பிலேயாம் கழுதை பேசுகிறது

 பிலேயாம் கழுதை பேசுகிறது
ஒரு கழுதை பேசுவதை நீ எப்பொழுதாவது கேட்டிருக்கிறாயா? ‘அதெப்படி கழுதை பேசும், மிருகங்களால்தான் பேச முடியாதே’ என்று ஒருவேளை நீ சொல்லலாம். ஆனால் நிஜமாகவே ஒரு கழுதை பேசியதாக பைபிள் சொல்கிறது. இது எப்படி நடந்ததென்று நாம் பார்க்கலாம்.

இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைய தயாராக இருக்கிறார்கள். மோவாபிய ராஜாவான பாலாக், இஸ்ரவேலரைக் கண்டு பயப்படுகிறான். அதனால் இஸ்ரவேலரை வந்து சபிக்குமாறு பிலேயாம் என்ற ஒருவனை அழைக்கிறான். இந்தப் பிலேயாம் ஒரு தந்திரசாலி, தனக்கு நிறைய காசு கொடுப்பதாக பாலாக் சொன்னதால் தன் கழுதை மேலேறி அவனைப் பார்க்க புறப்பட்டுப் போகிறான்.
தமது ஜனங்களைப் பிலேயாம் சபிப்பதற்கு யெகோவா விரும்பவில்லை. அதனால் வழியிலேயே பிலேயாமை நிறுத்த நீண்ட பட்டயத்துடன் ஒரு தேவதூதனை அனுப்புகிறார். பிலேயாமினால் அந்தத் தேவதூதனை பார்க்க முடியவில்லை, ஆனால் அவனுடைய கழுதையால் பார்க்க முடிகிறது. ஆகவே தேவதூதனை விட்டு விலகிப்போக அது மறுபடியும் மறுபடியுமாக முயலுகிறது. கடைசியில் வழியிலேயே படுத்துவிடுகிறது. ஆத்திரத்தில் பிலேயாம் தன் கோலால் அந்தக் கழுதையைப் போட்டு அடிக்கிறான்.
அப்பொழுது பிலேயாமின் கழுதையை யெகோவா பேச வைக்கிறார். ‘நான் இப்போது என்ன செய்துவிட்டேன் என்று என்னைப் போட்டு இப்படி அடிக்கிறாய்?’ என்று அந்தக் கழுதை கேட்கிறது.
‘நீ என்னை முட்டாளாக்குகிறாய், என்னிடம் இப்போது ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இங்கேயே கொன்று போட்டிருப்பேன்!’ என்று பிலேயாம் சொல்கிறான்.
‘இதற்கு முன் எப்பொழுதாவது நான் இப்படி நடந்திருக்கிறேனா?’ என்று அந்தக் கழுதை கேட்கிறது.
‘இல்லை’ என்று பிலேயாம் பதிலளிக்கிறான்.
அப்பொழுது, பட்டயத்துடன் நின்றுகொண்டிருந்த தேவதூதன் பிலேயாமின் கண்களுக்குத் தெரியும்படி யெகோவா செய்கிறார். தேவதூதன் அவனிடம்: ‘உன் கழுதையை நீ ஏன் அடித்தாய்? நீ போவதை தடுப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன், இஸ்ரவேலை சபிக்க நீ போகக் கூடாது. உன் கழுதை மட்டும் விலகியிருக்காவிட்டால் நான் உன்னைக் கொன்று போட்டிருப்பேன், உன் கழுதையை விட்டு விட்டிருப்பேன்’ என்கிறார்.
அதற்கு பிலேயாம், ‘ஐயோ, நான் பாவம் செய்துவிட்டேன். நீர் வழியிலே நின்றுகொண்டிருந்தது எனக்குத் தெரியாது’ என்கிறான். தேவதூதன் பிலேயாமைப் போக விடுகிறார். பாலாக்கைப் பார்க்க பிலேயாம் செல்கிறான். அதன் பிறகும் அவன் இஸ்ரவேலை சபிக்க முயலுகிறான். ஆனால் சபிப்பதற்கு பதிலாக அவன் வாயாலேயே இஸ்ரவேலை மூன்று முறை ஆசீர்வதிக்கும்படி யெகோவா செய்கிறார்.
எண்ணாகமம் 21:21-35; 22:1-40; 23:1-30; 24:1-25.


Comments