கதை 22: யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்

கதை 22: யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்

எகிப்துக்குக் கொண்டு போகும்போது யோசேப்புக்கு 17 வயதுதான். அங்கே போத்திபார் என்ற ஓர் ஆளிடம் அவன் விற்கப்படுகிறான். போத்திபார் என்பவன் பார்வோன் என்றழைக்கப்படுகிற எகிப்திய ராஜாவிடம் வேலை செய்பவன்.
யோசேப்பு சிறையில்
யோசேப்பு தன் எஜமானரான போத்திபாருக்காக மாடாய் உழைக்கிறான். அவன் பெரியவனாக ஆனபோது, போத்திபார் தன் முழு வீட்டையும் கவனிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறான். அப்படியானால், யோசேப்பு இப்போது ஏன் சிறையில் இருக்கிறான்? போத்திபாரின் மனைவியே இதற்குக் காரணம்.
யோசேப்பு பெரியவனாக வளர்ந்து ரொம்ப அழகான வாலிபனாக ஆகிறான். அவன் தன்னோடு படுக்க வேண்டுமென்று போத்திபாரின் மனைவி விரும்புகிறாள். ஆனால் இது தவறு என்று யோசேப்பு அறிந்திருந்ததால், அப்படிச் செய்ய மறுக்கிறான். அதனால் போத்திபாரின் மனைவி கோபமடைகிறாள். தன் கணவன் வீட்டுக்கு வந்ததுமே அவனிடம்: ‘அந்தக் கெட்ட யோசேப்பு என்னோடு படுக்க முயற்சி செய்தான்’ என்று பொய் சொல்கிறாள். போத்திபார் தன் மனைவி சொல்வதை நம்பி யோசேப்பின் மீது கடுங்கோபங்கொண்டு அவனைச் சிறையில் அடைக்கிறான்.
சிறைச்சாலை அதிகாரி, யோசேப்பு நல்லவன் என்பதை அறிந்து மற்ற எல்லாக் கைதிகளையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்குக் கொடுக்கிறான். பிற்பாடு, பார்வோன் தன் பானபாத்திரக்காரன் மீதும் ரொட்டி சுடுகிறவன் மீதும் கோபப்பட்டு அவர்களைச் சிறையிலே தள்ளுகிறான். ஓர் இரவு அவர்கள் இருவரும் வித்தியாசமான கனவுகளைக் காண்கிறார்கள். ஆனால் தாங்கள் கண்ட கனவுகளின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியவில்லை. அடுத்த நாள் யோசேப்பு: ‘உங்கள் கனவுகளை எனக்குச் சொல்லுங்கள்’ என்கிறான். அவர்கள் சொல்கிறார்கள்; பிறகு, கடவுளுடைய உதவியால் அவர்களுடைய கனவுகளின் அர்த்தத்தை யோசேப்பு விளக்குகிறான்.
பானபாத்திரக்காரனிடம்: ‘இன்னும் மூன்று நாட்களில் நீ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, மறுபடியும் பார்வோனின் பானபாத்திரக்காரனாவாய், அப்பொழுது நீ என்னைப் பற்றி பார்வோனிடம் சொல்லி, இங்கிருந்து என்னை விடுவிக்க உதவி செய்ய வேண்டும்’ என்கிறான். ஆனால் ரொட்டி சுடுபவனிடம்: ‘இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டிவிடுவான்’ என்று சொல்கிறான்.
மூன்று நாட்களுக்குப் பின் யோசேப்பு சொன்னபடியே நடக்கிறது. ரொட்டி சுடுபவனின் தலையை பார்வோன் வெட்டிவிடுகிறான். பானபாத்திரக்காரனோ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் பார்வோனுக்கு வேலை செய்யத் தொடங்குகிறான். ஆனால் அந்தப் பானபாத்திரக்காரன் யோசேப்பைப் பற்றி சுத்தமாக மறந்துவிடுகிறான்! இதனால் யோசேப்பு சிறையிலேயே இருக்க வேண்டி வருகிறது.
ஆதியாகமம் 39:1-23; 40:1-23.


கேள்விகள்

  • எகிப்துக்குக் கொண்டு போகும்போது யோசேப்புக்கு எத்தனை வயது, அங்கே அவனை என்ன செய்கிறார்கள்?
  • யோசேப்பு ஏன் சிறையில் அடைக்கப்படுகிறான்?
  • சிறையில் யோசேப்புக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படுகிறது?
  • சிறையில், பார்வோனின் பானபாத்திரக்காரனுக்கும் ரொட்டி சுடுகிறவனுக்கும் யோசேப்பு என்ன செய்கிறான்?
  • அந்தப் பானபாத்திரக்காரன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 39:1-23-ஐ வாசி.யோசேப்பின் காலத்தில் விபசாரத்திற்கு எதிராகக் கடவுளுடைய எந்தச் சட்டமும் இல்லாதிருந்த போதிலும், போத்திபாரின் மனைவியிடமிருந்து தப்பித்து ஓட எது அவனைத் தூண்டியது? (ஆதி. 2:24; 20:3; 39:9)
  • ஆதியாகமம் 40:1-23-ஐ வாசி.(அ) அந்தப் பானபாத்திரக்காரன் கண்ட கனவையும் யோசேப்புக்கு யெகோவா வெளிப்படுத்திய அதன் விளக்கத்தையும் சுருக்கமாகச் சொல். (ஆதி. 40:9-13)
    (ஆ) ரொட்டி சுடுகிறவன் கண்ட கனவு என்ன, அதன் அர்த்தம் என்ன? (ஆதி. 40:16-19)
    (இ) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் இன்று எவ்வாறு யோசேப்பின் மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள்? (ஆதி. 40:8; சங். 36:9; யோவா. 17:17; அப். 17:2, 3)
    (ஈ) பிறந்த நாள் கொண்டாட்டங்களைக் குறித்த கிறிஸ்தவ நோக்குநிலையை ஆதியாகமம் 40:20 எப்படித் தெளிவுபடுத்துகிறது? (பிர. 7:1; மாற். 6:21-28)

Comments