சிவந்த சமுத்திரத்தை அதட்டினார்

சிவந்த சமுத்திரத்தை அதட்டினார்
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். சங்கீதம் 106:9
அதட்டுதல் என்றால் கண்டித்தல் என்று பொருள். நம் அனைவருக்குமே பிறரை அதட்டுவதில் அலாதி பிரியம். நம் பிள்ளைகளை அதட்டுகிறோம். குடும்பத்தில் கணவன் மனைவியையும், மனைவி, கணவரையும் அதட்டுவார்கள். நாம் வாகனத்தில் செல்லும்போது, யாராவது தவறாக குறுக்கே வந்துவிட்டால் சத்தம் போடுவோம். இப்படியாய் மனிதர்கள் மனிதர்களை அதட்டிகொண்டிருக்கும் பொழுது, மனிதனுக்கு தடையாக எழும்பி நின்ற மூன்று காரியங்களை கர்த்தர் அதட்டியதாக வேதம் நமக்கு காண்பிக்கின்றது.
முதலாவதாக, இஸ்ரயேல் மக்களுக்கு தடையாக இருந்த சிவந்த சமுத்திரத்தை கர்த்தர் அதட்டினார். அவர் அதட்டினவுடனே அவருடைய சத்தத்திற்கு அத்தனை பெரிய சமுத்திரம் வற்றி போய் இஸ்ரவேலருக்கு வழியை விட்டது. தேவனுடைய வார்த்தையில் அதீத வல்லமை உள்ளது. மனிதர்கள் ஒரு வேலையை தங்களுடைய கைகளின் செயலினாலும், சிந்தையின் திட்டங்களினாலும் செய்து முடிகின்றார்கள். கர்த்தரோ தமது வார்த்தையினால் எல்லா உயிரினங்களையும் படைத்துள்ளார். இதை வாசிக்கின்ற உங்கள் வாழ்க்கையிலும் சிவந்த சமுத்திரத்தை போன்ற தடைகள் வந்து முன்னேற முடியாதபடி நிற்கின்றனவா? கர்த்தருடைய வார்த்தை வரும்படியாக ஜெபியுங்கள். அவருடைய ஒரு அதட்டுதல் பெரிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பன்னும் என்றால் உங்களுடைய வாழ்வின் தடைகள் மாறப் போவது நிச்சயம்.
இரண்டாவதாக, ஒரு நாள் இரவில் சீடர்கள் சென்று கொண்டிருந்த படகு அமிழத்தக்கதாக காற்று வீசி அலைமோதி கொண்டிருந்தபோது, அந்த படகில் இயேசுகிறிஸ்து இருந்தததினால், அவர்கள் இயேசுவிடம் தங்களை காப்பாற்றும் படியாக முறையிட்டார்கள். *அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று* (மத்தேயு 8:26). ஏன் பயப்படுகின்றீர்கள் என்று ஆதங்கத்தோடு சீடர்களிடம் கேட்ட இயேசு, அவர்களைப் பயப்படுத்திய அந்த காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. இதை வாசிக்கின்ற உங்கள் வாழ்க்கையிலும், அமைதி இல்லாதபடி, படகு நடுக்கடலில் புயலினால் அலைமோதி கொண்டிருப்பது போல தடுமாறி கொண்டிருக்கின்றீர்களா? இயேசுகிறிஸ்து உங்களுடைய வாழ்க்கை படகில் இருகின்றார். உங்களுக்கு எதிராக வீசுகின்ற காற்றையும், புயல் போன்ற பிரச்சனைகளையும் அவர் அமைதியாக்குவார். அன்றைக்கு சீடர்கள் பத்திரமாய் கரை சேர்ந்ததைப் போல உங்களையும் . நிச்சயமாய் கரை சேரப்பார்.
மூன்றாவதாக, இயேசுவோடு இருந்த சீடர்கள் அவரைப் போலவே பல அற்ப்புதங்கள் செய்தாலும் ஒரு முறை அவர்களால் ஒரு இளைஞனுக்குள் இருந்த பிசாசை துரத்த முடியவில்லை. அந்த இளைஞனின் தகப்பன் இயேசுவிடம் வந்து உம்முடைய சீடர்களால் பிசாசை துரத்த இயலவில்லை எனவும், நீர் தான் என் மகனுக்கு விடுதலை தர வேண்டும் என்றும் வேண்டினார். உடனே *இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்* (மத்தேயு 17:15-18). ஒரு வேளை பிசாசின் போராட்டத்தாலும், வியாதியின் பிடியிலும் உங்களுடைய வாழ்வு பாதிப்படைந்துள்ளதா? எந்த சத்துருவின் வல்லமையும் இயேசு கிறிஸ்துவின் அதட்டுகின்ற வல்லமையான வார்த்தைக்கு முன்னால் நிற்க முடியாது. கர்த்தருடைய வார்த்தை உங்கள் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும் வல்லமையுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கு எதிராக எழும்பும் தடைகளை அவர் அதட்டி உங்களுக்கு விடுதலையை தருவார்.

Comments