இயேசு உயிர்ப்பிக்கப்பட்டார்

இயேசு விண்ணுலகத்துக்கு ஏறிப்போகிறார்
 பகுதி 21

இயேசு உயிர்ப்பிக்கப்பட்டார்!

சீடர்களுக்கு அறிவுரை கொடுக்கவும் உற்சாகப்படுத்தவும் இயேசு காட்சியளிக்கிறார்
இயேசு இறந்து மூன்றாம் நாள், அவருடைய கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததை அவரது பெண்-சீடர்கள் சிலர் கண்டார்கள். கல்லறையும் காலியாகக் கிடந்தது!
அப்போது இரண்டு தேவதூதர்கள் தோன்றினார்கள். “நாசரேத்தூர் இயேசுவைத்தானே நீங்கள் தேடுகிறீர்கள்? . . . அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று ஒருவர் சொன்னார். (மாற்கு 16:6) உடனே அதை அப்போஸ்தலர்களிடம் தெரிவிக்க அந்தப் பெண்கள் ஓடினார்கள். வழியில் இயேசுவைக் கண்டார்கள். அப்போது இயேசு, “பயப்படாதீர்கள்! நீங்கள் என் சகோதரர்களிடம் சென்று, அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்றார்.—மத்தேயு 28:10.
அன்று மாலை சீடர்களில் இருவர் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இன்னொருவர் அவர்களோடு சேர்ந்துகொண்டு, ‘நீங்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த நபர் வேறு யாருமில்லை, உயிர்ப்பிக்கப்பட்ட இயேசுதான். ஆனால், அவர் வேறொரு உருவத்தில் இருந்ததால் முதலில் அந்தச் சீடர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இயேசுவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பதாக அவரிடம் வருத்தத்தோடு கூறினார்கள். அப்போது இயேசு, மேசியாவைப் பற்றி வேதாகமத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை அந்தச் சீடர்களுக்கு விளக்கினார். பார்க்கப்போனால், அவற்றையெல்லாம் இயேசு மிகத் துல்லியமாக நிறைவேற்றியிருந்தார். * ஆவி ரூபத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட இயேசுதான் அந்த நபர் என்பதைச் சீடர்கள் உணர்ந்துகொண்டபோது அவர் மறைந்துபோனார்.
அந்த இரண்டு சீடர்களும் உடனடியாக எருசலேமிற்குத் திரும்பினார்கள். அங்கே அப்போஸ்தலர்கள் ஓர் அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததைக் கண்டார்கள். நடந்த விஷயத்தை அந்த இரண்டு சீடர்களும் அப்போஸ்தலர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் தோன்றினார். அதைக் கண்டு எல்லாரும் திகைத்துப்போனார்கள், அவர்களால் நம்பவே முடியவில்லை! அப்போது இயேசு அவர்களிடம், ‘ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார்.—லூக்கா 24:38,46, 47.
இயேசு உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு 40 நாட்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சீடர்களுக்குக் காட்சியளித்தார். ஒரு சமயம், 500-க்கும் அதிகமானோருக்குக் காட்சியளித்தார்! ஒருவேளை அந்தச் சமயத்தில், இந்த முக்கியமான வேலையை அவர்களுக்கு இயேசு கொடுத்திருக்கலாம்: “புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20.
உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களை இயேசு கடைசியாக சந்தித்த சமயத்தில் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, . . . பூமியின் கடைமுனை வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) பின்பு இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர் விண்ணுலகத்திற்குச் சென்றபோது அவர்களுடைய கண்களுக்குத் தெரியாதபடி ஒரு மேகம் அவரை மறைத்துக்கொண்டது.
—ஆதாரம்: மத்தேயு 28-ஆம் அதிகாரம்; மாற்கு 16-ஆம் அதிகாரம்; லூக்கா 24-ஆம் அதிகாரம்; யோவான் 20, 21அதிகாரங்கள்; 1 கொரிந்தியர் 15:5, 6.

Comments