பசுஞ்சோலையை மனிதன் இழந்துவிடுகிறான்
பகுதி 2
பசுஞ்சோலையை மனிதன் இழந்துவிடுகிறான்
கடவுளுடைய ஆட்சியைப் புறக்கணிக்கும்படி ஆதாம் ஏவாளை ஒரு கலகக்கார தூதன் தூண்டிவிடுகிறான். அதன் விளைவாக, பாவமும் மரணமும் மனித சரித்திரத்தில் நுழைகின்றன.
மனிதர்களைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே தூதர்களைக் கடவுள் படைத்தார். அந்தத் தூதர்களில் ஒருவன் கலகக்காரனாய் மாறினான். சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லியிருந்த மரத்தின் கனியைச் சாப்பிடச் சொல்லி ஏவாளை நயவஞ்சகமாகத் தூண்டினான். அவனே பிசாசாகிய சாத்தான் என்று பின்னர் அழைக்கப்பட்டான்.
சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் பேசினான். ஆதாம் ஏவாளுக்கு விருப்பமான ஒன்றைக் கடவுள் கொடுக்காமல் வைத்திருப்பதாக மறைமுகமாய்ச் சொன்னான். சாப்பிட வேண்டாமெனக் கடவுள் சொன்ன கனியைச் சாப்பிட்டால் அவளும் அவளுடைய கணவனும் சாகமாட்டார்கள் என்று கூறினான். மொத்தத்தில், கடவுள் அவர்களிடம் பொய் சொன்னதாக சாத்தான் குற்றம்சாட்டினான். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் அவர்களுக்கு ஞானம் பிறக்கும்... சுதந்திரம் கிடைக்கும்... என்றெல்லாம் ஆசை காட்டினான். ஆனால், அது எல்லாமே சுத்தப் பொய்; பூமியில் சொல்லப்பட்ட முதல் பொய்யும் அதுதான். பார்க்கப்போனால், கடவுளுடைய ஆட்சியையே சாத்தான் எதிர்த்தான். ‘ஆட்சிசெய்ய கடவுளுக்கு உரிமை இருக்கிறதா? நீதியாக... மக்களின் நன்மைக்காக... அவர் ஆட்சி செய்கிறாரா?’ என்று அவன் கேள்வி எழுப்பினான்.
சாத்தான் சொன்ன பொய்யை ஏவாள் நம்பினாள். அதனால், அந்தப் பழத்தின் மீது ஆசைப்பட்டு அதைச் சாப்பிட்டாள். பிறகு தன் கணவனுக்கும் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். இவ்வாறு, அவர்கள் இருவரும் பாவம் எனும் படுகுழியில் விழுந்தார்கள். பழத்தைச் சாப்பிட்டது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றலாம், ஆனால் அவர்கள் செய்தது மிகப் பெரிய கலகம். ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். பரிபூரண வாழ்வையும் அதை அனுபவிக்கத் தேவையான அனைத்தையும் தந்த படைப்பாளரின் ஆட்சியையே ஒதுக்கித் தள்ளினார்கள்.
அந்த வாரிசு “உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15, NW
அந்தக் கலகக்காரர்களுக்குக் கடவுள் தண்டனைத்தீர்ப்பு வழங்கினார். பாம்பைக் கொண்டு வஞ்சித்த சாத்தானை அழிக்க வாக்குப்பண்ணப்பட்ட வாரிசு, அதாவது இரட்சகர், தோன்றுவார் என்றும் அறிவித்தார். ஆதாம் ஏவாளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் கடவுள் சிலகாலம் தள்ளி வைத்தார். இவ்வாறு, அவர்களுடைய வருங்கால சந்ததியார்மீது கருணை காட்டினார்! ஆம், அந்தச் சந்ததியாருக்கு ஒரு நம்பிக்கை அளித்தார்! எப்படியெனில், கடவுளால் அனுப்பப்படும் இரட்சகர், ஏதேனில் வெடித்த கலகத்தின் கசப்பான விளைவுகளை அடியோடு ஒழித்துவிடுவார். இந்த வருங்கால இரட்சகர் யார்... மனிதர்களுக்கு அவர் என்ன செய்வார்... போன்ற விவரங்கள் பைபிள் எழுத்தாளர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டன.
ஆதாமையும் ஏவாளையும் பசுஞ்சோலையிலிருந்து கடவுள் துரத்திவிட்டார். அவர்கள் தங்களுடைய வயிற்றுப்பாட்டுக்காக ஏதேன் தோட்டத்திற்கு வெளியே வியர்வை சிந்த உழைக்க வேண்டியிருந்தது. பிறகு, ஏவாள் கர்ப்பமாகி முதல் மகன் காயீனைப் பெற்றெடுத்தாள். பிற்பாடு, ஆபேல், சேத் உட்பட அநேக மகன்களும் மகள்களும் அவர்களுக்குப் பிறந்தார்கள். சேத் என்பவர் நோவாவின் மூதாதை.
—ஆதாரம்: ஆதியாகமம் 3-5 அதிகாரங்கள்; வெளிப்படுத்துதல் 12:9.
Comments
Post a Comment