சபைகளுக்கு பவுல் கடிதங்கள் எழுதுகிறார்

பவுல் வீட்டுக் காவலில் இருக்கும்போது, அவர் சொல்லச் சொல்ல கடிதம் எழுதப்படுகிறது
 பகுதி 24

சபைகளுக்கு பவுல் கடிதங்கள் எழுதுகிறார்

பவுல் எழுதும் கடிதங்கள் கிறிஸ்தவ சபையைப் பலப்படுத்துகின்றன
யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இளம் கிறிஸ்தவ சபைக்கு முக்கிய பங்கு இருந்தது. ஆனால், அந்தக் கிறிஸ்தவர்கள் விரைவில் கடும் எதிர்ப்பை சந்தித்தார்கள். சபைக்கு வெளியிலிருந்து வந்த துன்புறுத்தலையும் உள்ளிருந்து வந்த மறைமுக ஆபத்துகளையும் அவர்கள் தாக்குப்பிடிப்பார்களா, கடவுளுக்கு உண்மைத் தவறாமல் நடப்பார்களா? கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள 21 கடிதங்கள் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையையும் உற்சாகத்தையும் அளித்தன.
அவற்றில் ரோமர் முதல் எபிரெயர் வரையிலான 14 கடிதங்கள் அப்போஸ்தலன் பவுலால் எழுதப்பட்டவை. இக்கடிதங்கள் யாருக்கு அல்லது எந்தச் சபைக்கு எழுதப்பட்டனவோ அந்த நபரின் அல்லது சபையின் பெயரையே தாங்கியிருக்கின்றன. பவுலின் கடிதங்களில் பதிவாகியுள்ள சில விஷயங்களைக் கவனியுங்கள்.
ஒழுக்கம், நடத்தை சம்பந்தமான அறிவுரைகள். பாலியல் முறைகேடு, மணத்துணைக்குத் துரோகம் போன்ற பயங்கர பாவங்களைச் செய்வோர் “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் . . . அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” (கலாத்தியர் 5:19-21;1 கொரிந்தியர் 6:9-11) கடவுளை வழிபடுவோர் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். (ரோமர் 2:11; எபேசியர் 4:1-6) உதவி தேவைப்படுகிற சக கிறிஸ்தவர்களுக்குச் சந்தோஷத்தோடு கொடுத்து உதவ வேண்டும். (2 கொரிந்தியர் 9:7) “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று பவுல் சொன்னார். எனவே, யெகோவாவை வழிபடுவோர் தங்களுடைய ஆழ்மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:17;2 தெசலோனிக்கேயர் 3:1; பிலிப்பியர் 4:6, 7) பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்க வேண்டுமென்றால் நம்பிக்கையோடு பிரார்த்திக்க வேண்டும்.—எபிரெயர் 11:6.
குடும்ப மகிழ்ச்சிக்கு எது உதவும்? கணவன் தன்னுடைய மனைவியைச் சொந்த உடல்போல் நேசிக்க வேண்டும். மனைவி தன்னுடைய கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், இது கடவுளுக்குப் பிரியமானது. தெய்வீக நியதிகளின் அடிப்படையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அன்பாகப் பயிற்றுவிக்க வேண்டும்.—எபேசியர் 5:22–6:4; கொலோசெயர் 3:18-21.
பவுல் கடிதங்கள் எழுதிய இடங்கள்
கடவுளுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவி. மோசேயின் திருச்சட்டத்திலுள்ள பல அம்சங்கள் கிறிஸ்து வரும்வரை இஸ்ரவேலரைப் பாதுகாத்து வழிநடத்தின. (கலாத்தியர் 3:24) அதற்குப்பின், இறைவனை வழிபட கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எபிரெயர்களுக்கு—கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களுக்கு—எழுதிய கடிதத்தில், திருச்சட்டத்தின் அர்த்தத்தையும் கிறிஸ்துவின் மூலம் கடவுளுடைய நோக்கம் நிறைவேறிய விதத்தையும் பற்றி பவுல் விலாவாரியாகக் கூறினார். மோசேயின் திருச்சட்டத்திலுள்ள பல்வேறு அம்சங்கள் பின்னால் நடக்கப்போகும் விஷயங்களுக்குப் படமாக இருந்ததை பவுல் விளக்கிக் காட்டினார்.  உதாரணமாக, மிருக பலிகள் இயேசுவின் தியாக பலிக்குப் படமாக இருந்தன. இயேசுவின் தியாக பலி மூலமாகவே பாவங்களுக்கு உண்மையான மன்னிப்பு கிடைக்கும். (எபிரெயர் 10:1-4) இயேசுவின் மரணத்திற்குப்பின் மோசேயின் திருச்சட்டம் தேவைப்படாததால் கடவுள் அதை ரத்து செய்துவிட்டார்.—கொலோசெயர் 2:13-17; எபிரெயர் 8:13.
சபையை ஒழுங்கமைக்க அறிவுரை: சபை பொறுப்புகளை ஏற்க விரும்பும் ஆண்கள் உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், பைபிளிலுள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:5-9) யெகோவா தேவனை வழிபடுவோர் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்காக தவறாமல் ஒன்றுகூடி வரவேண்டும். (எபிரெயர் 10:24, 25) சபையாருக்கு அறிவுரையும் உற்சாகமும் அளிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.—1 கொரிந்தியர் 14:26, 31.
தீமோத்தேயுவுக்கு பவுல் இரண்டாவது கடிதத்தை எழுதுவதற்குள் அவர் மீண்டும் ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; அங்கு தீர்ப்புக்காகக் காத்திருந்தார். தைரியமுள்ள வெகு சிலரே அவரை வந்து சந்தித்தார்கள். சீக்கிரத்தில் தான் இறந்துவிடுவார் என்பதை பவுல் அறிந்திருந்தார். “சிறந்த போராட்டத்தை நான் போராடியிருக்கிறேன்; என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். (2 தீமோத்தேயு 4:7) விரைவில் பவுல் தியாக மரணமடைந்தார். ஆனால், கடவுளை உண்மையாய் வழிபடுவோருக்கு அவருடைய கடிதங்கள் இன்றுவரை சிறந்த வழிநடத்துதல் அளிக்கின்றன.
—ஆதாரம்: ரோமர்1 கொரிந்தியர்2 கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர்பிலிப்பியர்கொலோசெயர்1 தெசலோனிக்கேயர்2 தெசலோனிக்கேயர்1 தீமோத்தேயு2 தீமோத்தேயுதீத்துபிலேமோன்எபிரெயர்.

Comments