ஆபிரகாமையும் அவர் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார் - பகுதி 5

ஈசாக்கு பலிபீடத்தின்மேல் படுத்திருக்கிறார், ஆபிரகாம் தன் கையில் கத்தியைப் பிடித்திருக்கிறார்
 பகுதி 5

ஆபிரகாமையும் அவர் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார்

ஆபிரகாமின் சந்ததி செழித்தோங்குகிறது. எகிப்தில் யோசேப்பைக் கடவுள் காப்பாற்றுகிறார்
தமது நேசத்திற்கும் பாசத்திற்குமுரியவர் பாடுகள்பட்டு ஒருநாள் சாவார் என்பதை யெகோவா அறிந்திருந்தார். இந்த விஷயத்தை ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனம் மறைமுகமாகக் குறிப்பிட்டது. பாசத்திற்குரியவரைப் பறிகொடுப்பது தமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை மனிதருக்குக் கடவுளால் உணர்த்த முடியுமா? பைபிளில் பதிவாகியுள்ள ஆபிரகாம்-ஈசாக்கின் உதாரணத்தைக் கவனியுங்கள். தனது நேச மகன் ஈசாக்கை பலி கொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் கேட்டார்.
ஆபிரகாமுக்குக் கடவுள்மீது அபார நம்பிக்கை இருந்தது. முன்னறிவிக்கப்பட்ட இரட்சகர், அதாவது வாரிசு, ஈசாக்கின் சந்ததியில் வருவார் என்று கடவுள் அவரிடம் வாக்குறுதி கொடுத்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தேவைப்பட்டால் ஈசாக்கை கடவுள் உயிர்ப்பிப்பார் என்ற நம்பிக்கையோடு, ஆபிரகாம் தன் சொந்த மகனை பலி கொடுக்க தயாரானார். ஆனால், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் சரியான சமயத்தில் ஆபிரகாமைத் தடுத்தார். உயிருக்கு உயிரான மகனையே பலிகொடுக்க ஆபிரகாம் முன்வந்ததால் கடவுள் அவரைப் பாராட்டினார். அதனால், அவருக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பிற்காலத்தில், ஈசாக்கிற்கு ஏசா, யாக்கோபு என்று இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஏசாவைப் போலின்றி, யாக்கோபு ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்; அதற்குத் தக்க பலனையும் பெற்றார். யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று கடவுள் மாற்றினார். அவருடைய 12 மகன்களே இஸ்ரவேல் தேசத்தின் 12 கோத்திரத்திற்கும் தலைவர்கள் ஆனார்கள். ஆனால், அந்தக் குடும்பம் எப்படிப் பெரிய தேசமாக ஆனது?
யாக்கோபின் மகன்களில் அநேகருக்குத் தங்களுடைய தம்பி யோசேப்புமீது பொறாமை ஏற்பட்டது; அதன்பின் சங்கிலித்தொடர் போல் பல சம்பவங்கள் நடந்தன. அவர்கள் யோசேப்பை ஓர் அடிமையாக விற்றுப்போட்டார்கள், பின்பு அவர் எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், கடவுள்பக்தியும் தைரியமும் மிக்க யோசேப்பை யெகோவா ஆசீர்வதித்தார். யோசேப்பு பல கஷ்டங்களைச் சந்தித்தபோதிலும், காலப்போக்கில் எகிப்து ராஜாவின் மதிப்பைச் சம்பாதித்து பெரும் அதிகாரத்தைப் பெற்றார். அந்த அதிகாரம் அவருக்குத் தக்க தருணத்தில் கிடைத்தது; ஏனெனில், பஞ்சகாலத்தில் உணவு வாங்கிவரச் சொல்லி யாக்கோபு தனது மகன்களில் சிலரை எகிப்திற்கு அனுப்பியபோது, அங்கே யோசேப்பு உணவு மந்திரியாக இருந்தார்! நல்லவர்களாக மாறியிருந்த தன் அண்ணன்மார்களை யோசேப்பு மன்னித்து ஏற்றுக்கொண்டது நெஞ்சை உருக்கும் சம்பவம்! பின்பு, முழுக் குடும்பமும் எகிப்திற்கு வந்துசேர யோசேப்பு ஏற்பாடு செய்தார். எகிப்தில் மிகவும் வளமான இடம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது; அங்கே அவர்கள் பல்கிப் பெருகி, செழித்தோங்கினார்கள். கடவுள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இப்படியெல்லாம் நடக்கும்படி அனுமதித்தார் என்பதை யோசேப்பு புரிந்துகொண்டார்.
யோசேப்பு தான் யாரென்று தன் சகோதரர்களுக்குச் சொல்கிறார்
வயதான யாக்கோபு தன் சொந்தபந்தங்களுடன் ஆயுள் முழுக்க எகிப்திலேயே வாழ்ந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, வாக்குப்பண்ணப்பட்ட வாரிசு, அதாவது இரட்சகர், தனது மகன் யூதாவின் வம்சத்தில் பிறப்பார் என்றும், அவர் வலிமைமிக்க அரசராக இருப்பார் என்றும் கூறினார். பின்னர், யோசேப்பு தான் இறப்பதற்கு முன்பு, கடவுள் ஒருநாள் யாக்கோபின் குடும்பத்தை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவார் என்று சொன்னார்.
—ஆதாரம்: ஆதியாகமம் 20–50 அதிகாரங்கள்; எபிரெயர் 11:17-22.

Comments