நம்பிக்கை, நடத்தை, அன்பு தொடர்பான ஆலோசனைகள்

பைபிள் எழுத்தாளர் ஒருவர் கடிதம் எழுதுகிறார்
 பகுதி 25

நம்பிக்கை, நடத்தை, அன்பு தொடர்பான ஆலோசனைகள்

சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா ஆகியோர் கடிதங்கள் எழுதுகிறார்கள்
யாக்கோபும் யூதாவும் இயேசுவின் தாயார் மரியாளுக்குப் பிறந்தவர்கள். பேதுருவும் யோவானும் இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் இருவர். இந்த நான்கு பேரும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஏழு கடிதங்களை எழுதினார்கள். இவற்றை எழுதியவர்களின் பெயரையே இந்தக் கடிதங்கள் தாங்கியுள்ளன. யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் விசுவாசமாய் இருக்க கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்தக் கடிதங்களில் தெய்வீக ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நம்பிக்கையைச் செயலில் காட்டுங்கள். நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதாது. உண்மையான நம்பிக்கை செயல்களில் வெளிப்படும். ஆம், ‘செயல்களில்லாத நம்பிக்கை செத்தது’ என்று யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 2:26பொ.மொ.) சோதனைகள் மத்தியிலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் சகிப்புத்தன்மை வளரும். சோதனைகளை வெற்றிகரமாய் சமாளிக்க ஒரு கிறிஸ்தவர் ஞானத்திற்காகக் கடவுளிடம் கேட்க வேண்டும்; அதுவும் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையோடு கேட்க வேண்டும். நாம் சகித்திருந்தால் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவோம். (யாக்கோபு 1:2-6, 12) நம்பிக்கையை விட்டுவிடாமல் நாம் கடைசிவரை யெகோவா தேவனுக்கு உத்தமமாய் இருந்தால் அவர் உதவி செய்வார். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று யாக்கோபு சொல்கிறார்.—யாக்கோபு 4:8.
சோதனைகளையும் சபலங்களையும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு ஒரு கிறிஸ்தவரின் நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். யூதாவின் காலத்தில் ஒழுக்கக்கேடு புரையோடிக் கிடந்ததால், நம்பிக்கையைக் காத்துக்கொள்ள “கடினமாய்ப் போராடும்படி” சக கிறிஸ்தவர்களை அவர் தூண்டினார்.—யூதா 3.
ஒழுக்க சுத்தம் அவசியம். தம்மை வழிபடுவோர் எல்லா விஷயங்களிலும் தூய்மையுள்ளோராய் இருக்கும்படி யெகோவா விரும்புகிறார். “உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள். ‘நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் [யெகோவா] தூயவர்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது” என்று பேதுரு கூறுகிறார். (1 பேதுரு 1:15, 16பொ.மொ.) கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப் போனார்” என்று பேதுரு சொல்கிறார். (1 பேதுரு 2:21) கிறிஸ்தவர்கள் கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழ்வதால் அவர்களுக்குத் துன்பம் வரலாம், இருந்தாலும் அவர்கள் ‘சுத்தமான மனசாட்சியோடு’ இருக்கிறார்கள். (1 பேதுரு 3:16, 17) கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளுக்காகவும் “நீதி குடிகொண்டுள்ள” புதிய உலகிற்காகவும் காத்திருக்கையில், கிறிஸ்தவர்கள் தூய நடத்தையைக் காத்துக்கொள்ள வேண்டும், கடவுளுக்குப் பிரியமான செயல்களைச் செய்ய வேண்டும் என்று பேதுரு உந்துவிக்கிறார்.—2 பேதுரு 3:11-13.
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”யாக்கோபு 4:8
அன்பு காட்டுங்கள். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று யோவான் சொல்கிறார். “நம் பாவங்களுக்குப் . . . பலியாக” இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பியதன் மூலம் கடவுள் தமது அன்பைக் காண்பித்தார் என்று அந்த அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அந்த அன்புக்குக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்? “அன்புக் கண்மணிகளே, இவ்விதத்தில் கடவுள் நம்மீது அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். (1 யோவான் 4:8-11) அப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி சக கிறிஸ்தவர்களை உபசரிப்பதாகும்.—3 யோவான் 5-8.
அப்படியானால், யெகோவாமீது தங்களுக்கு அன்பு இருப்பதை அவரை வழிபடுவோர் எப்படிக் காட்டலாம்? “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று யோவான் பதிலளிக்கிறார். (1 யோவான் 5:3; 2 யோவான் 6) கடவுளுக்குக் கீழ்ப்படிவோர் ‘முடிவில்லா வாழ்வை’ பெறுவதால் கடவுளுடைய அன்பை எப்போதும் அனுபவிப்பார்கள்.—யூதா 21.
—ஆதாரம்: யாக்கோபு1 பேதுரு2 பேதுரு1 யோவான்2 யோவான்3 யோவான்யூதா.

Comments