கதை 20: தீனாள் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறாள்
கதை 20: தீனாள் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறாள்
தீனாள் யாரைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறாள் என்று உனக்குத் தெரிகிறதா? கானான் தேசத்து பெண்களில் சிலரைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறாள். அவளுடைய அப்பா யாக்கோபுக்கு இது சந்தோஷமாக இருந்திருக்கும் என நினைக்கிறாயா? கானானியப் பெண்களைப் பற்றி ஆபிரகாமும் ஈசாக்கும் என்ன நினைத்தார்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தால் இந்தக் கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடித்து விடுவாய்.
தன் மகன் ஈசாக்கிற்கு ஒரு கானானியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுக்க ஆபிரகாம் விரும்பினாரா? இல்லை, அவர் விரும்பவில்லை. ஈசாக்கும் ரெபெக்காளும் தங்கள் மகன் யாக்கோபு ஒரு கானானியப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார்களா? இல்லை, அவர்களும் விரும்பவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஏனென்றால் கானானில் இருந்த மக்கள் பொய்க் கடவுட்களை வணங்கி வந்தார்கள். கல்யாணம் செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் நல்ல ஆட்களாக இல்லை, நெருங்கிய நண்பர்களாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கும் அவர்கள் நல்லவர்களாக இல்லை. அதனால் தன் மகள் தீனாள் இந்தக் கானானியப் பெண்களோடு பழகுவது நிச்சயமாகவே யாக்கோபுக்கு பிடித்திருக்காது.
நிஜமாகவே, தீனாள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டாள். படத்தில் தீனாளைப் பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் கானானிய மனிதனைக் கவனித்தாயா? அவனுடைய பெயர் சீகேம். ஒருநாள் தீனாள் கானானுக்கு போனபோது அவன் தீனாளைக் கொண்டுபோய் தன்னோடு படுக்கும்படி அவளைக் கட்டாயப்படுத்தினான். இது தவறு, ஏனென்றால் கல்யாணம் செய்த ஆண்களும் பெண்களும் மாத்திரமே ஒன்றாகப் படுக்கலாம். தீனாளுக்கு சீகேம் செய்த இந்தக் கெட்ட காரியத்தால் இன்னும் நிறைய பிரச்சினைகள் வந்தன.
நடந்ததை தீனாளின் அண்ணன்மார் கேள்விப்பட்டபோது அவர்களால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவர்களில் இருவர், அதாவது சிமியோனும் லேவியும் கோபவெறியுடன் தங்களுடைய வாள்களை எடுத்துக்கொண்டு திடுதிப்பென்று அந்தப் பட்டணத்துக்குள் நுழைந்து அங்கிருந்த ஆண்களைத் தாக்கினார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய மற்ற சகோதரர்களும் சீகேமை கொன்றார்கள், அங்கிருந்த எல்லா ஆண்களையும் கொன்றார்கள். தன்னுடைய மகன்கள் இந்தக் கெட்ட காரியத்தைச் செய்ததால் யாக்கோபு கோபமடைந்தார்.
இந்தப் பிரச்சினையெல்லாம் எப்படி ஆரம்பித்தது? கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத ஜனங்களோடு தீனாள் நட்பு வைத்துக் கொண்டதால்தான் இல்லையா? அப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள நாம் விரும்ப மாட்டோம் தானே?
ஆதியாகமம் 34:1-31.
கேள்விகள்
- கானான் தேசத்தாரைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க ஆபிரகாமும் ஈசாக்கும் ஏன் விரும்பவில்லை?
- கானானியப் பெண்களோடு தீனாள் பழகுவது யாக்கோபுக்குப் பிடித்திருந்ததா?
- படத்தில் தீனாளைப் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மனிதன் யார், அவன் என்ன கெட்ட காரியத்தைச் செய்தான்?
- தீனாளின் அண்ணன்மாரான சிமியோனும் லேவியும் நடந்ததைக் கேள்விப்பட்டபோது என்ன செய்தார்கள்?
- சிமியோனும் லேவியும் செய்த காரியத்தை யாக்கோபு ஆமோதித்தாரா?
- இந்தக் குடும்பப் பிரச்சினையெல்லாம் எப்படி ஆரம்பித்தது?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 34:1-31-ஐ வாசி.(அ) கானான் தேசத்துப் பெண்களோடு பழகுவதற்கு தீனாள் ஒரேயொரு முறை மட்டும்தான் போனாளா? விவரமாகச் சொல். (ஆதி. 34:1, NW)
(ஆ) தன் கற்பை இழந்ததற்கு தீனாளும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தாள் என ஏன் சொல்லலாம்? (கலா. 6:7)(இ) தீனாளின் எச்சரிப்பூட்டும் உதாரணத்தை மனதார ஏற்றுக்கொண்டதை இளைஞர்கள் இன்று எப்படிக் காட்டலாம்? (நீதி. 13:20; 1 கொ. 15:33; 1 யோ. 5:19)
Comments
Post a Comment