தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்
தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்
இப்போது என்ன நடக்கிறது பார். ஆதாமும் ஏவாளும் அந்த அழகிய ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஏனென்றால் அவர்கள் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்தார்கள். அதனால் அவர்களை யெகோவா தண்டிக்கிறார். ஆதாமும் ஏவாளும் செய்த அந்த மோசமான காரியம் என்னவென்று உனக்குத் தெரியுமா?
செய்ய வேண்டாம் என்று கடவுள் சொன்ன ஒன்றை அவர்கள் செய்தார்கள். அந்தத் தோட்டத்தின் மரங்களிலிருந்து கிடைக்கிற பழங்களை அவர்கள் சாப்பிடலாம் என்று கடவுள் அவர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால் ஒரேவொரு மரத்திலிருந்து மட்டும் சாப்பிடக் கூடாது என்றும், அப்படிச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த மரம் கடவுளுக்குச் சொந்தமாக இருந்தது. வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை எடுப்பது தவறு என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஆதாமும் ஏவாளும் அந்தத் தவறான காரியத்தைத்தான் செய்தார்கள். எப்படியென்று தெரியுமா?
ஒருநாள் ஏவாள் தனியாகத் தோட்டத்தில் இருந்தாள், அப்போது ஒரு பாம்பு அவளிடம் பேசியது. அதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்! சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்ன அந்த மரத்திலிருந்த பழத்தைச் சாப்பிடும்படி அது ஏவாளிடம் சொன்னது. பாம்புகளை யெகோவா உண்டாக்கியபோது பேசும் திறமையுடன் அவற்றை உண்டாக்கவில்லை. அப்படியானால், யாரோ ஒருவன்தான் அந்தப் பாம்பைப் பேச வைத்திருக்க வேண்டும். அவன் யார்?
அவன் ஆதாம் அல்ல. அப்படியானால், அவன் யார்? யெகோவா இந்தப் பூமியை உண்டாக்குவதற்கு முன்பே உண்டாக்கிய தேவதூதர்களில் ஒருவனாகத்தான் அவன் இருக்க வேண்டும், அந்தத் தேவதூதர்களை நம்மால் பார்க்க முடியாது. அவர்களில் ஒருவன் ரொம்ப பெருமைபிடித்தவனாக இருந்தான். கடவுளைப் போல தானும் அரசாட்சி செய்ய வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். மனிதர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாகத் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் ஆசைப்பட்டான். ஆம், அந்தப் பாம்பைப் பேச வைத்த தூதன் அவன்தான்.
அந்தத் தூதன் ஏவாளை ஏமாற்றினான். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுளைப் போல் ஆக முடியுமென்று அவளிடம் சொன்னான். அது உண்மையென்று நம்பி அவளும் அதைச் சாப்பிட்டாள், ஆதாமும் அதைச் சாப்பிட்டான். இவ்வாறு ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இதனால்தான் அவர்கள் தங்கள் அழகிய தோட்ட வீட்டை இழந்தார்கள்.
ஆனால் கடவுள் இந்த முழு பூமியையும் ஒரு நாள் ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாற்றப் போகிறார். அழகுபடுத்தும் அந்த வேலையில் நீயும் எப்படிப் பங்குகொள்ளலாம் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொள்வோம். ஆனால் இப்போது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.
ஆதியாகமம் 2:16, 17; 3:1-13, 24; வெளிப்படுத்துதல் 12:9.
கேள்விகள்
- படத்தில் பார்க்கிறபடி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன நடக்கிறது?
- அவர்களை யெகோவா ஏன் தண்டிக்கிறார்?
- ஏவாளிடம் ஒரு பாம்பு என்ன பேசியது?
- ஏவாளிடம் அந்தப் பாம்பைப் பேச வைத்தது யார்?
- ஆதாம், ஏவாள் அந்த அழகிய தோட்ட வீட்டை ஏன் இழந்தார்கள்?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 2:16, 17; 3:1-13, 24-ஐ வாசி.(அ) ஏவாளிடம் அந்தப் பாம்பு கேட்ட கேள்வி எப்படி யெகோவாவைப் பற்றி தவறாக எடுத்துக் காட்டியது? (ஆதி. 3:1-5; 1 யோ. 5:3)
(ஆ) ஏவாள் எப்படி நமக்கு எச்சரிப்பூட்டும் ஓர் உதாரணமாக இருக்கிறாள்? (பிலி. 4:8; யாக். 1:14, 15; 1 யோ. 2:16)(இ) ஆதாமும் ஏவாளும் தாங்கள் செய்த தவறை எவ்விதத்தில் ஒத்துக்கொள்ள தவறினர்? (ஆதி. 3:12, 13)(ஈ) ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த கேருபீன்கள் யெகோவாவின் பேரரசுரிமைக்கு எப்படி ஆதரவு காட்டினார்கள்? (ஆதி. 3:24) - வெளிப்படுத்துதல் 12:9-ஐ வாசி.யெகோவாவின் ஆட்சியிலிருந்து மனிதகுலத்தை விலக்குவதில் சாத்தான் எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறான்? (1 யோ. 5:19)
Comments
Post a Comment