கதை 15: லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்தாள்

கதை 15: லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்தாள்

லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் ஆபிரகாமுடன் கானான் தேசத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் ஆபிரகாம் லோத்துவிடம், ‘நம்முடைய மிருகங்கள் எல்லாவற்றிற்கும் இங்கே போதிய நிலம் இல்லை. தயவுசெய்து, நாம் பிரிந்துபோகலாம். நீ ஒரு பக்கம் போனால் நான் வேறொரு பக்கம் போகிறேன்’ என்று சொன்னார்.
எனவே, லோத்து தேசத்தைப் பார்வையிட்டார். தனது மிருகங்களுக்குத் தண்ணீரும் ஏராளமான புல்லும் இருந்த மிக நல்ல ஒரு இடத்தை அங்கே கண்டார். அது யோர்தான் நிலப்பகுதியாக இருந்தது. லோத்து தன்னுடைய குடும்பத்தையும் மிருகங்களையும் கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்குப் போனார். கடைசியாக அங்கிருந்த சோதோம் நகரில் குடியேறினார்.
சோதோம் நகரத்தார் ரொம்ப ரொம்ப கெட்ட ஜனங்களாக இருந்தார்கள். இதனால் லோத்து மிகுந்த மனவேதனை அடைந்தார், ஏனென்றால் அவர் நல்லவராக இருந்தார். சோதோம் நகரத்தாரைப் பார்த்து கடவுளும்கூட மனவேதனைப்பட்டார். சோதோம் நகரமும் அதற்கு அருகிலிருந்த கொமோரா நகரமும் இப்படிக் கெட்டுப்போய் இருந்ததால் அவற்றை அழிக்கப்போவதாக லோத்துவிடம் அவர் எச்சரித்தார்; அதற்காக இரண்டு தேவதூதர்களை அவரிடம் அனுப்பினார்.
இந்தத் தூதர்கள் லோத்துவிடம், ‘சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு!’ என்று சொன்னார்கள். லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் அந்த இடத்தைவிட்டு போவதற்கு நேரம் கடத்திக்கொண்டே இருந்தார்கள். அதனால் அந்தத் தூதர்கள் அவர்கள் கைகளைப் பிடித்து அந்த நகரத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். இந்தத் தூதர்களில் ஒருவர்: ‘சீக்கிரம், இங்கிருந்து ஓடிவிடுங்கள், திரும்பிப் பார்த்துவிடாதீர்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மலைகளுக்கு ஓடிப்போங்கள்’ என்று சொன்னார்.
லோத்துவும் அவருடைய மகள்களும் அதற்குக் கீழ்ப்படிந்து சோதோமை விட்டு ஓட்டம் பிடித்தார்கள், ஒரு நிமிஷம்கூட அங்கு நிற்கவில்லை, திரும்பிப் பார்க்காமல் ஓடினார்கள். ஆனால் லோத்துவின் மனைவி கீழ்ப்படியாமல் போனாள். சோதோமை விட்டு சிறிது தூரம் வந்ததும், ஏக்கத்தோடு அவள் திரும்பிப் பார்த்தாள். பார்த்த மறுகணமே உப்புத் தூண் ஆனாள். இந்தப் படத்தில் அவளை உன்னால் பார்க்க முடிகிறதா?
இதிலிருந்து நாம் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் காப்பாற்றப்படுவார்கள், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களோ நிச்சயம் அழிக்கப்பட்டுப் போவார்கள்.
ஆதியாகமம் 13:5-13; 18:20-33; 19:1-29; லூக்கா 17:28-32; 2 பேதுரு 2:6-8.
லோத்து சோதோமைவிட்டு ஓடுகிறார்


கேள்விகள்

  • ஆபிரகாமும் லோத்துவும் ஏன் பிரிந்து போனார்கள்?
  • லோத்து ஏன் சோதோமில் குடியேற தீர்மானித்தார்?
  • சோதோம் நகரத்தார் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
  • இரண்டு தேவதூதர்கள் லோத்துவுக்கு என்ன எச்சரிப்பு கொடுத்தார்கள்?
  • லோத்துவின் மனைவி ஏன் உப்புத்தூண் ஆனாள்?
  • லோத்துவின் மனைவியுடைய விஷயத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 13:5-13-ஐ வாசி.தனி நபர்களுக்கு இடையேயுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது சம்பந்தமாக ஆபிரகாமிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 13:8, 9; ரோ. 12:10; பிலி. 2:3, 4)
  • ஆதியாகமம் 18:20-33-ஐ வாசி.ஆபிரகாமிடம் யெகோவா நடந்துகொண்ட விதம், யெகோவாவும் இயேசுவும் நீதியாக நியாயந்தீர்ப்பார்கள் என்ற உறுதியை நமக்கு எப்படி அளிக்கிறது? (ஆதி. 18:25, 26; மத். 25:31-33)
  • ஆதியாகமம் 19:1-29-ஐ வாசி.(அ) ஓரினப்புணர்ச்சியை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் பற்றி இந்த பைபிள் பதிவு என்ன காட்டுகிறது? (ஆதி. 19:5, 13; லேவி. 20:13)
    (ஆ) கடவுளுடைய கட்டளைக்கு லோத்துவும் ஆபிரகாமும் பிரதிபலித்த விதங்களில் என்ன வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 19:15, 16, 19, 20; 22:3)
  • லூக்கா 17:28-32-ஐ வாசி.சொத்துபத்துகள் மீது லோத்துவின் மனைவிக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தது, இது நமக்கு ஏன் ஓர் எச்சரிப்பாக இருக்கிறது? (லூக். 12:15; 17:31, 32; மத். 6:19-21, 25)
  • இரண்டு பேதுரு 2:6-8-ஐ வாசி.லோத்துவைப் போல், நம்மைச் சுற்றியுள்ள தெய்வ பக்தியற்ற இந்த உலகத்தைக் குறித்து எப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும்? (எசே. 9:4; 1 யோ. 2:15-17)

Comments