இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றிய பின்னணி

இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றிய பின்னணி 

இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களின் ஒருவரான தோமா இந்தியாவிற்கு வந்தது முதல் இந்தியாவில் கிறிஸ்தவம் ஆரம்பமானது. கி.பி.52 ல் கேரளாவிலுள்ள மலபார் கடற்கரையில் தோமா வந்து இறங்கினார் என பாரம்பரியம் கூறுகிறது. அந்த பகுதியில் 7 சபைகளை நிறுவி, அந்த சபைகளுக்கு மூப்பர்களை நியமித்தார். பின்பு, கிழக்குக் கடற்கரை பகுதிக்கு வந்து அங்கேயும் சில சபைகளை நிறுவினார். தற்போதுள்ள சென்னை பகுதியில் அவர் ஊழியம் செய்த நாட்களில், அவர் மேல் பொறாமை கொண்ட பிராமணர்கள் ஈட்டியால் குத்தி தோமாவை கொன்றனர். அந்த இடம் இன்று "தோமா மலை" (St.Thomas Mount) என்று அழைக்கப்படுகிறது. அவருடைய சரீரம் சென்னையிலுள்ள மைலாப்புரில் அடக்கம் பண்ணப்பட்டது. 

கி.பி.325 ல் நீசியாவில் நடைபெற்ற சபையின் ஆலோசனை சங்கத்தின் கூட்டத்தில் பெர்சியா - இந்தியா சபைகளின் பிரதிநிதியாக பிஷப் ஜான் என்பவர் கலந்து கொண்டதாக சபை சரித்திரம் கூறுகிறது. இந்தியாவில் ஆரம்பமான கிறிஸ்தவம் தேவ வல்லமையுடன் செயல்படாமல் மந்த நிலையிலேயே இயங்கி வந்தது. அதற்கான முக்கியக் காரணம், இந்து மதத்தின் பழக்கவழக்கங்களை சபையும் கைக் கொண்டது எனக் கூறப்படுகிறது. 6 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த "காஸ்மோஸ்" (Cosmos) என்ற துறவியும் (அலெக்சாண்டிரியா), 13 ம் நூற்றாண்டில் உலகம் சுற்ற வந்த "மார்க்கோபோலோ"வும் இந்தியாவிலிருந்த கிறிஸ்தவ சபைகளைப் பற்றி தங்கள் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

இந்திய சபைகளுக்கான பிஷப்மார்களை அந்தியோகியா சபைத்தலைவர்தான் தெரிந்தெடுத்து நியமித்தார். இந்திய திருச்சபைகள் சிரியாவின் மேற் பார்வையில் இருந்தன. கேரளாவின் மலபார் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு கூட்டம் தங்களை "சிரியன் கிறிஸ்தவர்கள்" (Syrian Christians) என்று இன்றும் அழைக்கின்றனர்.

இந்தியாவில் மேற்கத்திய மிஷனரிகளின் பணி:

16 ம் நூற்றாண்டில்தான் மேற்கத்திய மிஷனரிகள் இந்தியாவிற்கு வர ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள அநேகர் எண்ணுகின்றபடி மேற்கத்திய நாடுகளிலுள்ள வெள்ளைக்காரர்கள் இந்தியாவிற்கு முதன் முதல் கிறிஸ்தவத்தைக் கொண்டு வந்தார்கள் என்பது உண்மையல்ல. 15 நூற்றாண்டுகள் எந்த வெள்ளைக்காரரும் இந்தியாவிற்கு வந்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவில்லை.

போர்ச்சுக்கல் மிஷனரிகள் (ரோமன் கத்தோலிக்க சபை): 

