கதை 27: ஒரு கெட்ட ராஜா எகிப்தை ஆளுகிறான்

கதை 27: ஒரு கெட்ட ராஜா எகிப்தை ஆளுகிறான்

இங்கேயுள்ள ஆட்கள் இந்த மக்களைக் கஷ்டப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். அந்த ஆளைப் பார், ஒரு வேலையாளைச் சவுக்கால் அடித்துக் கொண்டிருக்கிறான்! இந்த வேலையாட்கள் எல்லோரும் யாக்கோபின் குடும்பத்தார், இவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைக் கஷ்டப்படுத்தி வேலை வாங்குகிறவர்கள் யார் தெரியுமா? அவர்கள் எகிப்தியர். இந்த இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இது எப்படி நடந்தது?
எகிப்தியர்கள் இஸ்ரவேலரை ஒடுக்குகிறார்கள்
பல ஆண்டுகளாக யாக்கோபின் பெரிய குடும்பமான இஸ்ரவேலர் எகிப்தில் சமாதானமாய் வாழ்ந்தார்கள். அங்கே, பார்வோன் ராஜாவுக்கு அடுத்த மிக முக்கிய ஸ்தானத்தில் இருந்த யோசேப்பு அவர்களைக் கவனித்து வந்தார். ஆனால் பிற்பாடு யோசேப்பு இறந்துவிட்டார். எகிப்தில் ஒரு புதிய பார்வோன் ராஜாவானான், அவனுக்கு இஸ்ரவேலரைப் பிடிக்கவில்லை.
அதனால் இந்தக் கெட்ட பார்வோன் இஸ்ரவேலரை அடிமைகளாக்கினான். அவர்களை மேற்பார்வையிடுவதற்கு சில ஆட்களை நியமித்தான். இவர்கள் ஈவிரக்கமற்றவர்களாயும் மூர்க்கமானவர்களாயும் இருந்தார்கள். பார்வோனுக்குப் பட்டணங்களைக் கட்டும் வேலையில் இஸ்ரவேலரைப் பிழிந்தெடுத்தார்கள். என்றாலும் இஸ்ரவேலர் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே இருந்தார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, எங்கே இந்த இஸ்ரவேலர் மிக அதிகளவில் பெருகி பலத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்று எகிப்தியர் பயந்தார்கள்.
எகிப்தியர்கள் இஸ்ரவேலரை ஒடுக்குகிறார்கள்
அதனால் பார்வோன் என்ன செய்தான் தெரியுமா? இஸ்ரவேல் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கும் பெண்களிடம்: ‘ஆண் குழந்தை பிறந்தால் அதை நீங்கள் கொன்றுவிட வேண்டும்’ என்று சொன்னான். ஆனால் இவர்கள் நல்ல பெண்கள், ஆண் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
அதனால் பார்வோன் எல்லா ஆட்களுக்கும் ஒரு கட்டளைக் கொடுத்தான், அதாவது: ‘இஸ்ரவேலரின் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று போடுங்கள். பெண் குழந்தைகள் மாத்திரம் உயிரோடிருக்கட்டும்’ என்றான். எப்பேர்ப்பட்ட கொடூரமான கட்டளை அல்லவா? இந்த ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் எப்படித் தப்பித்துக்கொண்டது என்பதை நாம் பார்க்கலாம்.
யாத்திராகமம் 1:6-22.


கேள்விகள்

  • படத்தில், சவுக்குடன் நிற்கிற ஆள் யார், அவன் யாரை அடிக்கிறான்?
  • யோசேப்பு இறந்த பிறகு இஸ்ரவேலருக்கு என்ன ஆனது?
  • இஸ்ரவேலரை நினைத்து எகிப்தியர் ஏன் பயந்தார்கள்?
  • இஸ்ரவேல் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்கும் பெண்களிடம் பார்வோன் என்ன சொன்னான்?

கூடுதல் கேள்விகள்

  • யாத்திராகமம் 1:6-22-ஐ வாசி.(அ) ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கை எவ்வழியில் யெகோவா நிறைவேற்ற ஆரம்பித்தார்? (யாத். 1:7; ஆதி. 12:2; அப். 7:17)
    (ஆ) உயிரின் பரிசுத்தத்தன்மைக்கு அந்த எபிரெய மருத்துவச்சிகள் எப்படி மதிப்பு காட்டினார்கள்? (யாத். 1:17; ஆதி. 9:6)
    (இ) யெகோவாவுக்கு உண்மையோடிருந்ததால் இந்த மருத்துவச்சிகள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? (யாத். 1:20, 21; நீதி. 19:17)
    (ஈ) ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து சம்பந்தமான யெகோவாவின் நோக்கத்தைக் குலைத்துப் போட சாத்தான் எப்படி முயன்றான்? (யாத். 1:22; மத். 2:16)

Comments