கதை 16: ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்
கதை 16: ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்
இந்தப் படத்திலுள்ள பெண் யார் என்று உனக்குத் தெரியுமா? அவளுடைய பெயர் ரெபெக்காள். அவள் இப்போது ஈசாக்கை பார்க்கவே வந்து கொண்டிருக்கிறாள். அவள் ஈசாக்கின் மனைவியாகப் போகிறாள், எப்படி?
தன்னுடைய மகன் ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவியைத் தேடிக் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் ஆசைப்பட்டார். கானானியப் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கு கல்யாணம் செய்து வைக்க அவர் விரும்பவில்லை, ஏனென்றால் கானானியர்கள் பொய்க் கடவுட்களை வணங்கி வந்தார்கள். எனவே, ஆபிரகாம் தன் வேலைக்காரனை அழைத்து, ‘ஆரானில் என் சொந்தக்காரர் வாழ்கிற இடத்துக்கு போய் என் மகன் ஈசாக்கிற்கு ஒரு பெண்ணைப் பார்த்து கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார்.
அந்த வேலைக்காரனும் உடனடியாக பத்து ஒட்டகங்களோடு தூரமான அந்தத் இடத்திற்கு கிளம்பினான். அந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்தபோது ஒரு கிணற்றின் அருகே சற்று நின்றான். அது சாயங்கால நேரம். அந்த நேரத்தில்தான் அங்குள்ள பெண்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வருவார்கள். எனவே, யெகோவாவிடம் அவன்: ‘எனக்கும் இந்த ஒட்டகங்களுக்கும் எந்தப் பெண் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறாளோ அந்தப் பெண்ணே நீர் ஈசாக்கிற்கு மனைவியாகத் தெரிந்தெடுக்கிற பெண்ணாக இருக்கட்டும்’ என்று மனதிற்குள் ஜெபித்தான்.
சீக்கிரத்தில் ரெபெக்காள் தண்ணீர் எடுக்க வந்தாள். குடிக்க தனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டுமென இந்த வேலைக்காரன் கேட்டதுமே அவள் தண்ணீர் கொடுத்தாள். அதன் பின், தாகமாயிருந்த அவனுடைய எல்லா ஒட்டகங்களுக்கும் வேண்டியளவு தண்ணீரை மொண்டு ஊற்றினாள். இது கஷ்டமான வேலை, ஏனென்றால் ஒட்டகங்கள் பொதுவாக வயிறுமுட்ட நிறைய தண்ணீர் குடிக்கும்.
ரெபெக்காள் தண்ணீர் ஊற்றி முடித்தபோது அந்த வேலைக்காரன் அவளுடைய அப்பாவின் பெயர் என்னவென்று கேட்டான். கேட்டதோடு, அவர்களுடைய வீட்டில் அன்று ராத்திரி தங்கலாமா என்றும் கேட்டான். அதற்கு அவள்: ‘என் அப்பாவின் பெயர் பெத்துவேல், தாராளமாக நீங்கள் எங்களோடு தங்கலாம், போதுமான இடம் இருக்கிறது’ என்று சொன்னாள். ஆபிரகாமின் அண்ணனான நாகோரின் மகன்தான் பெத்துவேல் என்பது அந்த வேலைக்காரனுக்குத் தெரிந்திருந்தது. அதனால், ஆபிரகாமின் சொந்தக்காரரின் வீட்டிற்கே தன்னை வழிநடத்தியதற்காக அவன் முழங்காற்படியிட்டு யெகோவாவுக்கு நன்றி சொன்னான்.
அன்றைக்கு ராத்திரி ஆபிரகாமின் வேலைக்காரன் தான் வந்த காரணத்தைப் பற்றி பெத்துவேலிடமும் ரெபெக்காளின் அண்ணன் லாபானிடமும் சொன்னான். ரெபெக்காள் அந்த வேலைக்காரனோடு சென்று ஈசாக்கை கல்யாணம் செய்துகொள்ள அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அவனோடு போக சம்மதமா என ரெபெக்காளைக் கேட்டபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா? ‘சம்மதம்’ என்று சொன்னாள். ஆக, அடுத்த நாளே அவர்கள் ஒட்டகங்களில் ஏறி, கானான் தேசத்துக்குப் புறப்பட்டார்கள்.
அவர்கள் கானான் தேசத்தை வந்து சேருவதற்கு சாயங்காலம் ஆயிற்று. வயல்வெளியில் ஒருவர் உலாவிக் கொண்டிருந்ததை ரெபெக்காள் பார்த்தாள், அவர் ஈசாக்கேதான். ரெபெக்காளைப் பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம். அவருடைய அம்மா சாராள் மரித்து மூன்று வருஷங்கள்தான் ஆகியிருந்தது, இன்னும் அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது ரெபெக்காளைப் பார்த்ததிலிருந்து அவளை மிக அதிகமாக நேசிக்கத் தொடங்கினார், அவருடைய துக்கமெல்லாம் போனது; மீண்டும் சந்தோஷமுள்ளவராக ஆனார்.
ஆதியாகமம் 24:1-67.
கேள்விகள்
- படத்திலுள்ள ஆணும் பெண்ணும் யார்?
- தன் மகனுக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுப்பதற்காக ஆபிரகாம் என்ன செய்தார், ஏன்?
- ஆபிரகாமின் வேலைக்காரனுடைய ஜெபம் எப்படிக் கேட்கப்பட்டது?
- ஈசாக்கை கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா என கேட்டதற்கு ரெபெக்காள் என்ன சொன்னாள்?
- ஈசாக்கு மீண்டும் சந்தோஷமுள்ளவராக ஆனது எப்படி?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 24:1-67-ஐ வாசி.(அ) கிணற்றருகே ஆபிரகாமின் வேலைக்காரனைப் பார்த்தபோது ரெபெக்காள் என்ன சிறந்த குணங்களை வெளிக்காட்டினாள்? (ஆதி. 24:17-20; நீதி. 31:17, 31)
(ஆ) ஈசாக்கிற்கு ஆபிரகாம் செய்த ஏற்பாடு இன்றைய கிறிஸ்தவர்களுக்கு என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறது? (ஆதி. 24:37, 38; 1 கொ. 7:39; 2 கொ. 6:14)(இ) ஈசாக்கைப் போல தியானிப்பதற்கு நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்? (ஆதி. 24:63; சங். 77:12; பிலி. 4:8)
Comments
Post a Comment