ஆபிரகாமுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்கிறார்- பகுதி 4
பகுதி 4
ஆபிரகாமுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்கிறார்
யெகோவாமீது ஆபிரகாம் நம்பிக்கை வைக்கிறார்; அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார். ஆபிரகாமுக்கு ஆசி வழங்குவதாகவும் அவருடைய சந்ததியைப் பெருகப் பண்ணுவதாகவும் யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்
ஜலப்பிரளயம் வந்து சுமார் 350 வருடங்கள் உருண்டோடிவிட்டன. அந்தச் சமயத்தில், ஊர் (இப்போது, ஈராக்கில் இருக்கிறது) என்ற செல்வச்செழிப்பான நகரத்தில் ஆபிரகாம் வாழ்ந்து வந்தார். ஆண்டவர்மீது அவர் அளவிலா நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அவருடைய நம்பிக்கைக்கு ஒரு சோதனை வந்தது.
பிறந்த மண்ணைவிட்டு வேறொரு இடத்திற்குப் போகச் சொல்லி ஆபிரகாமிடம் யெகோவா கூறினார்—அது கானான் தேசம் என்று பிற்பாடு அவருக்குத் தெரிய வந்தது. இருந்தாலும், மறுபேச்சின்றி யெகோவாவின் சொல்லுக்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். மனைவி சாராள், அண்ணன் மகன் லோத்து உள்ளிட, தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு அவ்விடம்விட்டுப் புறப்பட்டார். நீண்ட பயணத்திற்குப் பிறகு கானான் தேசத்தை வந்தடைந்தார்; அங்கே கூடாரங்களில் வசித்தார். அப்போது, ஆபிரகாமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார்; அவருடைய சந்ததியை ஒரு பெரிய தேசமாக்குவதாகச் சொன்னார். பூமியிலுள்ள எல்லா மக்களும் அவர் மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்... அவருடைய சந்ததியார் கானான் தேசத்தை ஆஸ்தியாகப் பெறுவார்கள்... என்று கூறினார்.
ஆபிரகாமும் லோத்துவும் செல்வந்தரானார்கள்; அவர்களுக்கு மந்தை மந்தையாக ஆடு மாடுகள் இருந்தன. லோத்துவே தனக்கு இஷ்டமான மேய்ச்சல் நிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி ஆபிரகாம் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். யோர்தான் நதிக்கு அருகிலிருந்த நிலம் செழிப்பாக இருந்ததால் லோத்து அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, சோதோம் என்ற பட்டணத்திற்கு அருகில் குடியேறினார். சோதோம் வாசிகளோ ஒழுக்கங்கெட்டவர்கள், யெகோவாவின் பார்வையில் பெரும் பாவிகள்.
ஆபிரகாமின் சந்ததியார் வானத்து நட்சத்திரங்களைப் போல் பெருகுவார்கள் என்று யெகோவா பிற்பாடு அவருக்கு உறுதியளித்தார். இறைவன் கொடுத்த வாக்குறுதியில் ஆபிரகாம் நம்பிக்கை வைத்தார். ஆனால், அவருடைய அன்பு மனைவி சாராள் மலடியாகவே இருந்தாள். பிற்பாடு, ஆபிரகாம் 99 வயதாகவும் சாராள் 89 வயதாகவும் இருந்தபோது, அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று யெகோவா கூறினார். கடவுள் சொன்னபடியே, சாராளுக்கு ஈசாக்கு என்ற மகன் பிறந்தான். ஆபிரகாமுக்கு வேறு குழந்தைகளும் பிறந்தனர். என்றாலும், ஏதேன் தோட்டத்தில் வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர் ஈசாக்கின் சந்ததியில்தான் வரவிருந்தார்.
இதற்கிடையில், லோத்துவும் அவர் குடும்பத்தினரும் சோதோமில் வசித்து வந்தார்கள்; நீதியும் நேர்மையும் உள்ள லோத்து அந்தப் பட்டணத்தாரைப் போல் ஒழுக்கங்கெட்டவராக மாறிவிடவில்லை. எனவே, சோதோம் பட்டணத்தை அழிக்க யெகோவா தீர்மானித்தபோது, அதைப் பற்றி லோத்துவுக்கு எச்சரிக்க தூதர்களை அனுப்பினார். திரும்பிப் பார்க்காமல் சோதோமைவிட்டு ஓடிப்போக வேண்டுமென லோத்துவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் தூதர்கள் சொன்னார்கள். பிறகு, வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் விழச்செய்து சோதோமையும் சீர்கெட்ட கொமோராவையும் கடவுள் அழித்தார். லோத்துவும் அவருடைய இரண்டு மகள்களும் உயிர்தப்பினார்கள். ஆனால், லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்துவிட்டாள்—ஒருவேளை தான் விட்டுவந்த பொருள்கள்மீது ஆசைப்பட்டு திரும்பிப் பார்த்திருக்கலாம். கீழ்ப்படியாததால் அவள் தன் உயிரையே இழந்தாள்.
—ஆதாரம்: ஆதியாகமம் 11:10–19:38.
Comments
Post a Comment