கதை 13: ஆபிரகாம் —கடவுளுடைய நண்பர்
கதை 13: ஆபிரகாம் —கடவுளுடைய நண்பர்
ஜலப்பிரளயத்திற்குப் பிறகு மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள், அந்த இடங்களில் ஒன்றுதான் ஊர் என்ற நகரம். அழகழகான வீடுகள் இருந்த ஒரு முக்கிய நகரம் அது. ஆனால் அங்கிருந்த மக்கள் பொய்க் கடவுட்களை வணங்கி வந்தார்கள். பாபேலில் இருந்த மக்களும் அப்படித்தான் செய்து வந்தார்கள். யெகோவாவை சேவித்துவந்த நோவாவையும் அவருடைய மகன் சேமையும் போல அவர்கள் இருக்கவில்லை.
விசுவாசமிக்க நோவா ஜலப்பிரளயத்திற்குப் பின் 350 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவர் இறந்து இரண்டே வருஷங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் நீ பார்க்கிற மனிதர் பிறந்தார். இவர் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். இவருடைய பெயர் ஆபிரகாம். இவர் ஊர் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் ஆபிரகாமிடம் யெகோவா: ‘இந்த ஊர் நகரத்தையும் உன் சொந்தக்காரரையும் விட்டு நான் உனக்குக் காட்டப்போகிற நாட்டுக்குப் போ’ என்று சொன்னார். ஆபிரகாம், ஊர் நகரத்தில் தனக்கிருந்த சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து சென்றாரா? ஆம், அவர் சென்றார். ஆபிரகாம் எப்பொழுதும் கடவுளுக்கு கீழ்ப்படிந்ததால்தான் கடவுளுடைய நண்பர் என்று அழைக்கப்பட்டார்.
ஊர் நகரத்தை விட்டு ஆபிரகாம் புறப்பட்டபோது அவருடைய குடும்பத்திலிருந்த சிலரும் அவரோடு போனார்கள். அவருடைய அப்பா தேராகுவும், அண்ணன் மகன் லோத்துவும் அவருடன் போனார்கள். ஆபிரகாமின் மனைவி சாராளும்தான் அவரோடு போனாள். காலப்போக்கில் அவர்கள் எல்லோரும் ஆரான் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே தேராகு இறந்துபோனார். அந்த இடம் ஊர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது.
கொஞ்ச காலத்திற்குப் பின் ஆபிரகாமும் அவருடைய வீட்டாரும் ஆரானை விட்டு கானான் என்ற தேசத்திற்கு போனார்கள். அங்கே ஆபிரகாமிடம்: ‘இந்தத் தேசத்தையே நான் உன் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன்’ என்று யெகோவா சொன்னார். கானான் தேசத்தில் ஆபிரகாம் கூடாரங்களில் வாழ்ந்தார்.
ஆபிரகாமுக்கு கடவுள் உதவி செய்ய தொடங்கினார். அதனால் அவர் மந்தை மந்தையாய் ஏகப்பட்ட செம்மறியாடுகளையும் மற்ற மிருகங்களையும், நூற்றுக்கணக்கான வேலைக்காரரையும் பெற்றார். ஆனால் ஒரு குறை, அவருக்கும் சாராளுக்கும் பிள்ளைகள் இல்லை.
ஆபிரகாமுக்கு 99 வயது இருக்கும்போது அவரிடம் யெகோவா: ‘பல ஜாதிகளான மக்களுக்கு நீ தகப்பனாவாய் என்று உனக்கு வாக்குக் கொடுக்கிறேன்’ என சொன்னார். ஆனால் அவர்கள் கிழவனும் கிழவியுமாக இருந்தார்கள். அப்படியானால் ஒரு பிள்ளையை அவர்களால் எப்படிப் பெற்றெடுக்க முடியும்?
ஆதியாகமம் 11:27-32; 12:1-7; 17:1-8, 15-17; 18:9-19.
கேள்விகள்
- ஊர் என்ற நகரத்தில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள்?
- படத்தில் பார்க்கிற மனிதர் யார், அவர் எப்போது பிறந்தார், எங்கு வாழ்ந்து வந்தார்?
- ஆபிரகாமை கடவுள் என்ன செய்யச் சொன்னார்?
- கடவுளுடைய நண்பர் என்று ஆபிரகாம் ஏன் அழைக்கப்பட்டார்?
- ஊர் நகரத்தை விட்டு ஆபிரகாம் புறப்பட்டபோது யாரெல்லாம் அவரோடு போனார்கள்?
- கானான் தேசத்திற்கு வந்த பிறகு ஆபிரகாமிடம் கடவுள் என்ன சொன்னார்?
- ஆபிரகாமுக்கு 99 வயது இருக்கையில் அவருக்குக் கடவுள் என்ன வாக்குக் கொடுத்தார்?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 11:27-32-ஐ வாசி.(அ) ஆபிரகாமுக்கு லோத்து எப்படிச் சொந்தம்? (ஆதி. 11:27)
(ஆ) கானான் தேசத்துக்குக் குடும்பத்தாரை அழைத்து வந்தது தேராகுதான் என சொல்லப்பட்டிருக்கிற போதிலும் உண்மையில் இதற்கு முயற்சி எடுத்தவர் ஆபிரகாமே என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம், அவர் ஏன் அப்படிச் செய்தார்? (ஆதி. 11:31; அப். 7:2-4) - ஆதியாகமம் 12:1-7-ஐ வாசி.கானான் தேசத்திற்கு ஆபிரகாம் வந்த பிறகு அவரோடு செய்த உடன்படிக்கையைப் பற்றிய என்ன கூடுதல் விவரத்தை யெகோவா அளித்தார்? (ஆதி. 12:7)
- ஆதியாகமம் 17:1-8, 15-17-ஐ வாசி.(அ) ஆபிராமுக்கு 99 வயது இருக்கையில் அவருடைய பெயர் எப்படி மாற்றப்பட்டது, ஏன்? (ஆதி. 17:5)
(ஆ) என்ன எதிர்கால ஆசீர்வாதங்களைத் தருவதாக சாராளுக்கு யெகோவா வாக்குக் கொடுத்தார்? (ஆதி. 17:15, 16) - ஆதியாகமம் 18:9-19-ஐ வாசி.(அ) ஆதியாகமம் 18:19-ல் அப்பாமாருக்கு என்ன பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன? (உபா. 6:6, 7; எபே. 6:4)
(ஆ) யெகோவாவின் கண்களுக்கு நாம் எதையும் மறைக்க முடியாது என்பதை சாராளின் எந்த அனுபவம் காட்டுகிறது? (ஆதி. 18:12, 15; சங். 44:21)
Comments
Post a Comment