தீர்க்கதரிசிகள் வாயிலாகக் கடவுள் பேசுகிறார்

கடவுளுடைய தீர்க்கதரிசி ஒரு செய்தியைச் சொல்கிறார்
 பகுதி 14

தீர்க்கதரிசிகள் வாயிலாகக் கடவுள் பேசுகிறார்

நியாயத்தீர்ப்பு, உண்மை வழிபாடு, மேசியாவின் வருகை பற்றிய செய்திகளை அறிவிக்க தீர்க்கதரிசிகளை யெகோவா நியமிக்கிறார்
இஸ்ரவேலையும் யூதாவையும் அரசர்கள் ஆண்ட காலத்தில், ஒரு விசேஷித்த தொகுதியினர் இருந்தார்கள்; அவர்கள்தான் தீர்க்கதரிசிகள். அதீத நம்பிக்கையும் தைரியமும் கொண்ட இவர்கள் கடவுளுடைய செய்திகளை மக்களுக்கு அறிவித்தார்கள். நான்கு மையப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்; அவற்றை இப்போது கவனிப்போம்.
1. எருசலேமின் அழிவு. எருசலேம் அழிக்கப்பட்டு பாழாய்க் கிடக்கும் என்று வெகு காலத்திற்கு முன்பே கடவுளுடைய தீர்க்கதரிசிகள்—முக்கியமாக ஏசாயாவும் எரேமியாவும்—எச்சரித்து வந்தார்கள். அந்த நகரத்தின் மீது கடவுள் கோபம் கொண்டதற்கான காரணத்தை அவர்கள் தெள்ளத்தெளிவாகக் கூறினார்கள். எருசலேம் வாசிகள் தங்களை யெகோவாவின் பிரதிநிதிகள் என மார்தட்டிக்கொண்டபோதிலும் அவர்களுடைய நடத்தை அதைப் பொய்யென நிரூபித்தது. ஏனென்றால், அவர்கள் மத்தியில் பொய்மத சடங்குகளும் ஊழலும் வன்முறையும் மலிந்து கிடந்தன.—2 இராஜாக்கள் 21:10-15ஏசாயா 3:1-8, 16-26; எரேமியா 2:1–3:13.
2. உண்மை வழிபாடு மீண்டும் ஸ்தாபிக்கப்படுதல். 70 வருடத்திற்குப்பின் கடவுளுடைய மக்கள் பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள். பாழாய்க் கிடந்த எருசலேமுக்கு வந்து, யெகோவாவின் கோயிலை திரும்பக் கட்டுவார்கள். (எரேமியா 46:27;ஆமோஸ் 9:13-15) பாபிலோனை வீழ்த்தி, உண்மை வழிபாட்டை ஸ்தாபிக்க கடவுளுடைய மக்களை விடுவிக்கும் வெற்றிவீரரின் பெயரை சுமார் 200 வருடங்களுக்கு முன்பே ஏசாயா அறிவித்தார். கோரேசுதான் அந்த வெற்றிவீரர். கோரேசு கையாளும் போர் தந்திரத்தையும்கூட ஏசாயா விவரமாகச் சொன்னார்.—ஏசாயா 44:24–45:4.
சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்புகிறார்கள்
3. மேசியாவின் வருகையும் அவருடைய வாழ்க்கையும். பெத்லகேம் என்ற சிறிய ஊரில் மேசியா பிறப்பார். (மீகா 5:2) அவர் தாழ்மையானவராக இருப்பார். கழுதையின் மேல் அமர்ந்து எருசலேமுக்குள் பவனி வருவார். (சகரியா 9:9) அவர் கனிவானவராகவும் கருணையுள்ளவராகவும் இருந்தாலும் பிரபலமில்லாதவராகவே இருப்பார், அநேகர் அவரை நிராகரித்துவிடுவார்கள். (ஏசாயா 42:1-3; 53:1, 3) கடைசியில் அவர் கொடூரமான மரணத்தைச் சந்திப்பார். மேசியாவின் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடுமா? இல்லை. ஏனென்றால், அநேகரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவருடைய பலி வழிதிறக்கும். (ஏசாயா 53:4, 5, 9-12) அவர் மீண்டும் உயிருக்கு வந்தால்தான் இது சாத்தியமாகும்.
4. பூமியில் மேசியாவின் ஆட்சி. அபூரண மனிதனால் அமைதியான ஆட்சியைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், சமாதானப் பிரபுவான மேசியாவின் ஆட்சியில் அமைதி குடிகொண்டிருக்கும். (ஏசாயா 9:6, 7; எரேமியா 10:23) அவருடைய ஆட்சியில், மனிதருக்கு இடையே மட்டுமல்ல, மனிதருக்கும் மிருகங்களுக்கும் இடையேகூட சமாதானம் நிலவும். (ஏசாயா 11:3-7) நோய்நொடி இருக்காது. (ஏசாயா 33:24) ஏன், மரணமே இருக்காது. (ஏசாயா 25:8) இறந்தவர்கள்கூட மேசியாவின் ஆட்சியில் மீண்டும் பூமியில் உயிர்பெற்று வருவார்கள்.—தானியேல் 12:13.
—ஆதாரம்: ஏசாயாஎரேமியாதானியேல்ஆமோஸ்மீகாசகரியா புத்தகங்கள்.

Comments