கதை 19: யாக்கோபுக்கு ஒரு பெரிய குடும்பம்

கதை 19: யாக்கோபுக்கு ஒரு பெரிய குடும்பம்

யாக்கோபும் அவருடைய மகன்களும்
இந்தப் பெரிய குடும்பத்தைக் கொஞ்சம் பார். இவர்கள் யாக்கோபின் 12 மகன்கள். யாக்கோபுக்கு மகள்களும் இருந்தார்கள். இந்தப் பிள்ளைகளில் சிலருடைய பெயர் உனக்குத் தெரியுமா? இவர்களுடைய சில பெயர்களை நாம் இப்போது கற்றுக்கொள்ளலாம்.
ரூபன், சிமியோன், லேவி, யூதா ஆகியவர்களை லேயாள் பெற்றாள். ராகேலுக்கோ பிள்ளைகள் இல்லாததால் அவள் மிகவும் விசனமாக இருந்தாள். எனவே, தன் வேலைக்காரி பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். பில்காளுக்கு தாண், நப்தலி என்ற இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பின்பு லேயாளும் தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். காத், ஆசேர் என்ற இரண்டு மகன்களை சில்பாள் பெற்றாள். கடைசியாக இசக்கார், செபுலோன் என்ற இரண்டு மகன்களையும் லேயாள் பெற்றாள்.
அதுவரை பிள்ளைகளே இல்லாதிருந்த ராகேலும் கடைசியில் ஒரு பிள்ளையைப் பெற்றாள், அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். யோசேப்பைப் பற்றி பிற்பாடு இன்னும் நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம், ஏனென்றால் அவர் மிக முக்கியமான ஓர் ஆளானார். ஆக, இவர்கள்தான் யாக்கோபுக்கு பிறந்த 11 மகன்கள்; இவர்கள் ராகேலின் தகப்பன் லாபானோடு யாக்கோபு தங்கியிருந்தபோது பிறந்தவர்கள்.
யாக்கோபுக்குச் சில மகள்களும் இருந்தார்கள், ஆனால் ஒரு மகளின் பெயர் மாத்திரமே பைபிளில் இருக்கிறது. அவளுடைய பெயர் தீனாள்.
லாபானை விட்டுப் பிரிந்து கானான் தேசத்துக்குத் திரும்பிச் செல்ல யாக்கோபு தீர்மானித்தார். எனவே, தன் பெரிய குடும்பத்தையும் மந்தை மந்தையாக இருந்த தன் ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம் ஆகியவற்றையும் ஒன்றாகக் கூட்டிக்கொண்டு இந்த நீண்ட பிரயாணத்தைத் தொடங்கினார்.
யாக்கோபும் அவருடைய குடும்பமும் கானானுக்குத் திரும்பிப்போய் கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவர்கள் ஏதோவொரு இடத்திற்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ராகேல் மற்றொரு மகனைப் பெற்றாள். ராகேலுக்குப் பிரசவம் கஷ்டமாக இருந்தது, கடைசியில், பிள்ளை பிறக்கும்போது அவள் இறந்துபோனாள். ஆனால் அந்த ஆண் குழந்தை நல்லபடியாக இருந்தது. யாக்கோபு அதற்கு பென்யமீன் என்று பெயர் வைத்தார்.
யாக்கோபின் இந்த 12 மகன்களுடைய பெயர்களை நாம் நினைவில் வைக்க வேண்டும், ஏனெனில் இஸ்ரவேல் ஜனத்தார் எல்லோரும் இவர்களிலிருந்தே வந்தார்கள். சொல்லப்போனால், யாக்கோபின் 10 மகன்களுடைய பெயர்களும் யோசேப்பின் இரண்டு மகன்களுடைய பெயர்களுமே இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாருக்கும் வைக்கப்பட்டது. இந்தப் பையன்களெல்லாம் பிறந்து பல ஆண்டுகளுக்கு ஈசாக்கு உயிரோடிருந்தார். ஏகப்பட்ட பேரப் பிள்ளைகள் இருந்தது அவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் அவருடைய பேத்தி தீனாளுக்கு என்ன நடந்ததென்று இப்போது பார்க்கலாம்.
ஆதியாகமம் 29:32-35; 30:1-26; 35:16-19; 37:35.


கேள்விகள்

  • யாக்கோபின் முதல் மனைவியான லேயாள் பெற்றெடுத்த ஆறு மகன்களின் பெயர் என்ன?
  • யாக்கோபுக்கு லேயாளின் வேலைக்காரியான சில்பாள் பெற்றெடுத்த இரண்டு மகன்கள் யார்?
  • ராகேலின் வேலைக்காரியான பில்காள், யாக்கோபுக்குப் பெற்றெடுத்த இரண்டு மகன்களின் பெயர் என்ன?
  • ராகேல் பெற்றெடுத்த இரண்டு மகன்கள் யார், இரண்டாவது மகன் பிறந்த சமயத்தில் அவளுக்கு என்ன நேர்ந்தது?
  • படத்தில் பார்க்கிறபடி யாக்கோபுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள், இவர்களிலிருந்து யார் வந்தார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 29:32-35; 30:1-26; 35:16-19-ஐ வாசி.யாக்கோபின் 12 குமாரர்களுடைய விஷயத்தில் பார்க்கிறபடி, பூர்வ காலங்களில் எபிரெய ஆண் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் எப்படிப் பெயர் வைக்கப்பட்டது?
  • ஆதியாகமம் 37:35-ஐ வாசி.தீனாளுடைய பெயர் மட்டுமே பைபிளில் கொடுக்கப்பட்டிருந்தாலும், யாக்கோபுக்கு இன்னும் அதிகமான மகள்கள் இருந்தார்கள் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? (ஆதி. 37:34, 35)

Comments