கதை 17: எதிரும் புதிருமான இரட்டையர்கள்
கதை 17: எதிரும் புதிருமான இரட்டையர்கள்
இங்கேயுள்ள இந்த இரண்டு பையன்களையும் பார். இவர்களுக்கு இடையே ரொம்ப வித்தியாசம் இருக்கிறது இல்லையா? இவர்களுடைய பெயர் உனக்குத் தெரியுமா? வேட்டையாடுகிறவன் பெயர் ஏசா, செம்மறியாடுகளைக் கவனித்துக் கொண்டிருப்பவன் பெயர் யாக்கோபு.
ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகளே இந்த ஏசாவும் யாக்கோபும். ஈசாக்குக்கு ஏசாவை ரொம்பப் பிடிக்கும், ஏனென்றால் வேட்டையாடுவதில் அவன் கெட்டிக்காரன்; வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடுவதற்குத் தேவையான உணவை அவன் வேட்டையாடிக் கொண்டு வந்தான். ஆனால் ரெபெக்காளுக்கு யாக்கோபைத்தான் ரொம்பப் பிடிக்கும், ஏனென்றால் அவன் அமைதியானவன், சாந்தமானவன்.
இந்த இரட்டையர்களின் தாத்தா ஆபிரகாம் இன்னும் உயிரோடிருந்தார். யெகோவாவைப் பற்றி அவர் சொல்வதையெல்லாம் யாக்கோபு எவ்வளவு ஆசை ஆசையாய் கேட்டிருப்பான் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆபிரகாம் 175-ஆம் வயதில் மரித்தார், அந்த சமயத்தில் இந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு 15 வயது.
ஏசா 40 வயதாக இருந்தபோது கானான் தேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டான். இதை நினைத்து ஈசாக்கும் ரெபெக்காளும் ரொம்ப வேதனைப்பட்டார்கள், காரணம் இந்தப் பெண்கள் யெகோவாவை வணங்காதவர்கள்.
பின்பு ஒருநாள் தன் தம்பி யாக்கோபின் மேல் ஏசாவுக்குப் பயங்கர கோபம் ஏற்படுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, அவன் தந்தை ஈசாக்கு தன்னுடைய மூத்த மகனை ஆசீர்வதிக்க வேண்டிய சமயம் வந்தது. தான் மூத்த பிள்ளையாக இருந்ததால் அந்த ஆசீர்வாதம் தனக்குத்தான் கிடைக்கும் என ஏசா எதிர்பார்த்தான். ஆனால், அந்த ஆசீர்வாதத்தைப் பெறும் உரிமையை ஏற்கெனவே அவன் யாக்கோபுக்கு விற்றுவிட்டிருந்தான். அதுமட்டுமல்ல, இந்த இரண்டு பிள்ளைகள் பிறந்தபோது யாக்கோபுதான் அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவான் என்று கடவுள் முன்கூட்டியே சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே நடந்தது. ஈசாக்கு அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபுக்குக் கொடுத்தார்.
இது தெரிய வந்தபோதுதான் யாக்கோபின் மீது ஏசாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. யாக்கோபைக் கொல்லப்போவதாக கோபாவேசத்துடன் கூறினான். இதைக் கேட்ட ரெபெக்காள் என்ன நடக்கப் போகிறதோ என நினைத்து மிகவும் கவலைப்பட்டாள். அதனால் தன் கணவன் ஈசாக்கிடம், ‘ஏசா செய்தது போல இந்தக் கானான் தேசத்துப் பெண்களில் ஒருத்தியை யாக்கோபும் கல்யாணம் செய்தால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது’ என்று சொன்னாள்.
அதனால் ஈசாக்கு தன் மகன் யாக்கோபை அழைத்து: ‘கானான் தேசத்துப் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது, அதற்குப் பதிலாக ஆரானிலிருக்கும் உன் தாத்தா பெத்துவேலின் வீட்டுக்குப் போ. அவருடைய மகனான லாபானின் மகள்களில் ஒருத்தியை கல்யாணம் செய்துகொள்’ என்று சொன்னார்.
அப்பாவுக்கு கீழ்ப்படிந்து, வெகு தொலைவில் ஆரானிலிருந்த தன் சொந்தக்காரர்களிடம் போக யாக்கோபு உடனடியாக கிளம்பினார்.
ஆதியாகமம் 25:5-11, 20-34; 26:34, 35; 27:1-46; 28:1-5; எபிரெயர் 12:16, 17.
கேள்விகள்
- ஏசாவும் யாக்கோபும் யார், அவர்கள் எப்படி வித்தியாசப்பட்டவர்களாக இருந்தார்கள்?
- தங்களுடைய தாத்தாவான ஆபிரகாம் மரிக்கும்போது இந்த இரட்டையர்களுக்கு எத்தனை வயது?
- ஏசா செய்த என்ன காரியத்தை நினைத்து அவனுடைய அம்மாவும் அப்பாவும் ரொம்ப வேதனைப்பட்டார்கள்?
- தன் தம்பி யாக்கோபின் மேல் ஏசாவுக்கு ஏன் பயங்கர கோபம் வந்தது?
- தன் மகன் யாக்கோபுக்கு ஈசாக்கு என்ன அறிவுரை கொடுத்தார்?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 25:5-11, 20-34-ஐ வாசி.(அ) ரெபெக்காளின் இரண்டு மகன்களைப் பற்றி யெகோவா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆதி. 25:23)
(ஆ) சேஷ்ட புத்திரபாகத்தைப் பற்றியதில் யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் இடையே என்ன வித்தியாசப்பட்ட மனநிலை இருந்தது? (ஆதி. 25:31-34) - ஆதியாகமம் 26:34, 35; 27:1-46; 28:1-5-ஐ வாசி.(அ) ஆன்மீக காரியங்களை ஏசா அவமதித்ததை எப்படி வெளிப்படையாகக் காட்டினான்? (ஆதி. 26:34, 35; 27:46)
(ஆ) கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, என்ன செய்யும்படி யாக்கோபிடம் ஈசாக்கு சொன்னார்? (ஆதி. 28:1-4) - எபிரெயர் 12:16, 17-ஐ வாசி.பரிசுத்த காரியங்களை அவமதிப்போருக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஏசாவின் உதாரணம் என்ன காட்டுகிறது?
Comments
Post a Comment