கதை 10: பெரிய ஜலப்பிரளயம்

கதை 10: பெரிய ஜலப்பிரளயம்

பேழைக்கு வெளியே, மக்கள் எப்போதும் போல் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். ஜலப்பிரளயம் வருமென்று அவர்கள் இன்னும் நம்பவில்லை. அதிகமதிகமாகத்தான் சிரித்தார்கள். ஆனால் சீக்கிரத்தில் அவர்களுடைய சிரிப்பெல்லாம் அடங்கிப்போனது.
பயந்துபோன மக்களையும் மிருகங்களையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது
திடீரென்று தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு பக்கெட்டிலிருந்து தண்ணீரை ஊற்றினால் எப்படியிருக்குமோ அதுபோல வானத்திலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டியது. நோவா சொன்னது போலவே நடந்தது! ஆனால் வேறு யாராலும் பேழைக்குள் செல்ல முடியவில்லை, காலம் மிகவும் பிந்திவிட்டது. ஆம், யெகோவா அந்தக் கதவை இறுக்கமாக அடைத்துவிட்டார்.
சீக்கிரத்தில் தாழ்ந்த நிலமெல்லாம் தண்ணீரில் மூழ்கிப்போனது. பெரிய ஆறுகளைப் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்தன. பெரிய பெரிய கற்கள்கூட தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அப்பொழுது பயங்கர சத்தம் உண்டானது. மக்கள் ரொம்பவும் பயந்துபோய், மேட்டுப் பகுதிகளில் உயர உயரமாக ஏறினார்கள். பேழையின் கதவு திறந்திருந்தபோதே நோவாவின் பேச்சைக் கேட்டு பேழைக்குள் செல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம், இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதே!
நீர்மட்டம் தொடர்ந்து அதிகமானது. இரவும் பகலுமாக 40 நாட்கள் தண்ணீர் வானத்திலிருந்து ஊற்றிக்கொண்டே இருந்தது. மலையோரங்களிலும் தண்ணீர் எழும்பிக்கொண்டே வந்தது. சீக்கிரத்தில் மிக உயரமான மலைகளைக்கூட தண்ணீர் மூடிவிட்டது. அதனால் கடவுள் சொல்லியிருந்தபடியே பேழைக்கு வெளியே இருந்த எல்லா மக்களும் மிருகங்களும் இறந்துபோனார்கள். ஆனால் உள்ளே இருந்த எல்லோரும் பத்திரமாய் இருந்தார்கள்.
நோவாவும் அவருடைய மகன்களும் அந்தப் பேழையை மிக அருமையாக கட்டியிருந்தார்கள். தண்ணீர் அந்தப் பேழையை மேலே எழுப்பியது, பிறகு அது தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. பிற்பாடு, ஒருநாள் மழை நின்றுபோனது, சூரியன் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆஹா, அது எப்பேர்ப்பட்ட காட்சியாக இருந்தது! சுற்றிவர ஒரு பெரிய கடலாகவே இருந்தது. அதன் மேல் மிதந்து கொண்டிருந்த பேழையைத் தவிர வேறு எதுவுமே கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
பேழை தண்ணீரின் மேல் மிதக்கிறது
இப்போது இராட்சதர்கள் இல்லை. இனியும் அவர்களால் மக்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. அவர்களும் அவர்களுடைய அம்மாக்களும் மற்ற எல்லாக் கெட்ட ஆட்களும் செத்து விட்டார்கள். ஆனால் அவர்களுடைய அப்பாக்கள் என்ன ஆனார்கள்?
அந்த இராட்சதர்களின் அப்பாக்கள் யார் என்று உனக்கு நினைவிருக்கிறதா? பரலோகத்திலிருந்து மனித ரூபத்தில் பூமிக்கு வந்திருந்த தூதர்களே அவர்கள். எனவே ஜலப்பிரளயம் வந்தபோது மற்ற எல்லா ஆட்களைப் போல அவர்கள் சாகவில்லை. தங்களுடைய மனித உடல்களை விட்டுவிட்டு, திரும்பவும் பரலோகத்துக்குச் சென்றார்கள். ஆனால் இனியும் தேவதூதர்களாக இருப்பதற்கு கடவுள் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே, அவர்கள் சாத்தானின் தூதர்களானார்கள். பைபிளில் அவர்கள் பிசாசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பின்னர் கடவுள் காற்று வீசும்படி செய்தார். அந்த மழை நீரெல்லாம் மெல்ல மெல்ல வற்றத் தொடங்கியது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்தப் பேழை ஒரு மலை உச்சியில் வந்து தங்கியது. இப்படியே பல நாட்கள் சென்றன. பேழைக்குள் இருந்தவர்களால் வெளியே உள்ள மலைகளின் உச்சிகளைப் பார்க்க முடிந்தது. தண்ணீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கியது.
பின்பு, ஒரு அண்டங்காக்கையை பேழைக்கு வெளியே நோவா பறக்க விட்டார். அது சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தது. ஏனென்றால் தங்குவதற்கு ஒரு நல்ல இடம் அதற்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அது இவ்வாறே செய்தது, அப்படி திரும்பிவந்த போதெல்லாம் அது பேழையின் மேல் வந்து உட்கார்ந்தது.
ஒரு புறா
பூமியிலிருந்து தண்ணீர் வடிந்து விட்டதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்காக நோவா அடுத்து ஒரு புறாவைப் பேழைக்கு வெளியே விட்டார். ஆனால் அந்தப் புறாவும் திரும்பி வந்தது. காரணம், தங்குவதற்கு ஒரு இடம்கூட அதற்குக் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நோவா அதை வெளியே அனுப்பியபோது ஓர் ஒலிவ இலையை அது கொத்திக்கொண்டு வந்தது. அதைப் பார்த்ததுமே தண்ணீர் இறங்கிவிட்டதென்று நோவாவுக்குப் புரிந்தது. மூன்றாவது தடவையாக அந்தப் புறாவை அனுப்பியபோது அது திரும்பி வரவேயில்லை. தங்குவதற்கு ஓர் உலர்ந்த இடத்தைக் கடைசியில் அது கண்டுபிடித்துவிட்டது.
கடவுள் இப்பொழுது நோவாவிடம் பேசினார்: ‘பேழையிலிருந்து இறங்கு. உன் குடும்பத்தையும் மிருகங்களையும் உன்னுடன் வெளியே அழைத்துக்கொண்டு போ’ என்று சொன்னார். ஒரு வருஷத்திற்கு மேலாக அவர்கள் அந்தப் பேழைக்குள் இருந்தார்கள். எனவே உயிரோடு இருப்பதையும் மறுபடியுமாக வெளியே வந்து வாழ்வதையும் நினைத்து அவர்கள் எல்லோரும் எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்கள்!
ஆதியாகமம் 7:10-24; 8:1-17; 1 பேதுரு 3:19, 20.


