இஸ்ரவேலரைக் கடவுள் விடுதலை செய்கிறார் -பகுதி 7

பத்துக் கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை மோசே பிடித்திருக்கிறார்

 பகுதி 7

இஸ்ரவேலரைக் கடவுள் விடுதலை செய்கிறார்

எகிப்துமீது யெகோவா வாதைகளைக் கொண்டுவருகிறார்; மோசேயைக் கொண்டு இஸ்ரவேலரை அங்கிருந்து விடுதலை செய்கிறார். மோசே மூலம் அவர்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுக்கிறார்
பல வருடங்கள், எகிப்தில் இஸ்ரவேலர் சீரும்சிறப்புமாய் வாழ்ந்தார்கள், எண்ணிக்கையிலும் பெருகினார்கள். காலப்போக்கில், வேறொரு பார்வோன் ஆட்சிக்கு வந்தான்; அவன் ஒரு கொடுங்கோலன். அவனுக்கு யோசேப்பைப் பற்றி தெரியாது. இஸ்ரவேலரின் மக்கள்தொகை மளமளவென பெருகுவதைக் கண்டு அவன் பயந்துபோய் அவர்களை அடிமையாக்கினான். அதோடு, அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவரையும் நைல் நதியில் வீசியெறியும்படி கட்டளையிட்டான். ஆனால், ஒரு வீரத் தாய் தன் மகனைக் கொல்லாமல் கூடையில் மறைத்து, நாணல் புற்கள் அடர்ந்த நதியோரத்தில் அந்தக் கூடையை வைத்தாள். பார்வோனின் மகள் அந்தப் பக்கம் வந்தபோது கூடை அவள் கண்ணில் பட்டது. உடனே, அவள் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு மோசே என்று பெயர் வைத்து, அவனை அரண்மனையில் வளர்த்தாள்.
மோசேக்கு 40 வயதானபோது, எகிப்திய அதிகாரியிடமிருந்து ஓர் அடிமை இஸ்ரவேலனைக் காப்பாற்ற முயற்சி செய்தார், ஆனால் கடைசியில் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். ஆகவே, வெகு தூரத்திலுள்ள ஒரு தேசத்திற்கு ஓடிப்போய் அங்கே நாடோடியாக வாழ்ந்தார். மோசேக்கு 80 வயதானபோது, எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலரை விடுதலை செய்யும்படி கேட்பதற்காக கடவுள் அவரை பார்வோனிடம் அனுப்பினார்.
பார்வோன் மறுத்துவிட்டான். ஆகவே, எகிப்தின் மீது பத்து வாதைகளைக் கடவுள் கொண்டுவந்தார். அந்த வாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் பார்வோனுக்கு மோசே வாய்ப்பு கொடுத்தார். ஆனால், தலைக்கனம் பிடித்த பார்வோன், மோசேயையும் அவருடைய கடவுளாகிய யெகோவாவையும் அவமதித்தான். கடைசியில் பத்தாவது வாதை வந்தபோது, தேசத்திலிருந்த எல்லாத் தலைப்பிள்ளைகளும் இறந்துபோனார்கள்; ஆனால், யெகோவா சொன்னதைக் கேட்டு, ஆட்டுக்குட்டியைப் பலிசெலுத்தி அதன் இரத்தத்தை வாசல் கதவுகளின் நிலைக்கால்களில் தெளித்தவர்களுடைய தலைப்பிள்ளைகள் மட்டும் உயிர்தப்பினார்கள். கடவுள் அனுப்பிய அழிவின் தூதர் அவர்களுடைய வீடுகளில் இருந்த தலைப்பிள்ளைகளைக் கொல்லாமல் கடந்துபோனார். இந்த மாபெரும் அற்புதத்தின் நினைவாக, இஸ்ரவேலர் வருடாவருடம் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடினார்கள்.
பார்வோன் தன்னுடைய தலைமகனை இழந்த சோகத்தில், எகிப்தைவிட்டுப் போகும்படி இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டான். உடனே, மோசேயின் தலைமையில் மக்கள் எல்லாரும் எகிப்தைவிட்டுக் கிளம்பினார்கள். பிற்பாடு, பார்வோன் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டான். ஏராளமான படைவீரர்களையும் இரதங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரவேலர் செங்கடல் முன்னால் மாட்டிக்கொண்டதைப் போல் தோன்றியது. ஆனால், யெகோவா செங்கடலைப் பிளந்தார்! இருபுறமும் மதில்போல் தண்ணீர் நிற்க, இஸ்ரவேலர் வெட்டாந்தரையில் நடந்து சென்றார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த எகிப்தியர் கடலுக்குள் நுழைந்தவுடன், அவர்கள்மீது கடவுள் தண்ணீரை பாய்ந்துவரச் செய்தார். பார்வோனும் அவனுடைய படைவீரர்களும் ஜலசமாதியானார்கள்.
பிற்பாடு, இஸ்ரவேலர் சீனாய் மலையருகே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, யெகோவா அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். மோசே மூலம் அவர்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். அந்தச் சட்டங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் கொடுத்தன. இஸ்ரவேலர் கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து நடந்தவரை யெகோவா அவர்களோடு இருந்தார். அதோடு, அவர்கள் மூலம் மற்றவர்களை ஆசீர்வதித்தார்.
வருத்தகரமாக, இஸ்ரவேலரில் பெரும்பாலோர் கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல் போனார்கள். அதனால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வனாந்தரத்தில் திரிய வைத்தார். மோசே தான் இறப்பதற்கு முன்பு நேர்மையுள்ள யோசுவாவைப் புதிய தலைவராக நியமித்தார். கடைசியில், ஆபிரகாமுக்குக் கொடுப்பதாகக் கடவுள் சொன்ன தேசத்திற்குள் நுழைய இஸ்ரவேலர் தயாராக இருந்தார்கள்.

Comments