முதல் மனிதனும் மனுஷியும்

முதல் மனிதனும் மனுஷியும்

இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் தெரிகிறது? ஆம், இதில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் முதல் மனிதனும் மனுஷியும். இவர்களை உண்டாக்கியது யார்? கடவுள்தான் அவர்களை உண்டாக்கினார். அவருடைய பெயர் உனக்குத் தெரியுமா? அவர் பெயர் யெகோவா. அந்த மனிதன் ஆதாம் என்றும், அந்த மனுஷி ஏவாள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள்
யெகோவா தேவன் ஆதாமை எப்படி உண்டாக்கினார் தெரியுமா? தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அதிலிருந்து ஒரு பரிபூரண மனித உடலை உருவாக்கினார். பின்பு அவனுடைய மூக்கிற்குள் காற்றை ஊதினார், அப்போது ஆதாம் உயிருள்ளவனாக ஆனான்.
யெகோவா தேவன் ஆதாமுக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். வித்தியாச வித்தியாசமான எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைக்கச் சொன்னார். அந்த மிருகங்களுக்கு மிகச் சிறந்த பெயர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவை எல்லாவற்றையும் அவன் ரொம்ப காலமாகவே கூர்ந்து கவனித்து வந்திருக்கலாம். இப்படி அந்த மிருகங்களுக்குப் பெயர் வைக்கையில், ஆதாம் ஏதோவொன்றைக் கவனிக்க ஆரம்பித்தான். அது என்னவென்று உனக்குத் தெரியுமா?
அந்த எல்லா மிருகங்களும் ஜோடி ஜோடியாக இருந்தன. அங்கே அப்பா யானைகளும் அம்மா யானைகளும் இருந்தன, அப்பா சிங்கங்களும் அம்மா சிங்கங்களும் இருந்தன, ஆனால் ஆதாமுக்கு மட்டும் ஏற்ற ஒரு ஜோடி இருக்கவில்லை. அதனால், ஆதாமை யெகோவா நன்றாக தூங்க வைத்து, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்தார். அந்த விலா எலும்பினால் ஆதாமுக்காக ஒரு பெண்ணை உண்டாக்கினார். அந்தப் பெண் அவனுடைய மனைவியானாள்.
ஆதாம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான்! அதுமட்டுமா, இப்பேர்ப்பட்ட அழகிய தோட்டத்தில் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்ததால் ஏவாளும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் என்று நினைத்துப் பார்! அவர்கள் இப்போது பிள்ளைகளைப் பெற்று சந்தோஷமாக வாழ முடியும்.
ஆதாமும் ஏவாளும் என்றென்றுமாக வாழ வேண்டுமென யெகோவா விரும்பினார். அவர்கள் முழு பூமியையும் ஏதேன் தோட்டத்தைப் போல அழகாக்க வேண்டுமெனவும் அவர் விரும்பினார். இந்த வேலையைச் செய்யப் போவதை நினைத்து ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! இந்தப் பூமியை அழகிய தோட்டமாக மாற்றும் அந்த வேலையைச் செய்ய நீ விரும்பியிருப்பாயா? ஆதாமும் ஏவாளும் நெடுநாளைக்கு இப்படிச் சந்தோஷமாக இருக்கவில்லை. ஏன் என்பதை இப்போது பார்க்கலாம்.
சங்கீதம் 83:17; ஆதியாகமம் 1:26-31; 2:7-25.


கேள்விகள்

  • மூன்றாம் கதையிலுள்ள படத்திற்கும் இரண்டாம் கதையிலுள்ள படத்திற்கும் வித்தியாசம் என்ன?
  • முதல் மனிதனை உண்டாக்கியவர் யார், அந்த மனிதனுடைய பெயர் என்ன?
  • ஆதாமுக்குக் கடவுள் என்ன வேலை கொடுத்தார்?
  • ஆதாமைக் கடவுள் ஏன் நன்கு தூங்க வைத்தார்?
  • ஆதாமும் ஏவாளும் எவ்வளவு காலத்திற்கு வாழ வாய்ப்பிருந்தது, அவர்கள் என்ன வேலை செய்ய வேண்டுமென யெகோவா விரும்பினார்?

கூடுதல் கேள்விகள்

  • சங்கீதம் 83:17-ஐ வாசி.கடவுளுடைய பெயர் என்ன, பூமியின் மீது அவருடைய ஒப்பற்ற ஸ்தானம் என்ன? (எரே. 16:21; தானி. 4:17)
  • ஆதியாகமம் 1:26-31-ஐ வாசி.(அ) ஆறாம் நாளில் கடைசியாக கடவுள் எதைப் படைத்தார், இந்தப் படைப்பு எவ்வாறு மிருகங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது? (ஆதி. 1:26)
    (ஆ) மனிதனுக்கும் மிருகங்களுக்கும் யெகோவா எதை ஆகாரமாக கொடுத்தார்? (ஆதி. 1:30)
  • ஆதியாகமம் 2:7-25-ஐ வாசி.(அ) மிருகங்களுக்குப் பெயர் வைக்கும்படி ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் எதுவும் உட்பட்டிருந்தது? (ஆதி. 2:19)
    (ஆ) மணமுடித்தல், பிரிந்துபோதல், விவாகரத்து செய்தல் ஆகியவை சம்பந்தமாக யெகோவாவின் கருத்தைப் புரிந்துகொள்ள ஆதியாகமம் 2:24 எவ்வாறு நமக்கு உதவுகிறது? (மத். 19:4-6, 9)

Comments