ஓர் அழகிய தோட்டம்
ஓர் அழகிய தோட்டம்
இந்தப் படத்திலுள்ள பூமியைப் பார்! அடடா, எவ்வளவு அழகாக இருக்கிறது! அதிலுள்ள பசும் புல்லையும், மரங்களையும், பூக்களையும், மிருகங்களையும் பார். யானை எது சிங்கம் எது என்று உன்னால் காட்ட முடியுமா?
இந்த அழகிய தோட்டம் எப்படி வந்தது தெரியுமா? முதலில், இந்தப் பூமியை கடவுள் நமக்காக எப்படித் தயார் செய்தார் என்று பார்க்கலாம்.
முதலாவதாக, நிலத்தின் மீது பசும் புல்லை அவர் முளைக்கச் செய்தார். பிறகு, எல்லா வகையான சிறிய செடிகளையும் புதர்களையும் மரங்களையும் உண்டாக்கினார். வளரும் இந்தச் செடிகொடிகளெல்லாம் பூமியை அழகுபடுத்துகின்றன. அதுமட்டுமா, நல்ல ருசியான உணவுப் பொருட்களையும் கொடுக்கின்றன.
அடுத்ததாக, நீரில் நீந்துவதற்கு மீன்களை உண்டாக்கினார், வானத்தில் பறப்பதற்குப் பறவைகளை உண்டாக்கினார். நாய்களையும் பூனைகளையும் குதிரைகளையும் உண்டாக்கினார்; ஆம், பெரிய மிருகங்களையும் சிறிய மிருகங்களையும் உண்டாக்கினார். உன் வீட்டுக்கு அருகில் என்ன மிருகங்கள் வாழ்கின்றன? இவற்றையெல்லாம் கடவுள் நமக்காக உண்டாக்கியதை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும் தானே?
கடைசியாக, பூமியில் ஒரு இடத்தை மட்டும் ரொம்ப ரொம்ப அழகான ஒரு தோட்டமாக அவர் ஆக்கினார். அதற்கு ஏதேன் தோட்டம் என்று பெயர் வைத்தார். அதில் எந்தக் குறையும் இருக்கவில்லை. அதிலிருந்த எல்லாமே மிக அழகாக இருந்தன. தாம் உண்டாக்கிய இந்த அழகிய தோட்டத்தைப் போலவே முழு பூமியும் ஆக வேண்டுமென்று கடவுள் விரும்பினார்.
இந்தப் படத்திலுள்ள தோட்டத்தை மறுபடியும் பார். இதில் ஒன்று மட்டும் இல்லாததாக கடவுள் கருதினார், அது என்னவென்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.
ஆதியாகமம் 1:11-25; 2:8, 9.
கேள்விகள்
- கடவுள் எப்படி இந்தப் பூமியை நமக்காகத் தயார் செய்தார்?
- கடவுள் உண்டாக்கிய விதவிதமான மிருகங்களைப் பற்றி சொல். (படத்தைப் பார்.)
- ஏதேன் தோட்டம் ஏன் விசேஷித்ததாக இருந்தது?
- இந்த முழு பூமியும் எப்படி மாற வேண்டுமென கடவுள் விரும்பினார்?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 1:11-25-ஐ வாசி.(அ) படைப்பின் மூன்றாம் நாளில் கடவுள் எதை உண்டாக்கினார்? (ஆதி. 1:12)
(ஆ) படைப்பின் நான்காம் நாளில் என்ன உண்டானது? (ஆதி. 1:16)(இ) ஐந்தாம் நாளிலும் ஆறாம் நாளிலும் கடவுள் என்னென்ன மிருகங்களை உண்டாக்கினார்? (ஆதி. 1:20, 21, 25) - ஆதியாகமம் 2:8, 9-ஐ வாசி.அந்தத் தோட்டத்தில் கடவுள் வைத்த விசேஷமான இரண்டு மரங்கள் யாவை, அவை எதற்கு அடையாளமாக இருந்தன?
Comments
Post a Comment