கதை 7: தைரியமுள்ள ஒருவர்
கதை 7: தைரியமுள்ள ஒருவர்
மக்கள் பூமியில் பெருகத் தொடங்கியபோது, அவர்களில் பலர் காயீனைப் போல் கெட்ட காரியங்களைச் செய்தார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். அவர்தான் ஏனோக்கு. ஏனோக்கு தைரியமுள்ளவர். அவரைச் சுற்றியிருந்த எல்லா மக்களும் படு மோசமான காரியங்களைச் செய்து வந்தார்கள், என்றாலும் ஏனோக்கு தொடர்ந்து கடவுளைச் சேவித்து வந்தார்.
அக்காலத்தில் மக்கள் ஏன் அவ்வளவு மோசமான காரியங்களைச் செய்தார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: ஆதாம் ஏவாளை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்தது யார்? சாப்பிடக் கூடாதென்று கடவுள் சொல்லியிருந்த அந்தப் பழத்தைச் சாப்பிடும்படி தூண்டியது யார்? ஆம், ஒரு கெட்ட தூதனே. பைபிள் அவனை சாத்தான் என்று அழைக்கிறது. எல்லோரையும் கெட்டவர்களாக்க அவன் முயன்று கொண்டிருக்கிறான்.
ஒருநாள் ஏனோக்கு மூலமாக யெகோவா தேவன் அந்த மக்களிடம் ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, ‘எல்லா கெட்ட மக்களையும் ஒருநாள் கடவுள் அழிக்கப் போகிறார்’ என்ற செய்தி. இதைக் கேட்ட அந்த மக்களுக்குப் பயங்கர கோபம் வந்திருக்கலாம். ஏனோக்கைக் கொல்லவும்கூட முயன்றிருக்கலாம். அதனால் கடவுள் செய்யப் போகிற காரியங்களைப் பற்றி அந்த மக்களிடம் சொல்ல ஏனோக்குக்கு ரொம்பவே தைரியம் தேவைப்பட்டது.
அந்தக் கெட்ட மக்கள் மத்தியில் ஏனோக்கு நீண்ட காலம் வாழும்படி கடவுள் விட்டுவிடவில்லை. ஏனோக்கு 365 வயது மட்டுமே வாழ்ந்தார். “365 வயது மட்டுமே” என்று நாம் ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் அந்தக் காலத்து ஆட்கள் இப்பொழுது இருக்கிறவர்களைவிட ரொம்ப பலசாலிகளாக இருந்தார்கள், ரொம்ப காலம் வாழ்ந்தார்கள். உதாரணத்திற்கு, ஏனோக்கின் மகன் மெத்தூசலா 969 வயதுவரை வாழ்ந்தாரே!
ஏனோக்கு இறந்த பின், அந்த மக்கள் மேலும் மேலும் மோசமானவர்களாக ஆனார்கள். ‘அவர்களுடைய யோசனையெல்லாம் எப்பொழுதும் கெட்டதாகவே இருந்தது,’ ‘பூமி கொடுமையால் நிறைந்திருந்தது’ என்றெல்லாம் பைபிள் சொல்கிறது.
பூமியில் அப்போது ஏன் அவ்வளவு அதிக தொந்தரவுகள் இருந்தன? அதற்கு ஒரு காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? சாத்தான் ஒரு புதிய வழியைப் பயன்படுத்தி மக்களைக் கெட்ட காரியங்கள் செய்யும்படி தூண்டியதே அதற்கு ஒரு காரணம். அந்தப் புதிய வழி என்ன என்பதைப் பற்றி அடுத்ததாக நாம் தெரிந்துகொள்வோம்.
ஆதியாகமம் 5:21-24, 27; 6:5, 11-13; எபிரெயர் 11:5; யூதா 14, 15.
கேள்விகள்
- ஏனோக்கு எப்படி வித்தியாசமானவராக இருந்தார்?
- ஏனோக்கின் காலத்தில் மக்கள் ஏன் அவ்வளவு மோசமான காரியங்களைச் செய்தார்கள்?
- என்னென்ன கெட்ட காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்? (படத்தைப் பார்.)
- ஏனோக்குக்கு ஏன் ரொம்பவே தைரியம் தேவைப்பட்டது?
- அப்போதெல்லாம் ஆட்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தார்கள், ஆனால் ஏனோக்கு எத்தனை வருடம் உயிர் வாழ்ந்தார்?
- ஏனோக்கு இறந்த பிறகு என்ன நடந்தது?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 5:21-24, 27-ஐ வாசி.(அ) ஏனோக்குக்கும் யெகோவாவுக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் இருந்தது? (ஆதி. 5:24)
(ஆ) பைபிளின்படி அதிக வருடம் உயிர்வாழ்ந்தவர் யார், அவர் எத்தனை வயதில் மரித்தார்? (ஆதி. 5:27) - ஆதியாகமம் 6:5-ஐ வாசி.ஏனோக்கு இறந்த பிறகு பூமியில் நிலைமை எப்படிப் படுமோசமாக ஆனது, இது நம்முடைய காலத்திற்கு எப்படி ஒத்திருக்கிறது? (2 தீ. 3:13)
- எபிரெயர் 11:5-ஐ வாசி.ஏனோக்கின் எந்தக் குணம் ‘தேவனுக்குப் பிரியமாக’ இருந்தது, அதனால் அவருக்குக் கிடைத்த பலன் என்ன? (ஆதி. 5:22)
- யூதா 14, 15-ஐ வாசி.வரவிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி ஜனங்களுக்கு எச்சரிக்கையில் இன்று கிறிஸ்தவர்கள் ஏனோக்கின் தைரியத்தை எப்படிப் பின்பற்றலாம்? (2 தீ. 4:2; எபி. 13:6)
Comments
Post a Comment