் விழித்திருக்கவேண்டிய நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த சீஷர்களின் நிலை என்னவாயிற்று? எல்லோரும் சோதனைவேளையில் ஓடிபோனார்கள். 'ஆனால் தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிபிப்பாரென்று சொல்லியிருக்கிறார்' (எபேசியர் 5 : 14) இன்றைக்கு அநேகர் ஆவிக்குரிய தூக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் நீ எழும்பு. தேவன் உன்னை ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமான கருவியாக உபயோகப்படுத்துவார்

Comments