கதை 26: யோபு—கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்

கதை 26: யோபு—கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்

உடம்பெல்லாம் புண்ணாக இருக்கிற இந்த நபரைப் பார்ப்பதற்கே உனக்குப் பரிதாபமாக இருக்கிறதா? இவர் பெயர் யோபு, அந்தப் பெண் இவருடைய மனைவி. யோபுவிடம் அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? ‘கடவுளைச் சபித்துவிட்டு உயிரை விடும்’ என்று சொல்கிறாள். அவள் ஏன் இப்படிச் சொல்கிறாள், யோபு ஏன் இந்தளவு கஷ்டப்படுகிறார் என்றெல்லாம் நாம் பார்க்கலாம்.
புண்களுடன் யோபு
யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலைக் காண்பித்த உண்மையுள்ள நபர்தான் யோபு. அவர் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்து வந்தார். இது கானானுக்குப் பக்கத்தில் இருந்தது. யோபுவை யெகோவா மிக அதிகமாய் நேசித்தார், ஆனால் யோபுவை ஒருவன் பகைத்தான். அவன் யார் தெரியுமா?
பிசாசாகிய சாத்தானே அவன். யெகோவாவைப் பகைக்கிற கெட்ட தூதன்தான் சாத்தான் என்று உனக்கு ஞாபகம் இருக்கும். இவன் ஆதாமையும் ஏவாளையும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்தான். எல்லோரையுமே அப்படிக் கீழ்ப்படியாமல் போக வைக்க தன்னால் முடியுமென்றும் நினைத்தான். ஆனால் அது முடிந்ததா? இல்லை. உண்மையோடிருந்த பல ஆண்களையும் பெண்களையும் பற்றி வாசித்ததைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார். அவர்களில் சிலருடைய பெயரை உன்னால் சொல்ல முடியுமா?
எகிப்தில் யாக்கோபும் யோசேப்பும் இறந்த பின்னர், யெகோவாவுக்கு மிகவும் உண்மையுள்ளவராய் இருந்தவர் யோபு. எல்லோரையும் கெட்டவர்களாக ஆக்க முடியாது என்பதை சாத்தானுக்கு உணர்த்த யெகோவா விரும்பினார். அதனால் அவனிடம்: ‘யோபுவைப் பார். எனக்கு எவ்வளவு உண்மையுள்ளவனாக இருக்கிறான்’ என்று சொன்னார்.
‘நீர் அவனை ஆசீர்வதிக்கிறீர். அவனுக்கு எந்தக் குறையும் இல்லை, வேண்டிய எல்லாவற்றையும் தந்திருக்கிறீர். அதனால்தான் அவன் உமக்கு உண்மையுள்ளவனாக இருக்கிறான். அவற்றை நீர் எடுத்துப் போட்டுவிட்டால் அவன் உம்மைச் சபிப்பான்’ என்று சாத்தான் வாதாடினான்.
உடனே யெகோவா அவனிடம்: ‘நீ போய், அவற்றை எடுத்துப்போடு. யோபுவுக்கு நீ செய்ய நினைக்கிற எல்லாக் கெட்ட காரியங்களையும் செய். அவன் என்னைச் சபிக்கிறானா பார்ப்போம். ஆனால் அவனுடைய உயிரை மட்டும் நீ எடுக்கக்கூடாது’ என்று சொன்னார்.
முதலாவதாக, யோபுவின் எல்லா மாடுகளையும் ஒட்டகங்களையும் கொள்ளைக்காரர் வந்து திருடிக்கொண்டு போகும்படியும் ஆடுகள் கொல்லப்படும்படியும் சாத்தான் செய்தான். பின்பு அவருடைய 10 மகன்களையும் மகள்களையும் கடும் புயலினால் கொன்றான். அடுத்ததாக, யோபுவுக்கு பயங்கர வியாதியை சாத்தான் வரவழைத்தான். யோபு வேதனைக்கு மேல் வேதனையை அனுபவித்தார். இதனால்தான் யோபுவின் மனைவி அவரிடம்: ‘கடவுளைச் சபித்துவிட்டு உயிரை விடும்’ என்று சொன்னாள். ஆனால் யோபு அப்படிச் செய்யவில்லை. அதுமட்டுமா, அவர் கெட்டவராக வாழ்ந்திருந்தார் என மூன்று போலி நண்பர்கள் அவரிடம் சொன்னபோதும்கூட, யோபு தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருந்தார்.
யோபு இப்படி உண்மையோடு இருந்ததைப் பார்த்து யெகோவா ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்தப் படத்தில் நீ பார்க்கிறபடி, பிற்பாடு அவர் யோபுவை ஆசீர்வதித்தார். அவருடைய வியாதியை நீக்கி அவரைச் சுகப்படுத்தினார். யோபுவுக்கு இன்னும் 10 அழகிய பிள்ளைகள் பிறக்கும்படி செய்தார். அதோடு, முன்னிருந்தவற்றைவிட இரண்டு மடங்கு ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும் கொடுத்தார்.
யோபுவைப் போல் நீ எப்போதும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாயா? அப்படி இருந்தால் உன்னையும்கூட அவர் ஆசீர்வதிப்பார். ஆம், ஏதேன் தோட்டம் எவ்வளவு அழகாக இருந்ததோ அவ்வளவு அழகாக இந்த முழு பூமியும் மாறும்போது அதில் சாகாமல் என்றென்றும் நீ வாழ்வாய்.
யோபு 1:1-22; 2:1-13; 42:10-17.
யோபுவும் அவருடைய குடும்பமும்


கேள்விகள்

  • யோபு யார்?
  • சாத்தான் என்ன செய்ய நினைத்தான், அதைச் செய்ய அவனால் முடிந்ததா?
  • என்ன செய்யும்படி சாத்தானை யெகோவா அனுமதித்தார், ஏன்?
  • ‘கடவுளைச் சபித்துவிட்டு உயிரை விடும்’ என்று யோபுவின் மனைவி ஏன் சொன்னாள்? (படத்தைப் பார்.)
  • இரண்டாவது படத்தில் பார்க்கிறபடி, யோபுவை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார், ஏன்?
  • யோபுவைப் போல் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாமும் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?

கூடுதல் கேள்விகள்

  • யோபு 1:1-22-ஐ வாசி.இன்று கிறிஸ்தவர்கள் எப்படி யோபுவைப் பின்பற்றலாம்? (யோபு 1:1; பிலி. 2:15; 2 பே. 3:14)
  • யோபு 2:1-13-ஐ வாசி.சாத்தானின் துன்புறுத்தலுக்கு யோபுவும் அவருடைய மனைவியும் எப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசமாகப் பிரதிபலித்தார்கள்? (யோபு 2:9, 10; நீதி. 19:3; மீ. 7:7; மல். 3:14)
  • யோபு 42:10-17-ஐ வாசி.(அ) உண்மையோடு வாழ்ந்ததால் யோபுவுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்திற்கும் இயேசுவுக்கு கிடைத்த ஆசீர்வாதத்திற்கும் இடையேயுள்ள ஒப்புமைகள் யாவை? (யோபு 42:12; பிலி. 2:9-11)
    (ஆ) கடவுளிடம் தொடர்ந்து உத்தமத்தோடு இருந்ததற்காக யோபு பெற்ற ஆசீர்வாதங்கள் நமக்கு எப்படி உற்சாகமளிக்கின்றன? (யோபு 42:10, 12; எபி. 6:10; யாக். 1:2-4, 12; 5:11)

Comments