அப்போஸ்தலர்கள் தைரியமாகப் பிரசங்கிக்கிறார்கள்
பகுதி 22
அப்போஸ்தலர்கள் தைரியமாகப் பிரசங்கிக்கிறார்கள்
துன்புறுத்தல் மத்தியிலும் கிறிஸ்தவ சபை வேகமாக வளர்கிறது
இயேசு விண்ணுலகிற்குச் சென்று பத்து நாட்கள் கடந்தபின், கி.பி. 33 பெந்தெகொஸ்தே பண்டிகையன்று (யூதர்களின் பண்டிகை) அவருடைய சீடர்களில் சுமார் 120 பேர் எருசலேமில் ஒரு வீட்டில் கூடியிருந்தார்கள். திடீரென, வேகமாக காற்று வீசுவதைப் போன்ற ஒரு சப்தம் அந்த வீடெங்கும் எதிரொலித்தது. அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சீடர்கள் அந்நிய பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள். இந்த வினோதமான சம்பவங்களுக்குக் காரணம் என்ன? இறைவன் அந்தச் சீடர்களுக்குத் தமது சக்தியை அருளியிருந்தார்.
பண்டிகைக்காக அநேக நாடுகளிலிருந்து மக்கள் வந்திருந்ததால் அந்த வீட்டிற்கு வெளியே பெரிய கூட்டமே கூடியிருந்தது. தங்களுடைய சொந்த மொழிகளில் இயேசுவின் சீடர்கள் சரளமாகப் பேசுவதைக் கேட்டு அந்தக் கூட்டத்தார் ஆச்சரியப்பட்டார்கள். கடவுள் தமது சக்தியைப் ‘பொழிந்தருள்வார்’ என்று யோவேல் கூறிய தீர்க்கதரிசனத்தை பேதுரு அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். (யோவேல் 2:28, 29, பொ.மொ.) அந்தச் சக்தியைப் பெறுகிறவர்களுக்கு அற்புதமான வரங்கள் கொடுக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டார். தெய்வ சக்தியால் நடந்த இந்த அற்புதம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதற்குச் சாட்சியமாக இருந்தது; ஆம், அதுவரை இஸ்ரவேலருக்கு அருள்பாலித்து வந்த இறைவன் இனிமேல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு அருள்பாலிப்பார் என்பதற்குச் சாட்சியமாக இருந்தது. ஆகவே, கடவுளை அவருக்கு ஏற்ற முறையில் வழிபட விரும்புகிறவர்கள் இனிமேல் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டியிருந்தது.
இதற்கிடையில், எதிர்ப்பு அலைகள் வீசத் தொடங்கின; அப்போஸ்தலர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். ஆனால், யெகோவாவின் தூதர் இரவில் வந்து அவர்களை விடுதலை செய்து, தொடர்ந்து பிரசங்கிக்கும்படி கூறினார். பொழுது விடிந்ததும், அவர் சொன்னபடியே கோயிலுக்குச் சென்று இயேசுவைப் பற்றி அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அதைக் கண்டு மதத் தலைவர்கள் கொதித்தெழுந்து, அவர்களுடைய பிரசங்க வேலைக்குத் தடை விதித்தார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் சிறிதும் அஞ்சாமல், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள்.—அப்போஸ்தலர் 5:28, 29.
துன்புறுத்தல் தீவிரமடைந்தது. ஸ்தேவான் என்ற சீடர் தெய்வநிந்தனை செய்ததாகச் சொல்லி, யூதர்கள் சிலர் அவரைக் கல்லெறிந்து கொன்றார்கள். அருகே, தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல் என்ற இளைஞன் கைகட்டி நின்றுகொண்டிருந்தான். பிறகு, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைக் கைது செய்வதற்காக அவன் தமஸ்குவுக்குச் சென்றான். வழியில், வானத்திலிருந்து ஓர் ஒளி அவனைச் சுற்றி பிரகாசித்தது. “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பிரகாசமான ஒளியால் பார்வையிழந்த சவுல், “நீங்கள் யார்?” என்றான். “நீ துன்புறுத்துகிற இயேசு நானே” என்று அந்தக் குரல் சொன்னது.—அப்போஸ்தலர் 9:3-5.
மூன்று நாட்கள் கழித்து, அனனியா என்ற சீடரை அனுப்பி சவுலுக்கு இயேசு பார்வை அளித்தார். உடனே சவுல் ஞானஸ்நானம் பெற்று இயேசுவைப் பற்றி தைரியமாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அதன்பின் சவுல், அப்போஸ்தலன் பவுல் என்று அழைக்கப்பட்டார்; கிறிஸ்தவ சபையில் பக்திவைராக்கியமிக்க அங்கத்தினராக ஆனார்.
அதுவரை யூதருக்கும் சமாரியருக்கும் மட்டும்தான் இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தார்கள். ஆனால், இறைபக்தியுள்ள ரோம படைத்தலைவரான கொர்நேலியுவுக்கு ஒருநாள் தேவதூதர் தோன்றி, அப்போஸ்தலன் பேதுருவை அழைத்துவரும்படி அவரிடம் கூறினார். பேதுருவும் அவரோடு வந்தவர்களும் கொர்நேலியுவுக்கும் அவர் வீட்டாருக்கும் பிரசங்கித்தார்கள். பேதுரு பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது யூதரல்லாத அந்த ஜனங்கள்மீது கடவுளுடைய சக்தி வந்திறங்கியது. இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெறும்படி அவர்களிடம் பேதுரு கூறினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, என்றென்றும் வாழும் வாய்ப்பு எல்லா தேசத்தாருக்கும் திறக்கப்பட்டது. இந்த நல்ல செய்தியை எட்டுத்திக்கும் பரப்ப சபை தயாரானது.
—ஆதாரம்: அப்போஸ்தலர் 1:1–11:21.
Comments
Post a Comment