இஸ்ரவேலின் முதல் அரசரான சவுல் கீழ்ப்படியத் தவறுகிறார். அவருக்குப் பிறகு தாவீது அரசராகிறார்
பகுதி 9
அரசன் வேண்டுமென இஸ்ரவேலர் கேட்கிறார்கள்
இஸ்ரவேலின் முதல் அரசரான சவுல் கீழ்ப்படியத் தவறுகிறார். அவருக்குப் பிறகு தாவீது அரசராகிறார்; நிலையான அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தைக் கடவுள் அவருடன் செய்கிறார்
சிம்சோன் இறந்தபின், சாமுவேல் என்பவர் இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் சேவை செய்தார். மற்ற தேசத்தாரைப் போலவே தங்களுக்கும் ஒரு மானிட மன்னர் வேண்டுமென இஸ்ரவேலர் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இது யெகோவாவின் மனதைப் புண்படுத்தியபோதிலும் அவர்கள் சொல்வதைக் கேட்கும்படி சாமுவேலிடம் அவர் கூறினார். மனத்தாழ்மையுள்ள சவுலை இஸ்ரவேலருக்கு அரசராகக் கடவுள் தேர்ந்தெடுத்தார். ஆனால், காலப்போக்கில் சவுல் தலைக்கனம் பிடித்தவராக மாறி கீழ்ப்படியாமல் போனார். ஆகவே, சவுலை யெகோவா புறக்கணித்துவிட்டார்; அவருக்குப் பதிலாக, தாவீது என்ற இளைஞனை அரசனாக நியமிக்கும்படி சாமுவேலிடம் சொன்னார். என்றாலும், பல ஆண்டுகளுக்குப் பின்பே தாவீது அரியணை ஏறினார்.
பருவ வயதில் இருந்தபோது தாவீது ஒருமுறை சவுல் ராஜாவின் படையிலிருந்த தன் அண்ணன்மாரைச் சந்திக்கச் சென்றார். அப்போது, சவுலின் படைவீரர்கள் அனைவரும் எதிரி படையைச் சேர்ந்த கோலியாத் என்ற ராட்சதனைக் கண்டு பயந்துபோயிருந்தார்கள். இஸ்ரவேலின் படைவீரர்களையும் அவர்களுடைய தெய்வத்தையும் அந்த ராட்சதன் பழித்துப் பேசினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த தாவீது, அந்த ராட்சதனோடு சண்டைபோடும் சவாலை ஏற்றுக்கொண்டார். ஒன்பது அடிக்கும் உயரமான எதிரியைச் சந்திக்க தாவீது எடுத்துச்சென்றது ஒரு கவணும் சில கற்களும் மட்டுமே. அதைக் கண்டு கோலியாத் கேலி செய்தான். அதற்கு தாவீது, ‘எனக்கு யெகோவா துணைநிற்கிறார், அவருக்குமுன் நீ எம்மாத்திரம்?’ என்று கூறினார். தாவீது ஒரே கல்லில் கோலியாத்தை வீழ்த்தினார்; பிறகு, அந்த ராட்சதனின் வாளையே உருவி அவன் தலையை வெட்டினார். இதைக் கண்டு பெலிஸ்திய படைவீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.
முதலில், தாவீதின் வீரத்தைக் கண்டு சவுல் அசந்துபோய், அவரைத் தன் படைத்தளபதியாக நியமித்தார். ஆனால், அடுத்தடுத்து தாவீதுக்குக் கிடைத்த வெற்றிகளைக் கண்டு சவுல் பொறாமைப்பட்டார். எனவே, தாவீது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்து பல வருடங்கள் நாடோடியாகச் சஞ்சரிக்க வேண்டியிருந்தது. யெகோவா தேவனே சவுலை அரசராக நியமித்திருந்ததால், சவுல் தன்னைக் கொல்ல முயன்றபோதிலும் தாவீது அவருக்கு விசுவாசமாகவே இருந்தார். கடைசியில், ஒரு போரில் சவுல் மாண்டுபோனார். யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படி, தாவீது விரைவில் அரசரானார்.
‘அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.’—2 சாமுவேல் 7:13, பொ.மொ.
அரசரான தாவீது, யெகோவாவுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால், தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர்தான் அதைக் கட்டுவார் என்று யெகோவா கூறிவிட்டார். அவர்தான் தாவீதின் மகன் சாலொமோன். இருந்தாலும், தாவீதோடு ஓர் ஒப்பந்தம் செய்வதன் மூலம் கடவுள் அவரை ஆசீர்வதித்தார். ஆம், அவருடைய அரச பரம்பரை வேறெந்த அரச பரம்பரையையும்விட தனிச்சிறப்புமிக்கதாய் இருக்கும் என்று சொன்னார். காலப்போக்கில், ஏதேன் தோட்டத்தில் வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர், அதாவது வாரிசு, அவருடைய பரம்பரையில் தோன்றினார். அவர்தான் மேசியா. கடவுளால் ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்,’ அதாவது நியமிக்கப்பட்டவர், என்பதே அதன் அர்த்தம். அந்த மேசியா ஓர் அரசாங்கத்திற்கு ஆட்சியாளராக இருப்பார்... அந்த அரசாங்கம் நிலையான அரசாங்கமாக இருக்கும்... என்று யெகோவா வாக்குறுதி கொடுத்தார்.
சாலொமோன் கோயிலைக் கட்டுவார் என்பதைக் கேட்டதும், தாவீது அதற்காக ஏராளமான கட்டுமான பொருள்களையும், பொன்னையும் வெள்ளியையும், மணிக்கற்களையும் சந்தோஷமாய்ச் சேகரித்து வைத்தார். அதோடு, தெய்வீகப் பாடல்கள் பலவற்றை இயற்றினார். தாவீது காலமாவதற்கு சற்று முன்பு, ‘யெகோவாவின் சக்தி என் மூலம் பேசியது; அவருடைய வார்த்தை என் நாவில் ஒலித்தது’ என்று சொன்னார்.—2 சாமுவேல் 23:2, NW.
Comments
Post a Comment