கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது

கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது

ஏதேன் தோட்டத்திற்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. சாப்பாட்டுக்காக அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. சுற்றிவர அழகிய பழ மரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக ஏராளமான முள் செடிகளைத்தான் பார்த்தார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் நட்பை முறித்துக்கொண்டபோது அதுதான் நடந்தது.
ஆதாம் தன் மகனுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு உழைக்கிறான்
ஆனால் ஆதாம் ஏவாளுக்கு மோசமான வேறொன்றும் நடந்தது, ஆம், அவர்கள் சாகத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்று கடவுள் எச்சரித்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அவர் எச்சரித்தது போலவே, அதைச் சாப்பிட்ட அதே நாளிலிருந்து அவர்கள் சாகத் தொடங்கினார்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்திலிருந்து கடவுள் துரத்திய பிறகே அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்படியானால் அந்தப் பிள்ளைகளும்கூட வயதாகி சாக வேண்டியிருந்தது.
ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் பூமியில் என்றுமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள். ஒருவரும் வயதாகி, நோயுற்று சாக வேண்டியிருந்திருக்காது.
மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார், நிச்சயமாகவே அப்படி வாழப் போகிறார்கள் என்றும் அவர் வாக்குறுதி அளிக்கிறார். அந்தச் சமயத்தில் இந்த முழு பூமியும் அழகாக மாறியிருக்கும்; அதுமட்டுமல்ல, எல்லா மக்களுமே நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். பூமியிலுள்ள அனைவருமே ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக இருப்பார்கள், கடவுளுடனும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
ஏவாளும் அவளுடைய பிள்ளைகளும்
ஆனால் கடவுளோடு வைத்திருந்த நட்பை ஏவாள் முறித்துவிட்டாள். இதனால், பிள்ளைகளைப் பெற்றெடுப்பது அவளுக்கு ரொம்ப கஷ்டமாக ஆனது. ஆம், அவளுக்குப் பயங்கர வலி உண்டானது. யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனது நிச்சயமாகவே அவளுக்கு அதிக துக்கத்தை ஏற்படுத்தியது இல்லையா?
ஆதாம் ஏவாளுக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள். முதல் மகனுக்கு காயீன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவது மகனுக்கு ஆபேல் என்று பெயர் வைத்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? உனக்குத் தெரியுமா?
ஆதியாகமம் 3:16-23; 4:1, 2; வெளிப்படுத்துதல் 21:3, 4.


கேள்விகள்

  • ஏதேன் தோட்டத்துக்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாழ்க்கை எப்படி இருந்தது?
  • ஆதாமும் ஏவாளும் என்ன செய்யத் தொடங்கினார்கள், ஏன்?
  • ஆதாம், ஏவாளின் பிள்ளைகள் ஏன் வயதாகி சாக வேண்டியிருந்தது?
  • ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் எப்படி வாழ்ந்திருப்பார்கள்?
  • ஏவாள் கீழ்ப்படியாமல் போனது அவளுக்கு என்ன வலியை உண்டாக்கியது?
  • ஆதாம் ஏவாளுடைய முதல் இரண்டு மகன்களுடைய பெயர் என்ன?
  • படத்தில் உள்ள மற்ற பிள்ளைகள் யார்?

கூடுதல் கேள்விகள்

  • ஆதியாகமம் 3:16-23; 4:1, 2-ஐ வாசி.(அ) நிலம் சபிக்கப்பட்டதால் ஆதாமின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டது? (ஆதி. 3:17-19; ரோ. 8:20, 22)
    (ஆ) “உயிருள்ளவள்” எனும் அர்த்தமுடைய பெயர் ஏவாளுக்கு ஏன் பொருத்தமானது? (ஆதி. 3:20)
    (இ) ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகும் அவர்களுக்கு யெகோவா எப்படி இரக்கம் காட்டினார்? (ஆதி. 3:7, 21)
  • வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசி.‘முந்தினவையான’ எவை ஒழிந்துபோவதைக் காண நீ ஆவலோடு இருக்கிறாய்?

Comments