கேள்விகள்

  • மழை பெய்ய ஆரம்பித்த பிறகு பேழைக்குள் ஏன் யாராலும் செல்ல முடியவில்லை?
  • இரவும் பகலுமாக எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும்படி யெகோவா செய்தார், தண்ணீர் எவ்வளவு உயரம் எழும்பிக்கொண்டே வந்தது?
  • தண்ணீரால் பூமியே மூடப்பட்டபோது, அந்தப் பேழை என்ன ஆனது?
  • அந்த இராட்சதர்கள் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பித்தார்களா, அவர்களுடைய அப்பாக்கள் என்ன ஆனார்கள்?
  • ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்தப் பேழை எங்கே தங்கியது?
  • நோவா ஏன் ஒரு அண்டங்காக்காவைப் பேழைக்கு வெளியே விட்டார்?
  • தண்ணீர் இறங்கி விட்டதை நோவா எப்படித் தெரிந்து கொண்டார்?
  • நோவாவும் அவருடைய குடும்பமும் ஒரு வருஷத்திற்கு மேல் அந்தப் பேழையில் இருந்த பிறகு அவரிடம் கடவுள் என்ன சொன்னார்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 7:10-24-ஐ வாசி.(அ) பூமியில் உயிரோடிருந்த யாவும் எந்தளவுக்கு அழிந்துபோயின? (ஆதி. 7:23)
    (ஆ) மழை பெய்ய ஆரம்பித்தது முதல் பூமி காய்ந்துபோகும் வரைக்கும் எவ்வளவு காலம் எடுத்தது? (ஆதி. 7:11; 8:13, 14)
  • ஆதியாகமம் 8:1-17-ஐ வாசி.பூமியைக் குறித்ததில் யெகோவாவின் ஆதி நோக்கம் மாறவில்லை என்பதை ஆதியாகமம் 8:17 எப்படிக் காட்டுகிறது?
  • ஒன்று பேதுரு 3:19, 20-ஐ வாசி.(அ) கலகம் செய்த தூதர்கள் மீண்டும் பரலோகத்திற்குப் போனபோது, அவர்கள் என்ன நியாயத்தீர்ப்பைப் பெற்றார்கள்? (யூ. 6)
    (ஆ) நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் பற்றிய சம்பவம், யெகோவாவால் தம் மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நமது நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது? (2 பே. 2:9)

Comments