இயேசு கொலை செய்யப்படுகிறார்
பகுதி 20
இயேசு கொலை செய்யப்படுகிறார்
தாம் இறப்பதற்கு முன்பு இயேசு ஒரு புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைக்கிறார்; பின்பு காட்டிக்கொடுக்கப்பட்டு கழுமரத்தில் அறையப்படுகிறார்
இயேசு மூன்றரை வருடங்களாக மக்களுக்குப் பிரசங்கித்தும் கற்பித்தும் வந்தார். இப்போது, தாம் இந்த உலகத்தைவிட்டுப் போகவேண்டிய சமயம் நெருங்கிவருவதை அறிந்திருந்தார். யூத மதத் தலைவர்கள் அவரைக் கொல்ல சதிசெய்து கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதியதால், கிளர்ச்சி செய்வார்களோ என்று பயந்து அவர்கள் எதுவும் செய்யவில்லை. இதற்கிடையே, 12 அப்போஸ்தலர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை இயேசுவுக்கு எதிராக சாத்தான் ஏவிவிட்டான். இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் 30 வெள்ளிக் காசுகள் தருவதாக யூதாஸிடம் மதத் தலைவர்கள் கூறினார்கள்.
இயேசு தாம் இறப்பதற்கு முந்தின இரவு, பஸ்கா பண்டிகையை அனுசரிக்க தம் அப்போஸ்தலர்களோடு கூடிவந்தார். பிறகு யூதாஸை அனுப்பிவிட்டு, ஒரு புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். அதுதான் ‘எஜமானரின் இரவு விருந்து.’ இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து, 11 அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார். “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்றார். அவ்வாறே, திராட்சைமது கிண்ணத்தையும் கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்றார்.—லூக்கா 22:19, 20.
அன்றிரவு அப்போஸ்தலர்களிடம் இயேசு அநேக விஷயங்களைப் பற்றி பேசினார். அவர்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுத்தார்—தன்னலமற்ற அன்பைக் காட்டும்படி சொன்னார். “நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றார். (யோவான் 13:34, 35) விரைவில் நடக்கவிருந்த சோகமான காரியங்களைக் கண்டு மனம் தளராதிருக்கும்படி அவர்களை உந்துவித்தார். அவர்களுக்காக இயேசு ஊக்கமாய் ஜெபம் செய்தார். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குப் புகழ் பாடிய பிறகு, அன்றிரவே கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார்கள்.
அங்கு இயேசு முழங்கால்படியிட்டு கடவுளிடம் உருக்கமாய் ஜெபம் செய்தார். சீக்கிரத்தில், குருக்களும் மற்றவர்களும் ஆயுதமேந்திய படைவீரர்களுடன் அவரைக் கைதுசெய்ய கும்பலாக அங்கு வந்தார்கள். அப்போது, இயேசுவை யூதாஸ் முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். படைவீரர்கள் இயேசுவைக் கைது செய்தார்கள்; அப்போஸ்தலர்களோ அங்கிருந்து ஓடிப்போனார்கள்.
யூதர்களின் உயர்நீதி மன்றத்தில் இயேசு நின்றபோது, தாமே கடவுளுடைய மகன் என்று கூறினார். தெய்வநிந்தனை செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டி, அந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்பு, ரோம அதிபதியான பொந்தியு பிலாத்துவிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இயேசு நிரபராதி என்பதை பிலாத்து தெரிந்துகொண்டபோதிலும் இயேசுவைக் கொலை செய்யும்படி கோஷம் எழுப்பிய மக்களிடமே அவரை ஒப்படைத்துவிட்டார்.
கொல்கொதா என்ற இடத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார். ரோம படைவீரர்கள் அவரைக் கழுமரத்தில் அறைந்தார்கள். அப்போது பகல் நேரமாக இருந்தபோதிலும் அற்புதகரமாக இருளடைந்தது. அன்று பிற்பகல் இயேசு இறந்தார்; அப்போது ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டானது. பின்பு அவருடைய உடல் ஒரு கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது. அடுத்த நாள், குருக்கள் வந்து அந்தக் கல்லறைக்கு முத்திரைபோட்டு காவலுக்கு ஆட்களையும் வைத்தார்கள். இயேசுவின் வாழ்க்கை அத்துடன் அஸ்தமித்துவிட்டதா? இல்லை. அற்புதத்திலேயே மாபெரும் அற்புதம் நிகழவிருந்தது.
—ஆதாரம்: மத்தேயு 26, 27 அதிகாரங்கள்; மாற்கு 14, 15அதிகாரங்கள்; லூக்கா 22, 23 அதிகாரங்கள், யோவான் 12–19அதிகாரங்கள்.
Comments
Post a Comment