கதை 25: இந்தக் குடும்பம் எகிப்துக்கு குடிமாறிப் போகிறது

கதை 25: இந்தக் குடும்பம் எகிப்துக்கு குடிமாறிப் போகிறது

யோசேப்புவால் இனியும் தன் உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியவில்லை. தன் எல்லா வேலைக்காரர்களையும் அந்த அறையை விட்டு வெளியே போகும்படி சொல்கிறார். இப்போது அவருடைய சகோதரர்கள் மட்டும் இருக்கிறார்கள். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக அழத்தொடங்குகிறார். ஏன் அப்படி அழுகிறார் என்று தெரியாததால் அவருடைய சகோதரர்களுக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. கடைசியில் அவர்: ‘நான்தான் யோசேப்பு. அப்பா இன்னும் உயிரோடிருக்கிறாரா?’ என்று கேட்கிறார்.
அவருடைய சகோதரர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம், அப்படியே வாயடைத்து நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஆனால் யோசேப்பு: ‘தயவுசெய்து கிட்டே வாருங்கள்’ என்று சொல்கிறார். அவர்கள் கிட்டே வருகிறபோது, ‘நீங்கள் எகிப்துக்கு விற்றுப்போட்ட உங்கள் தம்பி யோசேப்பு நான்தான்’ என்று சொல்கிறார்.
யோசேப்பு தொடர்ந்து அன்பாக பேசுகிறார்: ‘நீங்கள் என்னை இங்கே விற்றுப்போட்டதற்காக உங்களை நீங்களே குற்றப்படுத்திக் கொள்ளாதீர்கள். மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உண்மையில் கடவுள்தான் என்னை இங்கே அனுப்பினார். பார்வோன் என்னை இந்த முழு தேசத்துக்கும் அதிபதியாக்கியிருக்கிறார். அதனால் சீக்கிரமாய் போய், என் அப்பாவிடம் நடந்ததைச் சொல்லுங்கள். அவரை இங்கே குடிமாறி வரச் சொல்லுங்கள்.’
அதன் பிறகு, யோசேப்பு தன்னுடைய சகோதரர்களைக் கட்டி அணைத்துக்கொண்டு அவர்கள் எல்லோரையும் முத்தமிடுகிறார். யோசேப்பின் சகோதரர்கள் வந்திருப்பதை பார்வோன் கேள்விப்பட்டதுமே, யோசேப்பிடம் அவர்: ‘வண்டிகளை எடுத்துக்கொண்டு போய் அவர்கள் தங்கள் அப்பாவையும் தங்கள் குடும்பங்களையும் இங்கே அழைத்து வரட்டும். எகிப்து முழுவதிலுமுள்ள நிலங்களிலேயே மிகச் சிறந்த நிலத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று சொல்கிறார்.
அவ்வாறே அவர்கள் செய்கிறார்கள். யாக்கோபு தன் முழு குடும்பத்துடனும் எகிப்துக்கு வருகிறார்; யோசேப்பு தன் அப்பாவைச் சந்திக்கிறார், அதை நீ இங்கே பார்க்கலாம்.
யாக்கோபின் குடும்பம் மிகப் பெரியதாகி இருந்தது. அவர்கள் எகிப்துக்கு இடம் மாறிய சமயத்தில் யாக்கோபையும் அவருடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் சேர்த்து மொத்தம் 70 பேர் இருந்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் மனைவிகளும் நிறைய வேலைக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் எகிப்தில் குடியேறினார்கள். இவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டார்கள், ஏனென்றால் கடவுள் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றியிருந்தார். நாம் பிற்பாடு பார்க்கப்போகிற பிரகாரம், இந்த இஸ்ரவேலர் கடவுளுடைய விசேஷ ஜனமாக ஆனார்கள்.
ஆதியாகமம் 45:1-28; 46:1-27.
யோசேப்பும் அவருடைய குடும்பமும்


கேள்விகள்

  • தான் யார் என்பதைத் தன் சகோதரர்களுக்கு யோசேப்பு தெரிவிக்கையில் என்ன நடக்கிறது?
  • தன் சகோதரர்களிடம் யோசேப்பு அன்பாக என்ன சொல்கிறார்?
  • யோசேப்பின் சகோதரர்கள் வந்திருப்பதைக் கேள்விப்படுகையில் பார்வோன் என்ன சொல்கிறார்?
  • எகிப்துக்கு இடம் மாறுகையில் யாக்கோபின் குடும்பம் எவ்வளவு பெரிதாயிருந்தது?
  • யாக்கோபின் குடும்பம் பிற்பாடு எப்படி அழைக்கப்பட்டது, ஏன்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 45:1-28-ஐ வாசி.தம் ஊழியர்களுக்குச் செய்யப்படும் தீமையை யெகோவாவால் நன்மையாக மாற்ற முடியும் என்பதை யோசேப்பின் இந்தச் சம்பவம் எப்படிக் காட்டுகிறது? (ஆதி. 45:5-8; ஏசா. 8:10; பிலி. 1:12-14)
  • ஆதியாகமம் 46:1-27-ஐ வாசி.எகிப்துக்குப் போகும் வழியில் யாக்கோபுக்கு யெகோவா எப்படி நம்பிக்கையூட்டுகிறார்? (ஆதி. 46:1-4, NWஅடிக்குறிப்பு)

Comments