16 ம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக போர்ச்சுகல் நாட்டிலிருந்து  வந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரி 'பிரான்சிஸ் சேவியர்' தன் ஊழியத்தை இந்தியாவில் ஆரம்பித்தார். ரோமன் கத்தோலிக்க சபைகள் இந்தியாவில் ஆரம்பமாயின. குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பறவர்கள், முக்கவர்கள் மத்தியில் சபைகளை நிறுவினர். இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள். இந்த மக்கள் மத்தியிலே நிறுவின சபைகளுக்கு ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் கட்ட உதவினர்.
இதைத் தொடர்ந்து, டச் (ஜெர்மனி) டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் வர ஆரம்பித்தனர். இவர்களுடைய முக்கிய நோக்கம் வியாபாரம். அநேகர் எண்ணுவது போல இவர்கள் மதப் பிரச்சாரம் செய்ய வரவில்லை. இவர்களைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க போதகர்கள் இந்தியாவிற்கு வந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். பிரிட்டனிலிருந்து கிழக்கு இந்திய கம்பனி வியாபாரிகள் இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் பல இடங்களிலே தொழில் செய்வதற்காக பல காலணிகளை ஏற்படுத்தினர். இவர்களில் யாருக்கும் மிஷனரிப் பணியில் ஆர்வமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருந்த இடங்களுக்கு அருகில் ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் தங்கள் மிஷனரி சேவையை ஆரம்பித்து நடத்தினர்.

புராட்டஸ்டண்ட் சபை:  
சீகன்பால்க்

18 ம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக புராட்டஸ்டண்ட் மிஷனரிகள் இந்தியாவிற்கு வர ஆரம்பித்தனர். டென்மார்க் அரசரான "நான்காம் பிரட்ரிக்" (Fredrick IV) இரண்டு  ஜெர்மனி வாலிபர்களை மிஷனரிகளாக தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடிக்கு அனுப்பினார். அவர்கள்தான் "சீகன்பால்க்", "புளுட்சோ". சீகன்பால்க் பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தார். இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிறிஸ்தவம் தோன்றி 17 நூற்றாண்டுகளில், பரிசுத்த வேதாகமம் இந்தியாவில் ஒரு மொழியிலும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை.

வில்லியம்கேரி (1761 - 1834 - இங்கிலாந்து): 
'நவீனகால மிஷனரி ஊழியங்களின் தந்தை' என்று அழைக்கப்படுகிற 'வில்லியம்கேரி' இந்தியாவிற்கு வந்து கல்கத்தாவிலுள்ள செராம்புர்  என்ற பகுதியை தன் இருப்பிடமாகக் கொண்டு  ஊழியத்தை ஆரம்பித்தார். இவர் வேதாகமத்தை சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்த்தார். 16 ம் நூற்றாண்டு வரை இந்திய திருச்சபையில் எந்த ஒரு மேற்கத்திய நாடும் ஆதிக்கம் கொள்ளவில்லை. போர்ச்சுகீசியரான ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் மலபாரில் ஊழியம் செய்ய ஆரம்பித்த பின்பு அங்கிருந்த சிரியன் கிறிஸ்தவர்களை ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்ற 1599 ல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், 1653 ல் ரோமன் கத்தோலிக்க உபதேசம், பழக்கவழக்கங்களையும் ஏற்றுக் கொள்ள பலர் மறுத்தனர். இதன் பலனாக மூன்றில் ஒரு பங்கு சபைகள் தங்கள் பழைய அழைப்பான "சிரியன் கிறிஸ்தவர்கள்" என்ற முன்நிலைக்கு திரும்பி வந்து விட்டனர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி:
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து பல மிஷனரி இயக்கங்கள் இந்தியாவிற்கு வர ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிஷனரிகளை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து லண்டன் மிஷனரி சொசைட்டி (LMS) , சர்ச் மிஷனரி சொசைட்டி (CMS) , பாசல் மிஷன்ஸ் (Basel Missions) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 சிரியன் சபையில் மறுமலர்ச்சி: 

1837 ல் ஆபிரகாம் மால்பன் என்பவர் தலைமையில் ஓர் சீர்திருத்த இயக்கம் உருவானது. இவருடைய முயற்சிக்கு பல போதகர்களும், சபை மக்களும் ஆதரவு கொடுத்தனர். இந்த இயக்கத்திற்கு "மார்த்தோமா சபை" என்று பெயரிடப்பட்டது. 1889 ல் இந்த இயக்கம் சிரியன் சபையிலிருந்து பிரிந்தது. சிரியன் சபையைவிட நற்செய்தி ஊழியத்திலும், மிஷனரிப் பணியிலும் மார்த்தோமா சபை அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டது


Comments