கதை 14: ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்

கதை 14: ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்

ஆபிரகாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உனக்குப் புரிகிறதா? அவருடைய கையில் ஒரு கத்தி இருக்கிறது, தன் மகனைக் கொல்லப் போவது போலத் தெரிகிறது. எதற்காக தன் மகனை அவர் கொல்ல வேண்டும்? முதலில், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் எப்படி ஒரு மகன் பிறந்தான் என்று பார்க்கலாம்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பலி கொடுக்கிறார்
அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருந்தது உனக்கு நினைவிருக்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது என்பது போல்தான் தோன்றியது. ஏனென்றால் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது. என்றாலும், கடவுளால் முடியாதது எதுவுமே இல்லை என்று ஆபிரகாம் நம்பினார். எனவே என்ன நடந்தது?
கடவுள் வாக்குக் கொடுத்து ஒரு வருஷம் ஆகிவிட்டது. ஆபிரகாமுக்கு 100 வயதும் சாராளுக்கு 90 வயதும் இருந்தபோது அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது, ஈசாக்கு என அதற்குப் பெயர் வைத்தார்கள். ஆம், கடவுள் தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்!
ஆனால் ஈசாக்கு பெரியவனாக வளர்ந்தபோது ஆபிரகாமின் விசுவாசத்தை யெகோவா சோதித்தார். அவர், ‘ஆபிரகாம்!’ என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், ‘இதோ இருக்கிறேன்!’ என்று பதில் கொடுத்தார். அப்பொழுது கடவுள்: ‘உன் மகனை, உன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை கூட்டிக்கொண்டு நான் உனக்குக் காண்பிக்கப் போகும் மலைக்கு போ. அங்கே உன் மகனைக் கொன்று எனக்குப் பலியாகக் கொடு’ என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட ஆபிரகாமுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும், ஏனென்றால் ஆபிரகாம் தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, ஆபிரகாமின் பிள்ளைகள் அந்தக் கானான் தேசத்தில் வாழ்வார்கள் என்றும் கடவுள் வாக்கு கொடுத்திருந்தார், அதுவும் உனக்கு நினைவிருக்கும். ஆக, ஈசாக்கு இறந்துவிட்டால் அந்த வாக்கு எப்படி நிறைவேறும்? ஆபிரகாமுக்கு இந்த விஷயம் ஒரே குழப்பமாக இருந்தாலும் கடவுள் சொன்னபடியே அவர் செய்தார்.
அந்த மலைக்குப் போய்ச் சேர்ந்தபோது ஈசாக்கை ஆபிரகாம் கட்டிப்போட்டார். பிறகு, தான் உண்டாக்கிய பலிபீடத்தின் மேல் அவனைப் படுக்க வைத்து, அவனைக் கொல்வதற்காக தன் கத்தியை வெளியே எடுத்தார். எடுத்த அதே நிமிஷம் ஒரு தூதன் மூலம், ‘ஆபிரகாமே, ஆபிரகாமே!’ என்று கடவுள் அழைத்தார். ஆபிரகாம், ‘இதோ இருக்கிறேன்!’ என்று பதில் கொடுத்தார்.
‘மகனைக் கொலை செய்யாதே, அவனை ஒன்றும் செய்யாதே, உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்க நீ தயங்காததால், என் மேல் உனக்கு விசுவாசம் இருக்கிறதென்று இப்பொழுது நான் அறிந்துகொண்டேன்’ என்று கடவுள் சொன்னார்.
ஆபிரகாமுக்குக் கடவுள் மீது எவ்வளவு அதிகமான விசுவாசம் இருந்தது! யெகோவாவுக்கு முடியாத காரியமென்று எதுவுமே இல்லை என்பதையும், ஈசாக்கு இறந்தால்கூட மறுபடியும் அவரால் உயிர் கொடுக்க முடியும் என்பதையும் அவர் நம்பினார். ஆனால் ஈசாக்கை ஆபிரகாம் கொல்ல வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பமே கிடையாது. எனவே, அருகிலிருந்த புதர்களில் ஒரு செம்மறியாடு சிக்கிக்கொள்ளும்படி அவர் செய்தார். பின்பு ஈசாக்கிற்குப் பதிலாக அதைப் பலியிடும்படி ஆபிரகாமிடம் கூறினார்.
ஆதியாகமம் 21:1-7; 22:1-18.


கேள்விகள்

  • ஆபிரகாமுக்குக் கடவுள் என்ன வாக்குக் கொடுத்திருந்தார், அந்த வாக்கைக் கடவுள் எப்படிக் காப்பாற்றினார்?
  • படத்தில் பார்க்கிறபடி, ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் எப்படிச் சோதித்தார்?
  • கடவுளின் கட்டளை ஆபிரகாமுக்குக் குழப்பமாக இருந்தபோதிலும் அவர் என்ன செய்தார்?
  • மகனைக் கொல்வதற்காகக் கத்தியை ஆபிரகாம் வெளியே எடுத்ததும் என்ன நடந்தது?
  • ஆபிரகாமுக்குக் கடவுள் மீது எந்தளவு விசுவாசம் இருந்தது?
  • பலியிட ஆபிரகாமுக்குக் கடவுள் எதைக் கொடுத்தார், எப்படி?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 21:1-7-ஐ வாசி.ஆபிரகாம் தன் மகனுக்கு எட்டாம் நாளில் ஏன் விருத்தசேதனம் செய்தார்? (ஆதி. 17:10-12; 21:4)
  • ஆதியாகமம் 22:1-18-ஐ வாசி.தன் தகப்பனான ஆபிரகாமுக்கு ஈசாக்கு எப்படிக் கீழ்ப்படிந்திருந்தார், பிற்பாடு நிகழவிருந்த மிக முக்கியமான சம்பவத்திற்கு இது எப்படி ஒரு படமாக இருந்தது? (ஆதி. 22:7-9; 1 கொ. 5:7; பிலி. 2:8, 9)

Comments