இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைகிறார்கள்

யோசுவா போர் முழக்கம் செய்யும்போது, குருமார்கள் ஊதுகொம்புகளை ஊதுகிறார்கள்
 பகுதி 8

இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைகிறார்கள்

கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு இஸ்ரவேலரை யோசுவா தலைமைதாங்கி நடத்துகிறார். ஒடுக்கப்படுகிற தமது மக்களை விடுதலை செய்ய நியாயாதிபதிகளுக்கு யெகோவா பலமளிக்கிறார்
இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அத்தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்குக் கொடுக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது யோசுவாவின் தலைமையில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் கைப்பற்றும் தறுவாயில் இருந்தார்கள்.
கானானியரை அழிப்பதற்கு யெகோவா தீர்மானித்திருந்தார். அந்தத் தேசத்தில் ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடியது; இரத்த ஆறு ஓடியது. ஆகவே, இஸ்ரவேலர் தாங்கள் கைப்பற்றும் கானானிய பட்டணங்கள் அனைத்தையும் அடியோடு அழிக்க வேண்டியிருந்தது.
இருந்தாலும், கானான் தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு அத்தேசத்தை உளவு பார்க்க இரண்டு உளவாளிகளை யோசுவா அனுப்பினார். அவர்கள் எரிகோ பட்டணத்தில் ராகாப் என்ற பெண்ணின் வீட்டில் தங்கினார்கள். அந்தப் பெண் அவர்களை வீட்டிற்குள் அழைத்து உபசரித்தாள்; அவர்கள் இஸ்ரவேலர் என்பதை அறிந்துகொண்ட பின்பும் பாதுகாப்பு கொடுத்தாள். இஸ்ரவேலரைக் காப்பாற்ற யெகோவா நடப்பித்த வியத்தகு செயல்களைக் கேள்விப்பட்டிருந்ததால் யெகோவாமீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. ஆகவே, தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்கக்கூடாது என அந்த உளவாளிகளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள்.
பிறகு, இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைந்து எரிகோ பட்டணத்தைப் பிடிக்கச் சென்றபோது, எரிகோவின் சுவர்கள் தானாகவே இடிந்துவிழும்படி யெகோவா செய்தார். யோசுவாவின் வீரர்கள் பட்டணத்திற்குள் புகுந்து ராகாபையும் அவள் குடும்பத்தாரையும் தவிர மற்ற அனைவரையும் அழித்துப்போட்டார்கள். அதன்பின் ஆறே ஆண்டுகளில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பெரும்பகுதியை யோசுவா கைப்பற்றினார். பின்பு, இஸ்ரவேலின் 12 கோத்திரத்திற்கும் நிலம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
உலக வரைபடத்தில் கானான் தெசம்[பக்கம் 11-ன் தேசப்படம்]
யோசுவா தன்னுடைய நெடுங்கால சேவையின் இறுதிக்கட்டத்தில் ஜனங்களை ஒன்றுகூட்டினார்; அப்போது, முன்னோர்களின் காலத்தில் யெகோவா செய்த மகத்தான செயல்களை அவர்களுக்கு நினைப்பூட்டினார். காலமெல்லாம் யெகோவாவையே வழிபடும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், யோசுவாவும் அவரோடிருந்த பெரியோர்களும் இறந்த பிறகு, இஸ்ரவேலர் யெகோவாவை விட்டுவிட்டு பொய்த் தெய்வங்களை ஆராதிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கொஞ்சகாலம் கீழ்ப்படிவார்கள், பின்பு அவற்றை மறந்துவிடுவார்கள்; இப்படியே சுமார் 300 வருடங்கள் ஓடின. அந்தக் காலப்பகுதியில், பெலிஸ்தியர் போன்ற எதிரிகள் இஸ்ரவேலரை ஒடுக்க யெகோவா அனுமதித்தார். ஆனால், இஸ்ரவேலர் யெகோவாவை நோக்கி அபயக்குரல் கொடுத்தபோது, அவர்களைக் காப்பாற்ற மொத்தம் 12 நியாயாதிபதிகளை அடுத்தடுத்து நியமித்தார்.
பைபிளில் நியாயாதிபதிகள் என்ற புத்தகத்தில் இவர்களைப் பற்றிய பதிவுகள் உள்ளன. இவர்களில் முதல் நியாயாதிபதி ஒத்னியேல், கடைசி நியாயாதிபதி பலமிக்க சிம்சோன். மெய்சிலிர்க்க வைக்கும் பதிவுகள் அடங்கிய இப்புத்தகத்தில் வலியுறுத்தப்படும் உண்மை இதுதான்: யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம், கீழ்ப்படியாவிட்டால் அழிவு.

Comments