வாழ்க்கைக்கு வழிகாட்டும் தெய்வீக ஞானம்

பைபிள் காலத்தில் ஜனங்கள் கதிர் பொறுக்குகிறார்கள்
 பகுதி 12

வாழ்க்கைக்கு வழிகாட்டும் தெய்வீக ஞானம்

நீதிமொழிகள் புத்தகம் இறைவனால் அருளப்பட்ட ஆலோசனைகள் அடங்கிய ஒரு தொகுப்பு; அன்றாட வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. பெரும்பாலான நீதிமொழிகளை சாலொமோனே எழுதினார்
யெகோவா ஞானமுள்ள ஆட்சியாளரா? இதைத் தெரிந்துகொள்வதற்கு, அவருடைய ஆலோசனைகளை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்த வழி. அவருடைய ஆலோசனைகள் பயனுள்ளவையா? அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்க்கைத் தரம் மேம்படுமா? வாழ்க்கை அர்த்தமுள்ளதாகுமா? ஞானியாகிய சாலொமோன் ராஜா நூற்றுக்கணக்கான நீதிமொழிகளை எழுதினார். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் இவற்றில் அடங்கியுள்ளன. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
இறைவன்மீது நம்பிக்கை. யெகோவாவுடன் நல்லுறவுக்கு நம்பிக்கை அவசியம். ‘முழு மனதோடு யெகோவாவை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்’ என்று சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 3:5, 6பொ.மொ.) ஒருவர் இறைவனின் வழிநடத்துதலைத் தேடி அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார். அப்படிச் செய்யும்போது அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது; இறைவனின் இருதயத்தை அவரால் மகிழ்விக்க முடிகிறது; அதோடு, சாத்தானின் சவால்களுக்கு யெகோவா பதிலடி கொடுக்க அவரால் உதவி செய்யவும் முடிகிறது.—நீதிமொழிகள் 27:11.
குடும்ப உறவுகள். கணவன், மனைவி, பிள்ளைகளுக்குக் கடவுள் தரும் ஆலோசனைகள் காலத்திற்கேற்ற ஆலோசனைகள். “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு,” அதாவது மனைவிக்குத் துரோகம் செய்யாதே, எனக் கணவனுக்குக் கடவுள் அறிவுறுத்துகிறார். (நீதிமொழிகள் 5:18-20) கணவன் மற்றும் பிள்ளைகளின் பாராட்டைப் பெற்ற திறமைசாலியான மனைவியை நீதிமொழிகள் புத்தகம் போற்றிப் புகழ்கிறது. (நீதிமொழிகள் 31-ஆம் அதிகாரம்) பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படி பிள்ளைகளுக்கு அறிவுரை தருகிறது. (நீதிமொழிகள் 6:20) நட்பின் முக்கியத்துவத்தையும் இப்புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. ஏனென்றால், தனிமை சுயநலத்திற்கு வழிநடத்தும். (நீதிமொழிகள் 18:1) நண்பர்கள் நம்மை நல்ல வழியிலோ தீய வழியிலோ கொண்டு செல்ல முடியும்; ஆகவே, நண்பர்களை ஞானமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டும்.—நீதிமொழிகள் 13:20; 17:17.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல். மிதமீறி குடிப்பதைத் தவிர்க்க... மனதைச் சாந்தமாக வைத்துக்கொள்ள... கடின உழைப்பாளியாக இருக்க... நீதிமொழிகள் புத்தகத்தில் பொன்னான ஆலோசனைகள் உள்ளன. (நீதிமொழிகள் 6:6;14:30; 20:1) இறைவனுடைய ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு மனிதனுடைய ஆலோசனையைப் பின்பற்றுவது ஆபத்தில் முடியுமென இப்புத்தகம் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 14:12) தீய சிந்தைகளிலிருந்து இருதயத்தைக் காத்துக்கொள்ள உத்வேகம் அளிக்கிறது; ஏனென்றால், ‘இருதயத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படுகிறது.’—நீதிமொழிகள் 4:23.
இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றும்போது வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது என்பதை உலகெங்கும் லட்சோபலட்சம் பேர் கண்டிருக்கிறார்கள். அதனால், யெகோவாவைத் தங்கள் ஆட்சியாளராக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

Comments