எதிர்காலத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார்

ஒலிவ மலையில் இயேசு சில அப்போஸ்தலர்களோடு பேசுகிறார்
 பகுதி 19

எதிர்காலத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார்

தாம் அரசராக வீற்றிருக்கும் காலத்தையும், இந்த உலகத்தின் முடிவையும் அறிந்துகொள்வதற்கு இயேசு சில அடையாளங்களைக் கொடுக்கிறார்
இயேசுவும் அப்போஸ்தலர்களில் நான்கு பேரும் அழகிய எருசலேமையும் அதன் கோயிலையும் பார்த்தவாறு ஒலிவ மலையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது, இயேசு சொல்லியிருந்த சில விஷயங்களைப் பற்றி அப்போஸ்தலர்கள் அவரிடம் விளக்கம் கேட்டார்கள். ஏனென்றால், எருசலேமிலிருந்த கோயில் அழிக்கப்படும் என இயேசு சற்று முன்னர்தான் சொல்லியிருந்தார். அதோடு, ‘உலகத்தின் முடிவைப்’ பற்றி முன்னொரு சமயத்தில் அவர்களிடம் பேசியிருந்தார். (மத்தேயு 13:40, 49பொ.மொ.) எனவே, ‘உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அடையாளம் என்ன?’ என்று இயேசுவிடம் அவர்கள் கேட்டார்கள்.—மத்தேயு 24:3பொ.மொ.
அப்போது, எருசலேமின் அழிவிற்கு முன்பு என்ன நடக்கும் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார். அவருடைய வார்த்தைகளில் ஆழமான அர்த்தம் இருந்தது. அவர் கூறிய தீர்க்கதரிசனம் பிற்பாடு உலகமுழுவதிலும் பெரியளவில் நிறைவேற்றமடையும். இயேசு சில சம்பவங்களையும் உலக நிலைமைகளையும் அடையாளமாகக் கொடுத்தார். இந்த அடையாளத்தைப் பார்க்கும்போது, ராஜ மகிமையில் இயேசு வந்துவிட்டார் என்பதைப் பூமியில் இருப்பவர்கள் தெரிந்துகொள்வார்கள். வேறு வார்த்தையில் சொன்னால், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் அரசாங்கத்திற்கு இயேசுவை யெகோவா தேவன் ராஜாவாக நியமித்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அதோடு, இந்த அரசாங்கம் வெகு விரைவில் கெட்டவர்களை அழித்துவிட்டு, நல்லவர்களுக்கு உண்மையான சமாதானத்தை அளிக்கும் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சுருங்கச் சொன்னால், இயேசு சொன்ன சம்பவங்கள் இந்த உலகத்தின் முடிவுக்கும்—இன்றைய மத, அரசியல், சமூக அமைப்புகள் அடங்கிய உலகத்தின் முடிவுக்கும்—புதிய உலகின் பிறப்புக்கும் அடையாளமாக இருக்கும்.
விண்ணுலகில் தாம் ராஜ மகிமையில் வருகை தரும்போது மண்ணுலகில் என்னென்ன நடக்கும் என்று இயேசு விவரித்தார். அப்போது, உலகளவில் போர்கள், பஞ்சங்கள், பயங்கர பூமியதிர்ச்சிகள், நோய்கள் உண்டாகும், அக்கிரமம் அதிகரிக்கும். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இயேசுவின் உண்மை சீடர்கள் உலகெங்கும் அறிவிப்பார்கள். இவையெல்லாம் வரலாறு காணாத ‘மிகுந்த உபத்திரவத்தில்’ உச்சக்கட்டத்தை அடையும்.—மத்தேயு 24:21.
மிகுந்த உபத்திரவம் எப்போது வரும் என்பதை இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்? “அத்திமரத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 24:32) அத்திமரத்தில் இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைகாலம் வரப்போகிறது எனத் தெரிந்துகொள்ளலாம். அதுபோல், இயேசு கூறிய அனைத்தும் ஒரே காலகட்டத்தில் நடக்கும்போது முடிவு சமீபம் எனத் தெரிந்துகொள்ளலாம். மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும் நாளும் நாழிகையும் யெகோவாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனால்தான் இயேசு, “இதெல்லாம் நடக்கப்போகிற காலம் உங்களுக்குத் தெரியாததால் . . . விழிப்புடன் இருங்கள்” என்று சீடர்களை எச்சரித்தார்.—மாற்கு 13:33.

Comments