கதை 12: ஒரு பெரிய கோபுரத்தை மனிதர் கட்டுகின்றனர்

கதை 12: ஒரு பெரிய கோபுரத்தை மனிதர் கட்டுகின்றனர்

ஆண்டுகள் பல கடந்து சென்றன. நோவாவின் மகன்களுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். பிற்பாடு இந்தப் பிள்ளைகளுக்கு இன்னும் ஏகப்பட்ட பிள்ளைகள் பிறந்தார்கள். சீக்கிரத்திலேயே பூமியில் மக்கள் எக்கச்சக்கமாக பெருகினார்கள்.
இவர்களில் ஒருவன்தான் நிம்ரோது, இவன் நோவாவின் கொள்ளுப்பேரன். மிருகங்களையும் மனிதரையும் வேட்டையாடி கொன்ற ஒரு கெட்ட ஆள். அதுமட்டுமல்ல, மற்ற ஆட்கள் மீது ஆட்சி செய்வதற்காக தன்னை ஒரு ராஜாவாகவும் ஆக்கிக்கொண்டான். கடவுளுக்கு நிம்ரோதை பிடிக்கவில்லை.
அந்தக் காலத்தில் எல்லா மக்களும் ஒரே பாஷையைப் பேசினார்கள். மக்களை ஆட்சி செய்வதற்காக அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்துகொள்ள நிம்ரோது விரும்பினான். இதற்காக அவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு நகரத்தையும் அதில் ஒரு பெரிய கோபுரத்தையும் ஜனங்களிடம் கட்டச் சொன்னான். இந்தப் படத்தில் அவர்கள் செங்கல் உண்டாக்குவதைப் பார்.
அவர்கள் இந்தக் கட்டிடத்தைக் கட்டுவது யெகோவா தேவனுக்கு பிடிக்கவில்லை. ஜனங்கள் பரவிச் சென்று பூமி முழுவதிலும் வாழ வேண்டுமென்றே அவர் விரும்பினார். ஆனால் அந்த மக்கள் இப்படிச் சொன்னார்கள்: ‘வாருங்கள்! ஒரு நகரத்தைக் கட்டுவோம், வானத்தை தொடுமளவுக்கு உயரமான ஒரு கோபுரத்தையும் கட்டுவோம்; அப்போது நமக்கு பெயரும் புகழும் கிடைக்கும்!’ ஆம், கடவுளுக்கு அல்ல, தங்களுக்கே புகழ் சேர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள்.
எனவே அந்த கோபுரம் கட்டும் வேலையை கடவுள் நிறுத்தினார். எப்படி நிறுத்தினார் என்று உனக்குத் தெரியுமா? ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்த அந்த மக்கள் திடீரென வேறு வேறு பாஷைகளைப் பேசும்படி செய்தார். அப்பொழுது ஒருவர் சொல்வது மற்றொருவருக்கு புரியாமல் எல்லோரும் குழம்பிப் போனார்கள். இதனால்தான் அந்நகரத்திற்கு பாபேல், அல்லது பாபிலோன் என்ற பெயர் வந்தது; அதன் அர்த்தம் “குழப்பம்” என்பதாகும்.
அதன் பிறகு அந்த மக்கள் பாபேலை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். அந்தந்த பாஷை பேசியவர்கள் ஒன்று சேர்ந்து, பூமியின் மற்ற பாகங்களில் குடியேறினார்கள்.
ஆதியாகமம் 10:1, 8-10; 11:1-9.
வேலையாட்கள் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டுகிறார்கள்


கேள்விகள்

  • நிம்ரோது யார், அவனைப் பற்றி கடவுள் என்ன அபிப்பிராயம் வைத்திருந்தார்?
  • படத்தில் பார்க்கிறபடி, ஜனங்கள் ஏன் செங்கல் உண்டாக்கினார்கள்?
  • இந்தக் கட்டிடத்தைக் கட்டுவது யெகோவாவுக்கு ஏன் பிடிக்கவில்லை?
  • அந்தக் கோபுரம் கட்டும் வேலையை கடவுள் எப்படி நிறுத்தினார்?
  • அந்த நகரத்தின் பெயர் என்ன, அதன் அர்த்தம் என்ன?
  • மக்களுடைய பாஷையைக் கடவுள் குழப்பிவிட்ட பிறகு அவர்கள் என்ன செய்யத் தொடங்கினார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 10:1, 8-10-ஐ வாசி.நிம்ரோத் எப்படிப்பட்டவனாக இருந்தான், இது நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது? (நீதி. 3:31)
  • ஆதியாகமம் 11:1-9-ஐ வாசி.என்ன நோக்கத்தோடு அந்தக் கோபுரம் கட்டப்பட்டது, ஆனால் அந்தத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது? (ஆதி. 11:4; நீதி. 16:18; யோவா. 5:44)

Comments