ஆறுதலும் கருத்தும் நிறைந்த தெய்வீகப் பாடல்கள்

தாவீது யாழை வாசித்துப் பாட்டு பாடுகிறார்
 பகுதி 11

ஆறுதலும் கருத்தும் நிறைந்த தெய்வீகப் பாடல்கள்

தாவீதும் மற்றவர்களும் பக்திப் பாடல்கள் இயற்றுகிறார்கள். அவற்றில் 150 பாடல்கள் சங்கீத புத்தகத்தில் பதிவாகியுள்ளன
பக்திப் பாடல்கள் நிறைந்த சங்கீத புத்தகம்தான் பைபிளில் மிகப் பெரிய புத்தகம். சுமார் 1,000 வருட காலப்பகுதியில் இயற்றப்பட்ட பாடல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இதுவரை இயற்றப்பட்ட பாடல்களிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள... நெஞ்சைத் தொடுகிற... நம்பிக்கையை வெளிப்படுத்துகிற... பாடல்கள் இப்புத்தகத்தில்தான் இடம்பெறுகின்றன. மனிதருடைய பல்வகை உணர்ச்சிகளை இவை எதிரொலிக்கின்றன. சந்தோஷப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், நன்றிப் பாடல்கள், சோகப் பாடல்கள், மனமாற்றத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் எனப் பல்வகை பாடல்கள் இந்தச் சங்கீத புத்தகத்தில் பதிவாகியுள்ளன. இவற்றை இயற்றியவர்கள் இறைவனிடம் உண்மையான பற்றுள்ளவர்கள், நெருங்கிய பந்தமுள்ளவர்கள் என்பதை அந்தப் பாடல்களே பறைசாற்றுகின்றன. அந்தப் பாடல்களில் பொதிந்துள்ள முக்கியமான சில பொருள்களைக் கவனியுங்கள்.
யெகோவா மட்டுமே உரிமையுள்ள உன்னத அரசர், அவரே துதிக்கும் தோத்திரத்திற்கும் பாத்திரமானவர். ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்’ என சங்கீதம் 83:17-ல் வாசிக்கிறோம். சங்கீத புத்தகத்திலுள்ள அநேக பாடல்கள் யெகோவாவின் படைப்புகளுக்குப் புகழாரம் சூட்டுகின்றன; உதாரணமாக, நட்சத்திர வானத்தையும், பூமியில் வாழும் அற்புத உயிரினங்களையும், மனித உடலின் மகத்துவங்களையும் போற்றிப் புகழ்கின்றன. (சங்கீதம் 8, 19,139, 148) சில பாடல்கள், விசுவாசமாய் இருப்பவர்களைக் காக்கும் கடவுளாக யெகோவாவைப் புகழ்ந்து பாடுகின்றன. (சங்கீதம் 18, 97, 138) இன்னும் சில, ஒடுக்கப்படுவோருக்கு ஆறுதலையும் தீயோருக்குத் தண்டனையையும் வழங்கும் நீதி தேவனாக அவரை மகிமைப்படுத்துகின்றன.—சங்கீதம் 11, 68, 146.
யெகோவா தம்மை நேசிப்போருக்கு ஆதரவும் ஆறுதலும் அளிக்கிறார். தாவீது இயற்றிய 23-ஆம் சங்கீதம் மிகவும் பிரபலமான சங்கீதம் என்று சொல்லலாம். ஆடுகளை வழிநடத்தி, பாதுகாத்து, கவனித்துக்கொள்ளும் அன்புள்ள மேய்ப்பராக யெகோவாவை தாவீது வர்ணிக்கிறார். யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை சங்கீதம் 65:2நினைப்பூட்டுகிறது. கொடிய பாவம் செய்தவர்களுக்கு 39-ஆம் சங்கீதமும் 51-ஆம் சங்கீதமும் மிகுந்த ஆறுதல் அளிக்கின்றன. பெருங்குற்றங்கள் செய்த தாவீதின் உள்ளக்குமுறல்களும், மன்னிப்பு கேட்டு யெகோவாவிடம் அவர் செய்த உருக்கமான ஜெபங்களும் அந்தச் சங்கீதங்களில் பதிவாகியுள்ளன. யெகோவாமீது நம்பிக்கை வைத்து, எல்லா பாரங்களையும் அவர்மீது போட்டுவிடும்படி சங்கீதம் 55:22 உற்சாகப்படுத்துகிறது.
மேசியாவின் அரசாங்கம் மூலம் யெகோவா இந்த உலகத்தை மாற்றுவார். சங்கீத புத்தகத்திலுள்ள அநேக பகுதிகள் மேசியாவுக்கே, அதாவது முன்னறிவிக்கப்பட்ட ராஜாவுக்கே, பொருந்துகின்றன. தம்மை எதிர்க்கிற தேசங்களை இந்த ராஜா அழித்துப்போடுவார் என்று 2-ஆம் சங்கீதம் சொல்கிறது. பசி பட்டினி, அநீதி, ஒடுக்குதல் ஆகியவற்றுக்கு இவர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று 72-ஆம் சங்கீதம் ஆறுதல் அளிக்கிறது. மேசியாவின் அரசாங்கத்தின் மூலம் போர்களையும் போர்க் கருவிகளையும் கடவுள் ஒழித்துவிடுவார் என்று சங்கீதம் 46:9உறுதியளிக்கிறது. துஷ்டர்கள் துடைத்தழிக்கப்படுவார்கள், நல்லவர்களோ இதே பூமியில் சதாகாலம் வாழ்வார்கள், சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிப்பார்கள் என்று 37-ஆம் சங்கீதம் நம்பிக்கை கொடுக்கிறது.

Comments