மனிதனுக்குப் பசுஞ்சோலையைப் படைப்பாளர் பரிசளிக்கிறார்

ஏதேன் தோட்டத்தில் விலங்குகள் மத்தியில் ஆதாமும் ஏவாளும்
 பகுதி 1

மனிதனுக்குப் பசுஞ்சோலையைப் படைப்பாளர் பரிசளிக்கிறார்

இறைவன் இந்த அண்டத்தையும் பூமியில் உயிரினங்களையும் படைக்கிறார்; மனிதனையும் மனுஷியையும் பரிபூரணமாய் படைத்து, ஓர் அழகிய தோட்டத்தில் குடிவைக்கிறார்; அவர்களுக்குச் சில கட்டளைகளைக் கொடுக்கிறார்
ஏதேன் தோட்டத்தில் சிங்கங்களும், பறவைகளும், மான்களும்
‘தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்’ என்ற வார்த்தைகளுடன் பைபிளின் முதல் வசனம் ஆரம்பமாகிறது. (ஆதியாகமம் 1:1பொ.மொ.) இதுதான் உலகிலேயே அற்புதமான அறிமுக வாக்கியம் என்று சொல்லப்படுகிறது. இந்த எளிய வார்த்தைகள்... முத்தான வார்த்தைகள்... பரிசுத்த வேதாகமத்தின் நாயகரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றன; அவரே சர்வசக்தி படைத்த இறைவனாகிய யெகோவா. நாம் குடியிருக்கும் இந்தக் கிரகம் உட்பட, பரந்து விரிந்த அண்டத்தைப் படைத்தவர் இறைவனே என்பதை இந்த முதல் வசனம் வெளிப்படுத்துகிறது. இறைவன் பல “நாட்கள்” எடுத்து, அதாவது பல யுகங்கள் எடுத்து, நம் பூமியைக் குடியிருப்புக்கு ஏற்ற வீடாக மாற்றினார் என அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இந்த அற்புத உலகம் இப்படித்தான் உருவானது.
பூமியில் இறைவனுடைய படைப்பிலேயே அதிஅற்புத படைப்பு மனிதன். ஏனென்றால், அவன் மட்டுமே இறைவனின் சாயலில் படைக்கப்பட்டான்; அதாவது, யெகோவாவின் குணங்களை—அன்பு, ஞானம் போன்ற குணங்களை—வெளிக்காட்டும் திறமையோடு படைக்கப்பட்டான். கடவுள் பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உண்டாக்கி, அவனுக்கு ஆதாம் என்று பெயர் சூட்டி, ஏதேன் என்ற அழகிய பசுஞ்சோலையில் குடிவைத்தார். அந்தப் பசுஞ்சோலையைக் கடவுளே உருவாக்கினார்; அங்கு கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய மரங்களும் நாவுக்குச் சுவையளிக்கும் கனி வகைகளும் ஏராளமாய் இருந்தன.
இப்போது, மனிதனுக்கு ஒரு துணை இருந்தால் நன்றாய் இருக்கும் எனக் கடவுள் எண்ணினார். ஆகவே, ஆதாமின் விலா எலும்பில் ஒன்றை எடுத்து ஒரு மனுஷியை உருவாக்கி, அவளை ஆதாமுக்கு மனைவியாகக் கொடுத்தார்; ஆதாம் தன் ஆசை மனைவிக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். பின்பு ஆனந்தப் பரவசத்தில் இவ்வாறு கவிதை பாடினான்: “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்.” இதனால்தான் கடவுள் கூறினார்: ‘கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றியிருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள்.’—ஆதியாகமம் 2:22-24; 3:20பொ.மொ.
ஆதாம் ஏவாளுக்குக் கடவுள் இரண்டு கட்டளைகளைக் கொடுத்தார். முதலாவதாக, பூமியில் பயிர் செய்து, அதைப் பராமரித்து, அதைத் தங்கள் சந்ததியால் நிரப்பச் சொன்னார். இரண்டாவதாக, அந்தப் பெரிய தோட்டத்தின் மரங்களில் ஒரு மரத்தின் கனியை மட்டும், அதாவது ‘நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை’ மட்டும், சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:17) அதற்குக் கீழ்ப்படியத் தவறினால் அவர்களுக்கு மரண தண்டனைதான். ஆதாமும் ஏவாளும் கடவுளைத் தங்களுடைய ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டதைக் காட்டுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கடவுளுக்குத் தங்களுடைய அன்பையும் நன்றியையும் காட்டுவதற்கும்கூட இது ஒரு சிறந்த வாய்ப்பு. கடவுளுடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு நல்ல காரணம் இருந்தது. உடலிலும் உள்ளத்திலும் எந்தக் குறையுமின்றி அவர்கள் பரிபூரணராக இருந்தார்கள். “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:31.
—ஆதாரம்: ஆதியாகமம் 1 2 அதிகாரங்கள்.

Comments