பகுதி 2: ஜலப்பிரளயம் முதல் எகிப்திலிருந்து விடுதலை வரை
பகுதி 2: ஜலப்பிரளயம் முதல் எகிப்திலிருந்து விடுதலை வரை
ஜலப்பிரளயத்திலிருந்து எட்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் ஆயிரக்கணக்கில் பெருகினார்கள். ஜலப்பிரளயத்திற்குப் பின் 352 வருஷம் கழித்து ஆபிரகாம் பிறந்தார். ஈசாக்கு எனும் பெயருள்ள ஒரு மகனை அவருக்கு கடவுள் கொடுத்தார்; அதன் மூலம் கடவுள் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். அதற்குப் பின், ஈசாக்கின் இரண்டு மகன்களில் யாக்கோபுவைக் கடவுள் தேர்ந்தெடுத்தார்.
யாக்கோபுவின் குடும்பம் பெரியது; அவருக்கு 12 மகன்களும் சில மகள்களும் இருந்தார்கள். யாக்கோபின் மூத்த மகன்கள் 10 பேரும் தங்கள் தம்பி யோசேப்பை வெறுத்தார்கள், அதனால் எகிப்து தேசத்தில் ஓர் அடிமையாக அவரை விற்றுப்போட்டார்கள். பிறகு, யோசேப்பு எகிப்தில் ஒரு முக்கிய அதிகாரியாக ஆனார். பயங்கரமான ஒரு பஞ்சம் ஏற்பட்டபோது, தன் அண்ணன்மார் மனம் மாறியிருக்கிறார்களா என்பதை அவர் சோதித்துப் பார்த்தார். கடைசியாக, யாக்கோபின் குடும்பம் முழுவதும், அதாவது இஸ்ரவேலர் எல்லோரும் எகிப்துக்குக் குடிமாறினார்கள். இந்தச் சம்பவம் ஆபிரகாம் பிறந்து 290 வருஷங்களுக்குப் பிறகு நடந்தது.
அடுத்த 215 வருஷங்களுக்கு இஸ்ரவேலர் எகிப்தில் வாழ்ந்தார்கள். யோசேப்பு இறந்த பிறகு அவர்கள் அங்கு அடிமைகளாக ஆனார்கள். சில காலத்திற்கு பிறகு மோசே பிறந்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க கடவுள் அவரைப் பயன்படுத்தினார். ஆக மொத்தம் 857 வருஷ சரித்திரத்தை பகுதி இரண்டில் வாசிப்போம்.
Comments
Post a Comment